Showing posts with label சிவகாமி. Show all posts
Showing posts with label சிவகாமி. Show all posts

Saturday, December 29, 2012

சாதி பாலிடிக்ஸ் - காதல் திருமணம் என்ற பெயரில் ‘நாடகத் திருமணங்களை’ - சிவகாமி பேட்டி

சாதி பாலிடிக்ஸ்

‘‘தலித் எதிர்ப்பு தவிடு பொடியாகும்!’’

- சீறும் சிவகாமி
ப்ரியன்

தர்மபுரி மாவட்டத்தில் பற்ற வைக்கப்பட்ட சாதியத் தீ, இப்போது கடலூர் மாவட்டத்தையும் கலவரப் படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் தலித் அல்லாத மற்ற சமுதாயத் தலைவர்கள் (சாதிச் சங்கத் தலைவர்கள்) கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பியிருக்கிறது.  


தமிழகத்தை நூறாண்டு காலம் பின்னால் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் செயல்படுவது உண்மையிலேயே வருந்தத்தக்கது. அரசியல் நோக்கத்துக்காக தலித்துகளை எதிர்க்கும் போக்கு தவிடு பொடியாகும்," என்று சீறுகிறார் சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் ..எஸ். அதிகாரியுமான சிவகாமி.
தீண்டாமை ஒழிக்கப்பட்ட நிலையில் மகிழ்ச்சியடைய வேண்டிய தலித்துகள், பிடிக்காதவர்களைப் பழிவாங்க வன் கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொய்ப் புகார் கொடுத்து மற்ற சமூகத்தினரைத் துன்புறுத்துகிறார்களாமே?
அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசு சொன்னதற்கு அங்கே எதிர்ப்பு கிளம்பியது. அதுபோலத்தான் நமது நாட்டின் தீண்டாமை ஒழிப்பும். சமூக தளங்களில் இன அடிப்படையில் ஏற்ற இறக்கங்கள், உயர்வு-தாழ்வு, ஏழை-பணக்காரன் என்று வேறுபாடுகள் இருக்கிறவரையில் அடிமைத்தனங்களும், தீண்டாமையும் நிலவத்தான் செய்யும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்


 ஆனால் இருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் சமூகத்தில் இருக்கின்றன. பல கிராமங்களில் உள்ள இரட்டை டம்ளர் முறை தீண்டாமையின் வெளிப்பாடு இல்லையா? ஆதிக்கச் சாதிகள் தலித்துகளோடு திருமணத் தொடர்பு கூடாது என்று சொல்லுவதும் தீண்டாமைதானே! சாதியம் பல்வேறு வடிவங்களில் நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் தலித்துகள் பல தீண்டாமைக் கொடுமைகளைச் சொல்ல முடியாத வகையில் அனுபவித்து வருகிறார்கள். 20 சத தலித் மக்களுக்கு உரிய பட்ஜெட் தொகையை அரசுகள் வழங்காமலிருப்பதும் ஒருவகை தீண்டாமைதானே!

ஆண்டாண்டு காலமாக அடக்கி வைக்கப்பட்டு சமூகத்தில் மிக பலவீனமான நிலையில் இருக்கும் தலித்துகள் பழிவாங்கும் வகையில் வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படும் குற்றச்சாட்டு. அந்தக் காழ்ப்புணர்ச்சிக்குக் காரணம் ஒடுக்கப்பட்ட அந்த மக்கள் அரசு கொடுக்கும் படிப்பு, வேலை வாய்ப்பு சலுகைகளைப் பெற்று முன்னேறி வருவது தான். அடக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறுவதும், வாழ்க்கையில் உயர்வதும் ஆதிக்கச் சாதிகளுக்கு வேப்பங்காயாக இருக்கிறது.



 வன்கொடுமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறை தலித்துகள் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள் என்று சொல்வது காவல் துறையையும் கேலிக்குள்ளாக்குகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த வன்கொடுமைச் சட்டம் பயன்படுத்த வேண்டிய நிலையிலும், அதை உபயோகிக்க காவல் துறை தயக்கம் காட்டுகிறது என்பதுதான். அப்படியே வழக்குப் பதிவு செய்தாலும், இறுதி வரை நீதிமன்றத் தீர்ப்புக்கு விவகாரத்தைக் கொண்டு போனால் இடையிலேயே ஏதாவது காரணம் சொல்லி வழக்கை முடித்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தச் சட்டம் சரியாக அமல்படுத்தப்பட வில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு."
காதல் திருமணம் என்ற பெயரில்நாடகத் திருமணங்களைஎதிர்க்கிறோம்; இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறதே!
இந்தக் கோரிக்கைக்குப் படித்த ஜனநாயக எண்ணம் கொண்ட எந்தத் தலைவரும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது. பெண்களைக் கேவலப்படுத்துவது என்று சாதிச் சங்கத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெண்ணடிமை நீடிக்கக் காரணம் சாதியம்தான் என்பது சரியாகத்தான் இருக்கிறது. பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சாதிய கோட்பாடுகளுக்குள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிற நிலைப்பாடு என்பது பெண்ணடிமைத் தனத்தை நீடிக்கவே செய்யும். பதினெட்டு வயதில் நாம் பெண்களுக்கு வோட்டுரிமையே கொடுக்கும்போது அவர்கள் வாழ்வைப் பற்றி அவர்கள் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாகச் சாதித் தலைவர்கள் சொல்லுவது பெண்களை இழிவுபடுத்தும் போக்காகும்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சில ஆதிக்கச் சாதிகளில் 16 வயதில் ஒரு பெண் காதல் வயப்பட்டு கலப்புத் திருமணம் செய்யும்போது அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மீட்டெடுத்து வந்து, அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக தங்கள் சாதியில் திருமணம் செய்து வைக்கிறீர்களே! அப்போது நீங்கள் சொல்லும் வயது பிரச்னை எங்கே போயிற்று? ஒரு பெண்ணுக்கு தமக்கு விருப்பமான ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை இருக்கிறது. உண்மையில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டுமானால் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைச் சாதித் தலைவர்கள் மதிக்க வேண்டும். சாதியத்துக்கு உரம் போட பெண்களை உடல் மற்றும் மனரீதியில் பலவீனமானவர்கள் என்பது போல காட்டும் போக்கு சரியல்ல


 இவர்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளைப் போட்டாலும், இனிவரும் காலங்களில் கலப்புத் திருமணங்களைத் தடுக்க முடியாது. இந்தச் சாதித் தலைவர்கள் பெண்களின் மீதிருக்கும் அக்கறையால் கலப்புத் திருமணத்தை எதிர்க்கவில்லை. அந்தத் திருமணங்கள் சாதிய கட்டுமானங்களைத் தகர்த்தெறிகிறதே என்ற படபடப்பில்தான் இப்படிப் பேசுகிறார்கள். பெரியாரும் அண்ணாவும் சாதிய நோய்க்கு மருந்தாகச் சொன்னது கலப்புத் திருமணங்களைத்தான். இப்படிப் பெண்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் சாதித் தலைவர்களை எதிர்த்து மகளிர் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். பெண்ணடிமைத் தனத்தை வளர்த்துக் குளிர்காய விரும்பும் சாதித் தலைவர்களுக்கு சமுதாயம் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.





தலித் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களை காதல் கல்யாணம் செய்து பணம் பறிப்பதாகவும், கைவிட்டுவிடுவதாகவும் பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. சரியான புள்ளிவிவரம் தேவை. அது சரி, மற்ற சாதிகளுக்குள்ளே நடக்கும் காதல் திருமணங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கின்றன என்ற புள்ளி விவரத்தையும் எடுத்துப் பார்க்கலாமே.

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. வழிகாட்டும் உரிமை பெற்றோர்களுக்கு உண்டே தவிர, வற்புறுத்தும் உரிமை கிடையாது. ஒரு பெண், ஆணுக்கு இடையில் வரும் காதல் திட்டமிட்டு வருவதல்ல. தலித் இளைஞர்கள் நாடகத் திருமணங்கள் நடத்துகிறார்கள் என்பது கடைந்தெடுத்த அவதூறு. தலித் இளைஞர்கள்தான் மற்ற சமுதாயப் பெண்களை ஈவ் டீசிங் செய்கிறார்கள் என்பதும் சரியல்ல. இத்தகைய போக்கு எல்லா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடமும் காணப்படுகிறது என்பதுதான் சரி."


தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தும் வைக்கப்படுகிறதே?


இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொகுதிகள் மறு சீரமைப்பில், பல தொகுதிகளில் இத்தகைய மாற்றங்கள் நடந்திருக்கிறதே!"


தலித்துகளுக்கு எதிராக மற்ற சமூகத்தினரின் ஒருங்கிணைப்பு எத்தகைய தாக்கத்தை நமது கிராமப்புறங்களில் உருவாக்கும்?


பா... இழந்து போன தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த சாதியத்தைக் கையில் எடுத்திருக்கிறது என்ற உண்மை பளிச்சென மக்களுக்குத் தெரிகிறது. மக்களின் அபிமானத்தைப் பெற்ற எந்த ஒரு தமிழகத் தலைவரும் சாதிச் சங்கத் தலைவர்களின் போக்கை ஆதரிக்கவில்லை என்பதிலிருந்து, நமது சமுதாய அமைப்பில் இதன்மூலம் எந்த ஒரு தாக்கமும் இருக்காது என்பதும் புரியவில்லையா?  

கிராமப்புறங்களில் மக்கள் தனித்தனியே வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறைதான் அங்கிருக்கிறது. தற்காலிகமாக சில ஆதிக்கச் சக்திகள் தலித்துகளின் குடிசைகளை எரித்துக் குளிர்காயலாம். ஆனால் சாதியக் கட்டுமானத்தைப் பாதுகாத்து வளர்க்க, தலித்துகளை எதிர்க்கும் போக்கு நீண்ட கால நோக்கில் எடுபடாது. பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கூறும் தலைவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். அவர்கள் போடும் அரசியல் கணக்குகள் பொய்த்துப் போகும். சாதியங்களைத் துணை கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் கடந்த காலங்களில் சரிவையே சந்தித்திருக்கிறது."
இந்தப் புதிய சூழலைக் குறித்து தாழ்த்தப்பட்டவர்களில் உள்ள பள்ளர் மற்றும் அருந்ததியர் பிரிவுத் தலைவர்கள் ஆவேசம் காட்டவில்லையே?

இப்போது எங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைச் சமாளிக்கும் திறன் எங்களுக்கே இருக்கிறது. என்றாலும், உதவி தேவைப்படும் தருணத்தில் அவர்களும் களத்தில் குதிப்பார்கள்."
இன்றைய சூழலில் திராவிட இயக்கங்களின் செயல்பாடு எந்த வகையில் இருக்க வேண்டும்?
தமிழகத்தை ஆளும் வாய்ப்பு பெற, திராவிட இயக்கங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. முதலில் சாதி ஒழிப்புக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை மற்ற சமூகங்களோடு சமத்துவ நிலையில் வாழும் சூழலை உருவாக்க வேண்டும். கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் திராவிட இயக்கங்களின் போக்கு பாராட்டத்தக்கது. அதே சமயம் வன்கொடுமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் காவல் துறைக்கு உரிய பயிற்சி தேவை


 வன்கொடுமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அதற்காகச் செலவழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி நேரடியாக அவர்களுக்குச் செலவழிக்கப்படும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளையும் நில உரிமையாளர்களாக மாற்றும் வகையில் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சாதிய உணர்வுகளைக் கட்டிக் காப்பாற்றும் வகையிலும் பெண்ணடிமைத் தனத்தைக் காப்பாற்றும் வகையிலும், பெண்களின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்கள் தடுத்து நிறுத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

நன்றி - கலகி , கணேஷ்