Showing posts with label சிறப்பு பேட்டி. Show all posts
Showing posts with label சிறப்பு பேட்டி. Show all posts

Wednesday, January 13, 2016

'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதிகம் ?-சசிகுமார் சிறப்பு பேட்டி

  • இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
    இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
  • ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
    ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
சசி இப்போது சன்னாசி! தாடி, மீசை, தடாலடி பார்வை என ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக குருநாதர் பாலாவின் வார்ப்பில் கூடுதல் மிரட்டலைக் கொடுக்கிறார், சசிகுமார். மணிரத்னம் கணக்காக, படம் வெளியாகும்போது மட்டுமே தரிசனம் கொடுக்கும் சசிகுமார், ஒரு பின்னிரவு நேரத்தில் ‘தி இந்து’வுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:




பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள், இப்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறீர்கள். இந்த திருப்பம் எப்படி இருக்கிறது?


என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. ‘சேது’வில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்ட பாலா அண் ணன், ‘தாரை தப்பட்டை’யில் நாயகனாக்கி இருக்கிறார். சினிமாவில் ஒரு சிஷ்யனுக்கு குருநாதர் கொடுக்கும் பெரிய வரம் இது. என் சந்தோஷத்தையும் மனநிறைவையும் எந்த வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. ஒரு பெருமூச்சு மாதிரி எல்லா நெகிழ்ச்சியும் என் நெஞ்சுக்குள் அப்படியே இருக்கு. நம்மளோட பழக லட்சம் பேர் கிடைப்பாங்க. ஆனா, நம்மளை நெறிப்படுத்த, வார்த் தெடுக்க சிலர் வாய்க்கிறது அபூர்வம். பாலா அண்ணன் அபூர்வம். ஒரு நடிகனா அவரோட ஒவ்வொரு அசைவிலும் நிறைய கத்துக்கிட் டேன்.



‘இங்க பார்... அப்படித் திரும்பு... கண்ணை சிமிட்டு’ன்னு சொல்வார். அவர் சொன்னதை அப்படியே செய்வேன். அதை திரையில் பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறார்னு தெரியும். ‘தாரை தப்பட்டை’க்கு அண்ணன் அழைச்சப்ப ஒரு நடிகனா நான் போய் நிற்கலை. அங்கேயும் ஒரு உதவியாளராத்தான் நின்னேன். ‘நடிகன்’, ‘தயாரிப்பாளர்’ங்கிறது எல்லாம் மத்தவங்க எனக்குக் கொடுக்கிற அடைமொழி. என்னைக்குமே அவர் பின்னால கைக்கட்டி நிற்கிற, அவர் சொல்றதை முதல் ஆளா செய்யுற ‘முந்திரிக்கொட்டை’ உதவியாளன் நான். இது போதும் எனக்கு.


இளையராஜாவின் 1000-வது படத்தில் நீங்கள் ஹீரோ? இதை எப்படி பார்க்கிறீங்க?


நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் இளையராஜா சிநேகிதனா இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். அவர் சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார். சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். தலைவாழை இலை விருந்தில் ஒரு துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படத்தில் நான் இருக்கிறது சிலிர்ப்பா இருக்கு.


பாலாவின் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் இழுக்கும். அதேபோல்தான் ‘தாரை தப்பட்டை’ படமும். ‘தெரிந்தே சிக்கிட்டாரே சசிகுமார்’னு சினிமா உலகம் முழுக்க பேச்சு இருந்துச்சே?


சினிமா உலகில் ஆயிரம் பேசுவாங்க. அதே சினிமா உலகில் உள்ளவங்கதான் பாலா சார் படத்தில் ஒரு இடத்திலாவது தலை காட்ட முடியாதான்னு தவிச்சுட்டு இருக்காங்க. அவர் படத்தில் ஹீரோவாகிற வாய்ப்பு எனக்கு சீக்கிரமே கிடைச்சிடுச்சு. இதைத் தவறவிட நான் விரும்பலை. தவில், நாகஸ்வரம், டான்ஸ்னு நான் எல்லாத்தையும் மெனக்கெட்டு கத்துக்கிட்டேன். அதில்தான் கொஞ்சம் லேட் ஆனது. படம் எவ்வளவு திருப்தியா வந்துகிட்டு இருக்குங்கிறதை நேர்ல பார்த்தவன் நான்.


காலையில் ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைப்பார். ஒரு நாளைக்கு ரெண்டு ஸீன் முடியும். 85 நாளில் முடிஞ்சிருக்க வேண்டிய படம் அது. எல்லாரும் பேயா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப நானும் என்னோட ஈடுபாட்டை காட்டணும் இல்ல? அதனால ஒரு சண்டைக் காட்சியில் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன். மூட்டு நழுவி துடிச்சுப் போயிட்டேன். என் கை சரியாக நாலு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பாலா அண்ணன் காத்திருந்தார். அப்படியிருக்க, அவர்தான் தாமதம் செஞ்சார்னு எப்படி சொல்ல முடியும். ‘தாரை தப்பட்டை’ தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்.



படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப் பதற்கு வன்முறை காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். ‘சுப்பிரமணிய புரம்’ தொடங்கி ‘ஈசன்’, ‘போராளி’ என உங் கள் படங்களில் தெறிக்கும் ரத்தத்துக்கு அளவே இல்லை. இது உங்களுக்கு சலிக்கவில்லையா?


யதார்த்தம்தான் என்னோட கதை. அப்படியிருக்க நாட்டுல நடக்குற வன்முறையை மட்டும் நான் எப்படி வடிகட்ட முடியும்? தினமும் பேப்பர் படிக்கும் போது தெறிக்காத ரத்தமா என் கதையில் தெறிக்குது? நடப்பில் இல்லாத கொடூரத்தை நான் காட்டியிருக்கேனா? அப்பட்டமா நடக்குற கொலையை இன்னிக்கு சேனல் களில் நேரடியாவே காமிக்க ஆரம்பிச் சிட்டாங்க. வாட்ஸ்அப்பில் பரவுற வன் முறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் வந்திடுச்சே. அதை எப்படித் தடுப்பீங்க? வன்முறையை என் படங்களில் நான் விரும்பி வைக்கலை. விரும்பாததால்தான் வைக் கிறேன்.



நிர்பயா கொலைக் குற்றவாளி விடுதலை ஆகிறார்... பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்கள் வைரலாகின்றன‌... பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறதே... இவையெல்லாம் உங்கள் பார்வையிலோ, படைப்பிலோ வராதா?


நீங்க ‘ஈசன்’ பார்க்கலையா? தலைநகர் சென்னைக்கு வரும் ஓர் இளம்பெண் எப்படி சின்னாபின்னம் ஆகிறாங்கிறதுதான் கதை. ‘ஈசன்' வந்தப்ப ‘இப்படி நடக் குமா'ன்னு கேட்டவங்க‌, இன்னிக்கு ‘இப்படி நடக்கலாமா?’ன்னு கேட்கிறாங்க.


பெண் கள் மீதான வன்முறையும் கொடூரமும் ஒவ் வொரு இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அதில், வெளியே வர்றதை மட்டும்தான் நாம பேசுறோம். நாகரிகம் வளர்ந்த அளவுக்கு நம்மகிட்ட நல்லெண் ணம் வளரலை. நிர்பயா வ‌ழக்கில் மட்டும் இல்லை... பெண்களுக்கு எதிரான அத்தனை பிரச்சினையிலும் மகளிர் அமைப்புகள் மட்டும்தான் இறங்கிப் போராடுறாங்க. இது மகளிருக்கான பிரச்சினை மட்டும்தானா? மனுஷங்களா பிறந்த அத்தனை பேரும் களமிறங்கிப் போராட வேண்டிய பிரச்சினை இல்லையா?


நன்றி - த இந்து

Friday, November 20, 2015

ஸ்ரீதிவ்யாவுக்கும் ஆனந்திக்கும் போட்டி! - ஆனந்தி பேட்டி

ஆனந்தி
ஆனந்தி


‘விசாரணை’, ‘பண்டிகை’, ‘சாட்டை’ எம்.அன்பழகன் இயக்கத்தில் புதிய படம் என்று தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக இருக்கிறார் நடிகை ஆனந்தி. ‘தி இந்து’வுக்காக அவரை சந்தித்தோம்.


வெற்றிமாறன் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘விசாரணை’ திரைப்படம் வெனீஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளதே?

‘விசாரணை’ படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம்தான். அதனால் என் அம்மாகூட ஆரம்பத்தில் அதில் நடிக்க வேண்டாம் என்று தடுத்தார். எனக்கு வெற்றிமாறன் சாரின் படங்கள் மீது தனி பிரியம் உண்டு. என்னை தமிழில் அறிமுகப்படுத்திய பிரபுசாலமன் சாரிடம் இந்தப் படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டேன். அவர்தான், ’சின்ன ரோல் என்றாலும் பரவாயில்லை. மிஸ் பண்ணாமல் நடி’ என்று அறிவுரை கூறினார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் ‘விசாரணை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.


‘விசாரணை’ படத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்ததால் தாய்மொழியான தெலுங்கிலேயே டப்பிங் பேசியுள்ளேன். தமிழ் படத்தில் என் சொந்தக் குரலில் டப்பிங் பேசியது இதுதான் முதல்முறை. அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரஜினி சார் படத்தை பாராட்டியதாக சொன்னார்கள். அப்படி பாராட்டப்பட்ட ஒரு படத்தில் என் பங்களிப்பு இருப்பது பெருமையாக இருக்கிறது. பிரபுசாலமன், வெற்றிமாறன், சற்குணம் போன்ற இயக்குநர்கள்தான் என் ஆசிரியர்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன்.


பிரபுசாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில், ‘கயல்’ நாயகன் சந்திரனுடன் ஜோடி சேர்ந்து நீங்கள் நடிக்கும் படம் எந்த அளவில் உள்ளது?

படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அது த்ரில்லர் படம். இயக்கு நர் அன்பழகன் மிகவும் இனிமை யானவர். படப்பிடிப்பில் திட் டவே மாட்டார். இதில் சின்னி ஜெயந்த் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இட்லி கடை நடத்தும், எளிமை யான வாழ்க்கையை பிரதி பலிக்கும் கதாபாத்திரம் எனக்கு. ஹீரோ சந்திரன், சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரீஸ், நான் என்று எங்கள் 5 பேரை சுற் றித்தான் கதை நகரும். பிரபு சாலமன் தயா ரிப்பு என்பதால் அவரது படங்களின் தனித்துவம் இதிலும் இருக் கும். என் கேரக்டர் தனித்து தெரியும். அதேபோல கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துவரும் ‘பண்டிகை’ படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்து வருகிறேன். என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்ற கதாபாத்திரத்தை இதில் செய்திருக்கிறேன்.


படிப்பு முடிந்ததா?

எதற்காகவும் படிப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன். பிசினஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். படிப்பு பிடிக்கும் என்பதற்காக ‘ஷூட்டிங் நேரத்தில்கூட படிப்பீர்களா’ என்று கேட்கக்கூடாது. தேர்வு நேரத்தில் வீட்டில் படித்தாலே நிறைய மதிப்பெண்களை அள்ளலாம்.


சென்னை மழை எல்லோரையும் கலங்கடித்து விட்டதே?

சென்னையை இவ்வளவு சோகமாக பார்க்க பிடிக்கவில்லை. சீக்கிரமே எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளிடம் பிரார்த்திப்போம். மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்ததை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.


‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஏற்று நடித்தீர்களா?

இயக்குநர் அந்தப் படத்தின் கதையை சொல்லும் போது துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்று தான் விளக்கம் கொடுத்தார். ஆனால், படத்தில் இப்படி இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதை எல்லாம் சொல்லவில்லை. நல்லவேளையாக படம் பாசிடிவாக சென்றதால் நான் தப்பித்து விட்டேன். இனிமேல் மிகவும் ஆராய்ந்து கதை கேட்க வேண்டும் என்று எனக்கு உணர்த்திய படம் அது. இனி அதுபோன்ற கதைகளில் நடிக்க மாட்டேன்.


கோலிவுட்டில் உங்களுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும்தான் போட்டி என்று சொல்கிறார்களே?

போட்டிகள் இருக்கத்தானே வேண்டும். அது தவறான விஷயங்களுக்காக இருந்துவிடக்கூடாது. நானும், திவ்யாவும் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறோம். அவர் எனக்கு நல்ல தோழி. இப்போது தமிழில் கார்த்தி உள்ளிட்ட முக்கியமான ஹீரோக்களோடு அவர் நடித்து வருகிறார். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி உருவானால் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வேன்.


தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தெலுங்கில் நடிப்பதை நிறுத்திக்கொண்டீர்களா?

தமிழ்ப் படங்கள் அளவுக்கு இயல்பான, நேர்த்தியான கதாபாத்திரங்கள் தெலுங்கில் அமைவதில்லை. எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்கள் தமிழில்தான் அமைகிறது. அதையே தொடர்ந்து செய்வோம் என்பதற்காகவே இங்கே கதைகளை கேட்டு நடித்துவருகிறேன். இதுபோன்ற கதாபாத்திரங்கள் அங்கு அமைந்தால் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம்

thanks the hindu

Wednesday, September 02, 2015

அதிரடி - வில்லன் மன்சூர் அலிகான் ராதாரவிக்கு வில்லன் ஆன கதை -மன்சூர் அலிகான் சிறப்பு பேட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் கடந்த பல ஆண்டுகளால் நீடித்து வந்த சம்பளச் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் “சிறு முதலீட்டுப் படங்களுக்கு பெப்சியின் சம்பள விகிதங்கள் கட்டுப்படியாகாது; அதனால்தான் டாப்சி என்ற புதிய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவின் 24 பிரிவுகளுக்கும் வேலை செய்ய எங்கள் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள்” என்று கூறி அதிரடி கிளப்புகிறார் நடிகர் மன்சூர் அலிகான். ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:
நீங்கள் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
சினிமா வழியாகப் பல துணிச்சலான கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. இதுவரை 200 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் ஐந்து படங்கள் வெள்ளி விழா கண்டிருக் கின்றன. 90 படங்கள் நூறு நாட்கள் ஓடியிருக்கின்றன. என்னைத் தேடி வந்த படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதேபோல மலிவான விலைக்கு நான் நடித்ததில்லை.11 படங்களை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறேன்.
நான் இயக்குநர், தயாரிப்பாளரின் நடிகன்.படப்பிடிப்பில் வசதி வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததில்லை. நான் நடிக்கும் ஒரு காட்சியை ஒரே ஷாட்டாக எடுத்தாலும் அதை ஓகே செய்துவிடுவேன். என்னால் ரீடேக் என்ற தலைவலியே இருந்ததில்லை. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அதில் ஒரு காட்சி. தலையால் முட்டி உடைத்து கதவைத் திறந்துகொண்டு போய் நடித்தேன். ஒரே ஷாட்தான். பெப்சி ஆட்களே கை தட்டினார்கள். எதற்கும் தயங்கிக்கொண்டிருந்தால் நடிகனாக இருக்க முடியாது.
சினிமாவில் நீங்கள் எதற்குமே தயங்கியதில்லையா?
கொள்கைக்கு ஆபத்து வரும்போது தயங்கியிருக்கிறேன். ஒரு படத்தில் சோற்றுப் பானையைக் காலால் உதைக்கச் சொன்னார்கள். முடியாது என்று அந்தப் படத்திலிருந்தே வெளியேறினேன். அதேபோல் அம்மாவை அடிப்பதுபோல் ஒரு காட்சி. வில்லன் வேஷம் என்றாலும் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் வில்லனாக வேறொரு நடிகரைப் போட்டு எடுத்தார்கள்.
இப்படி எனக்கென்று இருக்கும் கொள்கைகளை வாய்ப்புக்காக நான் விட்டுக்கொடுத்ததில்லை. என்னைத் தேடி நல்ல வேஷங்கள் வரவில்லையே என்ற மனக்குறை என்னை இன்றும் வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. வணங்காமுடியாக இருப்பதால் வாழ்வில் இழப்புகள் இருந்தாலும் சுயமரியாதை மிச்சமிருப்பதுதான் ஒரே லாபம்.
நீங்கள் சினிமாவுக்கு வர யார் காரணம்?
எனது அண்ணன் முகமது அலிதான் காரணம். அவர் ஒரு கலை வித்தகர். எனது சொந்த ஊரான பள்ளப்பட்டியில் தற்போது வசித்துவருகிறார். அவர்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷன். எனது அண்ணன்கள் மகாராஷ்டிராவில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது நான் ஆறாம் வகுப்பு படித்தேன். அவர் பேச்சுப் போட்டி, மோனோ ஆக்டிங். கட்டுரைப் போட்டி எல்லாவற்றிலும் முதல் பரிசு வாங்குவார். அவரைப் பார்த்து நானும் முதல் பரிசுகளை வாங்குவேன். ஸ்கூல் நாடகத்தில் தங்கப் பதக்கம் சிவாஜியாக நடிப்பார். சினிமாவில் நடிக்க முயற்சித்தது அவருக்குக் கைகூடாமல் போய்விட்டது. நான் முயற்சித்தேன். எனக்கு வாய்ப்பு அமைந்துவிட்டது.
முன்புபோல போராட்டம், அரசியல் என்று இறங்குவதில்லையே?
சமூக நலன் பற்றி நான் பேசினால் அல்லது தெருவில் இறங்கிப் போராடினால் ஆட்சியதிகாரத்தில் யார் இருந்தாலும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. இவனை உள்ளே தூக்கிப் போடலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்று வந்துவிடுகிறார்கள். இதனாலேயே நான் போராடுவதையும் அரசியல் ஈடுபாட்டையும் நிறுத்திக்கொண்டுவிட்டேன். கடைசியாக என் மீது நில மோசடி வழக்கு ஒன்றைப் போட்டார்கள். அதில் இதுவரை என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? நானும் அந்த வழக்கை விடுகிறமாதிரி இல்லை.
டாப்சி என்ற பெயரில் தனியாகச் சங்கம் தொடங்குகிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது?
டாப்சி தொடங்கியது காலத்தின் கட்டாயம் என்று சொல்ல வேண்டும். எங்கள் சங்கத்தின் பெயர் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியக் கூட்டமைப்பு. இதன் சுருக்கம்தான் டாப்சி. அடிப்படையில் நான் பெப்சி உறுப்பினர். இசைக் கலைஞர்கள் சங்கம், டான்ஸர்ஸ் யூனியன் என்று பெப்சியுடன் இணைந்திருக்கும் பல சங்கங்களில் நான் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக உறுப்பினர். அப்படியிருந்தும் பெப்சியின் மீது எனக்குக் கோபம் வரக் காரணம் ஒரு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளரின் வலியை பெப்சி புரிந்துகொள்ளாததுதான் காரணம்.
நான் தற்போது ‘அதிரடி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன் இந்தப் படத்தில் ராதாரவியை வில்லனாக நடிக்க அழைத்திருந்தேன். அவரும் வந்து நடித்துக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது நாள் சில பிரச்சினைகள் வந்தன. “எனது காஸ்டுயூமருக்கும் மேக் அப் மேனுக்கும் தனித்தனியே கார் வேண்டும்” என்று கேட்டார். நான் முடியாது என்றேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. எத்தனை பேருக்கு வேலை கொடுக்க வேண்டுமோ அதற்குக் குறைவான ஆட்களைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் அலுவலக ஆட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். நான் பத்துக் கோடியில் படமெடுப்பவன் இல்லை என்று வாக்குவாதம் செய்தேன்.
ஆனால் அவர்கள் அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நான் இரண்டுமாத இடைவெளிக்குப் பிறகு பெப்சி ஊழியர்களை அழைத்து, திரும்பவும் படப்பிடிப்பைத் தொடங்கினேன். ஆனால் நான் படப்பிடிப்பில் ஊழியர்களைத் திட்டியதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்டால்தான் வருவோம் என்று படப்பிடிப்புக்கே வராமல் போய்விட்டார்கள். ஒரு சிறு தயாரிப்பாளரின் வலி அவர்களைப் பொருத்தவரை வசையாகத் தெரிகிறது.
நான் எவ்வளவோ சமாதானதுக்கு முயன்றேன். அவர்கள் யாரும் காதுகொடுக்கிற மாதிரி தெரியவில்லை. இவர்களோடு இனியும் வேலை செய்ய முடியாது என்றுதான் சொசைட்டி ஆக்டில் தனியே தொழிலாளர் சங்கம் தொடங்கினேன். எங்களது டாப்சி சங்கத்திலிருந்து தற்போது சிறு படங்களுக்கு நிறைய தொழிலாளர்கள் சென்று வேலை செய்கிறார்கள். எனது படத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.
அதிரடி படத்தைப் பற்றிக் கூறுங்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தப் படத்துக்கு கடந்த 2013-ல் திரைக்கதை எழுதினேன். கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்களில் பார்க்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் சிரிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதுவுக்கு அடிமையாகி உயிரை விட்டவர்கள். இந்த உண்மையை போஸ்டருக்கு உரியவரின் வீடு தேடிப் போனால் நீங்கள் உணர்வீர்கள். இதை வைத்துத்தான் அதிரடி படத்தின் கதையை எழுதினேன். இது மதுவுக்கு எதிரான படம். இதில் நாயகன் என்ன மாதிரியான அதிரடிகளைச் செய்கிறான் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


நன்றி - த இந்து

நைட் ஷோ' - மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்' படத்தின் மறுஆக்கம்தானா? - எடிட்டர் /இயக்குநர் ஆண்டனி சிறப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபலமான படத்தொகுப்பாளர்களில் ஒருவர் ஆண்டனி. தற்போது அவர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரிடம் இயக்குநர் அனுபவத்தைக் கேட்டபோது, எடிட் செய்ததுபோலக் கச்சிதமான பதில்கள் வந்து விழுந்தன.
மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்' படத்தின் மறுஆக்கம்தான் நீங்கள் இயக்கியிருக்கும் 'நைட் ஷோ' என்று தெரியும். இப்படம் உருவான விதத்தைப் பற்றி சொல்லுங்கள்.
‘ஷட்டர்' படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் விஜய் வாங்கி வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஒருநாள் அவருடைய படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தபோது, “நீங்க படம் இயக்குறீங்களா?” என்று கேட்டார். இவ்வளவு படங்கள் எடிட் பண்ணிட்டோம், இயக்குநர் படுற கஷ்டத்தை நாமளும் பட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து “சரி” என்றேன். உடனே 'ஷட்டர்' ரீமேக் என்றார், “நானும் பார்த்திருக்கிறேன், எனக்கு ரொம்ப பிடித்த படம்” என்று ஆரம்பித்த படம்தான் 'நைட் ஷோ'.
சத்யராஜிடம் பேசுவதற்கு மட்டும்தான் நான் இயக்குநர் விஜயுடன் சென்றேன். மற்ற நடிகர்கள், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பார்த்தது இயக்குநர் விஜய்தான். நான் தினமும் காலையில் போய் இன்றைக்கு என்ன காட்சி எடுக்கிறோம் என இயக்கிட்டு வருவேன் அவ்வளவுதான்.
முதல் படமே மறுஆக்கம் பண்ணலாம் என்று தோன்றியது ஏன்?
ரீமேக் படமாக இருந்தாலும் நடிகர்களிடம் அந்தப் படத்தைப் போலவே வேலை வாங்க வேண்டும். முதல் படத்தை ஏற்ககெனவே ஹிட் அடிச்ச படத்தோட ரீமேக்காக பண்ணுவது சேஃப்டி என்றுகூடச் சொல்லலாம்.
இயக்குநர் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்..
எடிட்டிங்கில் எப்போதும் ஏ.சி. அறையிலேயே உட்கார்ந்திருப்பேன். இயக்குநரானதும் முதல் நாள் காலை 7:30 மணிக்குப் படப்பிடிப்பு தளத்துக்குப் போனேன். படப்பிடிப்புக்கு அப்பப்போ போயிருக்கிறேன். ஒருமுறை நடித்தும்கூட இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தோளில் பாரமில்லை. இயக்குநராகப் படப்பிடிப்பு தலத்துக்குப் போனவுடன் தான் கேரவாவேன், நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள் என மொத்த பாரமும் தெரிந்தது. இவ்வளவு பேரிடம் நாம்தான் வேலை வாங்கப் போகிறோமா என்று தயக்கம் இருந்தது. முதல் ஒரு இரண்டு மணி நேரம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதற்கு பிறகு ஒன்றும் தெரியவில்லை.
உங்களது இயக்குநர் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
நான் வெளிப்படையாப் பேசக் கூடியவன். அவர்கள் படங்கள் என்னிடம் வரும்போது இந்தக் காட்சி வேண்டாம், அந்தக் காட்சி வேண்டாம் என்று வெட்டிவிடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு பண்ணி எடுத்தோமே என்று இயக்குநர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒரு நிலை இருக்கும். அப்போது சில இயக்குநர்கள் எல்லாம் “வாடி... நீ படம் இயக்குவேல்ல அப்போ தெரியும் வலி” என்று கிண்டல் பண்ணுவார்கள். இப்போது தெரிகிறது ஒரு இயக்குநருடைய வலி. நான் இயக்கிய பல காட்சிகளை, நல்லாயில்லை என்று தூக்கி எறிந்தேன். கெளதம் மேனன் என் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு எடிட்டராக மன அழுத்தம் ஏற்படும்போது எப்படி அதிலிருந்து விடுபடுகிறீர்கள்?
முதல் விஷயம், நான் தொடர்ச்சியாகப் பணியாற்ற மாட்டேன். கொஞ்சம் நேரம் எடிட் பண்ணுவேன், பிறகு படத்தின் இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்களோடு கேரம் போர்டு ஆடுவேன். இல்லை என்றால் அரட்டை அடித்துக்கொண்டிருப்பேன். கொஞ்சம் நேரம் கழித்து போய் 3 காட்சிகள் எடிட் பண்ணுவேன். மதியமாகிவிடும், இயக்குநருக்கு நானே சமைத்துப் பரிமாறுவேன். அப்புறம் ஒரு மணி நேரம் ரெஸ்ட், பிறகு எடிட் பண்ணுவேன்.
3 மணி நேரம் கதை சொல்லுதல் என்பது போய், 2:15 மணி நேரத்தில் கதை சொல்லும் முறை வந்துவிட்டது. ஒரு எடிட்டராக இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இப்போது உலகமே ரொம்ப பிஸியாக மாறிவிட்டது. ஒரு ரசிகனோட பார்வையில் உட்கார்ந்தால், படம் சீக்கிரமே முடிந்துவிட்டதே என்று தோன்ற வேண்டும். நான் எடிட் பண்ணிய படங்களே இந்த நேரத்தை தாண்டியிருக்கிறது, காரணம் கதைதான். இது பெரிய கதை, ஆகையால் படம் நீளமாக இருக்கட்டும் என்று இயக்குநர் விரும்பும்போது அதைச் செய்துகொடுக்க வேண்டியது எடிட்டரின் பணி. பெரிய கதையில் குறைக்க வேண்டும் என்று இரண்டு, மூன்று காட்சிகளைத் தூக்க முடியாது. சில காட்சிகளைக் தூக்கினால் படத்தின் கதையே மாறிவிடும்.
இயக்கமா, எடிட்டிங்கா? இனி எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?
எனது முக்கியமான பணி எடிட்டிங்தான். சின்னக் கதை, 30 நாள் படப்பிடிப்பு என்று வரும்போதுதான் இயக்கப் போவேன். எனது அடுத்த படத்தை இன்னும் நான் யோசிக்கவில்லை.
ஆண்டனி


நன்றி-த இந்து

Tuesday, July 14, 2015

முந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்படி? - ஊர்வசி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மாவாக வலம் வந்துகொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் எங்கே போனார் என்று தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நகைச்சுவை கொப்புளிக்கும் அம்மாவாக அதிரடி கிளப்பிவருகிறார் ஊர்வசி. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் வலம் வரும் ரகசியம் என்ன?
குடும்பமும் எனக்கு அமைந்த சூழ்நிலையும் முக்கியக் காரணம். எனது கணவர் சிவப்பிரசாத் தரும் ஊக்குவிப்பு இதில் முக்கியமானது. அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். என் மகனுக்கு ஒரு வயது ஆகிறது.
இஷான் பிரஜாபதி என்று சிவபெருமானின் பெயரை வைத்திருக்கிறோம். நீலகண்டன் என்று அழைத்து அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அவனை விட்டுவிட்டுப் படப்பிடிப்புகளுக்குச் செல்ல நான் விருப்பமில்லை. மகனையும் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் செல்லக் கணவர் அனுமதித்தார். அதன் பிறகு தொடர்ந்து நடித்துவருகிறேன்.
சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய பாராட்டு எது?
உத்தம வில்லன் படத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகரின் மனைவியாக நடித்தேன். அந்தப் படத்திற்காகப் பாராட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேர்மாறாக போகுமிடமெல்லாம் “நீங்க வசந்தோட அம்மாவா கலக்கீட்டிங்க. உங்களாலதான் இதுமாதிரி கேரக்டர்ஸ் பண்ண முடியும்” என்று ஓடிவந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள். அப்போதுதான் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் வீச்சை உணர்ந்துகொண்டேன்.
அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அதில் வந்த அம்மா கதாபாத்திரம் எனக்குச் சட்டென்று பிடித்துப்போனது. காரணம் அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்காகவே தங்களை அறிவாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவர்கள். பொதுவாக சினிமாவில் வரும் அம்மா கதாபாத்திரம் என்பது மகனின் காதலுக்கு ஆதரவு கொடுக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அப்படியே தலைகீழ். மகனின் அறிவியல் மூளைக்கு ஈடுகொடுக்கும் அந்தத் தாய் அவனுக்கு இணையாக அறிவியல் வார்த்தைகளையும் விஷயங்களையும் பேசியபோது, “அட! இந்த மாதிரி அம்மாக்கள் எவ்வளவு பேரை நாம பார்க்கிறோம்” என்று எனது கதாபாத்திரத்தை நெருக்கமாக உணர்ந்ததால் கிடைத்த வெற்றி இது.
முந்தானை முடிச்சு படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் படத்தில் நான் ஏற்ற பரிமளம் கதாபாத்திரம்தான் சினிமாவில் எனது பாதையைத் தீர்மானித்தது. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் தியாகம் என்று வயதுக்கு மீறிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கதாபாத்திரம் அது. என்ன வேடம் கொடுத்தாலும் இவர் தாங்குவார் என்ற பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதுவே ‘ஒருகை ஓசை’ படத்தில் வந்த சோகமான அஸ்வினியாக நான் முதலில் அறிமுகமாகியிருந்தால், முந்தானை முடிச்சு மாதிரி படம் பண்ண எனக்குப் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். ரசிகர்கள் நம்மை கதாபாத்திரங்களாகவே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் கிராமப் பகுதிகளுக்கு படப்பிடிப்புக்குச் சென்றால் “பச்சக் குழந்தையைப் போட்டு இப்படித் தாண்டிட்டியேம்மா...!? அந்தக் குழந்தை இப்போ நல்லா இருக்கா? ” என்று 30 வருடங்களுக்குப் பிறகு கேட்டவர்களும் உண்டு.
நீங்கள் ஏற்கும் அம்மா கதாபாத்திரங்கள் மீது நகைச்சுவையின் நிழல் படிந்துவிடுவதற்கு என்ன காரணம்?
நான் மட்டுமே காரணம். ஒரு பெண் நடிகர் நிஜ வாழ்க்கையில் தாயாக மாறிய பிறகு அவளுக்கு சினிமாவில் கிடைக்கும் அதிகபட்ச புரமோஷன் அம்மா கேரக்டர்கள்தான். அக்கா அண்ணி எல்லாம் நடுவில் வரலாம். ஆனால் நிரந்தரமான இடம் என்பது அம்மாதான். அந்த அம்மாவுக்கான பாவம் என்ன என்பதை நமது கலாச்சாரம் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருக்கிறது. புருஷனுக்காக அழணும், குழந்தைகளுக்காக உழைக்கணும்.
அவ்வளவுதான். இதிலிருந்து மாறுபடுவதற்கு ஒரே வழி அம்மா கதாபாத்திரத்தில் நகைச்சுவையை இழையோடச் செய்வதுதான் என்று நினைத்தேன். இளம் கதாநாயகியாக நடித்துவந்த காலத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கொஞ்சம் நகைச்சுவையைக் கலக்க ஆரம்பித்தேன். அதுவே எனக்கு முத்திரையாகிவிட்டது. அதையே அம்மா கதாபாத்திரங்களுக்கும் இடம்மாற்றினேன்.
இன்றைய அம்மாக்கள் கணவன், குழந்தைகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக சிரிப்பதையே மறந்துகொண்டு வருகிறார்கள். எனது கதாபாத்திரங்களாவது சிரிப்பை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும் என்றுதான் நான் நகைச்சுவையை விட மறுக்கிறேன்.
25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்த பல ஆண் நடிகர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும்போது உங்களைப் போன்ற பெண் நடிகர்களின் சாதனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஏனென்றால் சினிமா தொடங்கியது முதலே ஆண்களின் கையிலிருக்கும் ஒரு கலை. அதில் பெண் என்பவளுக்கு எப்போதுமே இரண்டாவது இடம்தான். சினிமாவில் ஆண்களின் உழைப்பில் பெண்கள் பங்கேற்றுக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். அதேபோல ஆண்களுடைய விழாக்கள் நடத்தும்போதும் அங்கே அலங்கரிப்புக்காக நிற்கிறவர்கள் பெண்கள். இந்தப் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்களது சாதனைகள் நினைத்துப் பார்க்கப்படும்.
உங்களை பாதித்த கதாநாயகிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?
என்னை யாரும் பாதிக்கவில்லை. ஆனால் பலரை மனதார ரசித்திருக்கிறேன். அந்த வரிசையில் சாவித்ரி அம்மாதான் எனக்கு மிகவும் பிடித்தவர். மனோரமா ஆச்சி. சுகுமாரி, ராதிகாவை ஆல்ரவுண்டர் என்ற வகையில் மிகவும் பிடிக்கும், அதேபோல் சரிதா, ஸ்ரீதேவி. பானுப்ரியா, ரேவதி ஆகியோரை தனித்து முத்திரை பதித்தவர்கள் என்பேன்.
உங்கள் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனும் நீங்களும் தற்போது நண்பர்களாக இருக்கிறீர்களா?
கிடையவே கிடையாது. கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரு கட்டத்துக்குப் பிறகு முன்னாள் கணவனும் மனைவியும் இன்னாள் நண்பர்கள் ஆகிவிடுவது யதார்த்தமானது. ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை. என்னை எதிரியாக நினைத்துதான் பிரிய முடிவுசெய்தார். எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பு உண்டாக்கிய பிறகே என்னைப் பிரிந்தார்.
என் மகளின் நலனுக்காக அவர் மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்புக்காக கேரளா செல்லும்போதெல்லாம் என் மகளுடன் தங்குவேன். தினசரி அவளுடன் போனில் பேசாவிட்டால் எனக்கு அந்த நாள் ஓடாது.
சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த சர்ச்சையான செய்தி மற்றும் வீடியோ பற்றி எதுவும் கூற விரும்புகிறீர்களா?
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரவுபகலாக நடந்த படப்பிடிப்பிலிருந்து அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு ஓடோடி வந்தேன். கொடுத்த தலைப்பில் சரியாகப் பேசினேன். அந்த நேர்மைக்குக்கூட இன்று மதிப்பில்லை. இதைத் தவிர இப்போதைக்கு நான் எதையும் கூற விரும்பவில்லை.
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க விரும்பும் எவரும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அழுக்குகளை முதலில் களைந்துவிட்டு வரட்டும். இது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்.


thanx - the hindu

Saturday, July 04, 2015

புலி- கலக்குமா? - இயக்குநர் சிம்புதேவன் சிறப்பு பேட்டி

  • ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
    ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
ஒரு இயக்குநருக்கு, என்ன தேவையோ, அது கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். வலிந்து பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்று முயற்சித்தால் தப்பாகத் தெரியும். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அது படத்தில் இருக்கும் என்று வார்த்தைகளில் நம்பிக்கையை உரித்தார் விஜய் நடித்துவரும் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருந்தவருடன் உரையாடியதிலிருந்து…
‘புலி' படத்தின் தொடக்கம் எப்படி அமைந்தது?
‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் வெளியான சமயத்தில் விஜயைச் சந்தித்து இக்கதையைக் கூறினேன். கதையைக் கேட்ட உடனே பிடித்திருக்கிறது, உடனே தொடங்கலாம் என்றார்.
படத்தின் நாயகன் விஜயைத் தவிர ஸ்ரீ தேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, சத்யன், பிரபு, விஜயகுமார் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதே போல படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்பாகக் கற்பனை எப்படிக் காட்சியாக வர வேண்டும் என்பதை வடிவமைத்துவிட்டேன். இதுபோன்ற படங்களில் இயக்குநருக்குப் போதிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். எனது கற்பனையை சரியாகத் திரையில் கொண்டுவருவதற்கு அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்களின் படப்பிடிப்புக்குக் காலவரையின்றி அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் அனைத்தையுமே சரியாக முன்பே திட்டமிட்டுவிட்டதால், தொடர் படப்பிடிப்பு மூலமாகக் குறைவான நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம்.
‘புலி' படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் வரலாறுப் படம்போல் தெரிகிறதே?
இப்படத்தை ஒரு ஃபாண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் என்று கூறுவேன். போரும் காதலும் கலந்த கதை. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் வகையில்தான் இப்படத்தின் கதையை நான் வடிவமைத்திருக்கிறேன். இக்கதை ஒரு கற்பனைதான். எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமலும், புதிதான ஒரு உலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது உறுதி. இது ஒரு புதுமையான களம், அதில் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக உங்களின் திட்டமிடல் என்ன?
இப்படத்தை இடைவெளியின்றி முடித்திருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக, ‘புலி' படத்திற்கான கிராஃஃபிக்ஸ் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இப்படத்தின் கதைக்களத்தைக் காட்டுவதற்கு கலை இயக்குநர் முத்துராஜ், ‘மகதீரா', ‘நான் ஈ' உள்பட பல படங்களில் பணியாற்றிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரது பணிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
செட் தவிர காடு, மலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அதற்காக கேரளம், ஆந்திரம், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.
2014 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால், அதற்கு முன்பே ஒவ்வொரு காட்சியும் எப்படி வர வேண்டும் முன்னதாகத் தீர்மானித்துவிட்டதால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் மிகவும் எளிதாக வேலை நடந்தது.
முதல் முறையாக விஜயுடன் பணியாற்றிய அனுபவம்..
முதல் முறையாக ஒரு முன்னணி நாயகன், ஒரே படத்தில் நிறைய நடிகர், நடிகைகள் என்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது பொறுப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் விஜயும் தனது கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து செயல்பட்டார்.
சண்டைக் காட்சிகள், உடைகள் என இப்படத்தில் விஜய் நிறைய காட்சிகளுக்கு அதிக உழைப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக வாள் சண்டை கற்றுக்கொண்டார். காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியபோது மாலை படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து ஊருக்குள் சென்று தங்கி, திரும்பி வர தாமதமாகும் என்பதால் பக்கத்து கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கினோம். விஜய் சாருக்கு தனியாக ரூம் போடப்பட்டது. ஆனால், வேண்டாம் என்று மறுத்து அவரும் எங்களுடனேயே 40 நாட்கள் தங்கிவிட்டார். பெரிய நடிகர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். கதையைக் கேட்டவுடன் என்ன சொன்னார்?
இக்கதையை நான் எழுதும்போதே, அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். மும்பையில் போய் கதை கூறும்போது, மிகவும் தயக்கத்துடன்தான் கதையைக் கேட்க ஆரம்பித்தார். கதையைக் கேட்ட உடனே ‘ரொம்ப நல்லாயிருக்கு, கண்டிப்பாக பண்ணுகிறேன்’ என்று தெரிவித்தார்.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் வந்தன, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஸ்ரீ தேவி என்னிடம் கூறினார். ஸ்ரீ தேவியைத் தமிழ்த் திரையில் எதிர்பார்க்கும் அனைவருக்குமே இப்படம் உற்சாகம் தரும்.
‘புலி' படத்தின் புகைப்படங்கள், வீடியோ முன்னோட்டம் என அறிவித்த நாளுக்கு முன்பே இணையத்தில் வெளியானது பரபரப்பைக் கிளப்பியதே?
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நமக்கு எப்படி நண்மையாக அமைகிறதோ அதேபோலப் பல பின்னடைவுகளுக்கும் வழிகோலுகிறது. அப்படித்தான் இதுபோன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போதுகூட இது தொடர்பான விஷயங்களில் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என நிறைய மாற்றங்களைப் படக் குழுவில் கொண்டுவந்திருக்கிறோம். இனிமேல் இது தொடர்பாக எதுவும் நடக்காது, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகிலும் நடக்காது.


நன்றி -த இந்து

Sunday, June 28, 2015

பாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு!- இயக்குநர் ஜித்து ஜோசப் சிறப்பு பேட்டி

  • படம்: எல். சீனிவாசன்
    படம்: எல். சீனிவாசன்
மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் உடனுக்குடன் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது த்ரிஷ்யம்.
அந்தப் படத்தின் இந்தி, தமிழ் மறுஆக்கங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. 39 நாட்களில் தமிழ் மறுஆக்கத்தை இயக்கி முடித்திருக்கிறார் அதன் இயக்குநர் ஜித்து ஜோசப். ‘தி இந்து’ தமிழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
மலையாளத்தில் 'த்ரிஷ்யம்', தமிழில் 'பாபநாசம்' என்ன மாற்றம் செய்திருக்கிறீர்கள்?
கதையில் பெரிய மாற்றங்கள் எதுவுமே செய்யவில்லை, செய்யவும் முடியாது. படத்தில் வரும் குடும்பம் சம்பந்தமான காட்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கிறோம். மலையாளத்தில் கிறித்துவ மதப் பின்னணியில் அமைந்திருந்தது. தமிழில் வேறொரு சமுதாயத்தின் பின்னணியில் அமைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் இவ்வளவு ஊர்கள் இருக்கும்போது 'பாபநாசம்' பின்னணியில் இப்படத்தை இயக்கக் காரணம் என்ன?
கமல்ஹாசன் நூற்றுக்கணக்கான படங்களில் பல்வேறு வட்டார மொழிகளில் பேசி நடித்திருக்கிறார். ஆனால், திருநெல்வேலி வட்டார மொழி பேசி அவர் நடித்ததில்லை. அதுமட்டுமன்றி, ‘த்ரிஷ்யம்' என்ற பெயரில்தான் மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகியிருக்கிறது.
அவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும்போது ‘பாபநாசம்' ஊரைப் பற்றிச் சொன்னார்கள். ‘பாவத்தைத் தொலைக்கும் இடம் - பாபநாசம்' என்றார்கள். அந்தப் பெயருக்கும் கதையின் கருவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதால் ‘பாபநாசம்' என்ற தலைப்பை உடனே வைத்து, அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.
மோகன்லால், கமல் ஹாசன் எப்படி ஒப்பீடு செய்வீர்கள்?
இரண்டு மொழிகளிலும் இரண்டு ஜாம்பவான்கள். இருவரையும் ஓப்பீடு செய்வதே தவறு. இருவருக்குமே தனித்துவம் உள்ளது. ஜார்ஜ் குட்டி என்ற வேடத்துக்கு ஏற்ப மோகன்லாலும், சுயம்புலிங்கம் என்ற வேடத்துக்கேற்ப கமலும் அவர்கள் பாணியில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு கொஞ்சம் உணர்ச்சிமிகு காட்சியை சேர்த்திருக்கிறேன். அது தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழில் ‘த்ரிஷ்யம்' என்கிற கதையை கமல்ஹாசன் இல்லாமல் இயக்கியிருக்க முடியுமா?
இப்படத்தின் தமிழ் மறுஆக்கத்துக்கு என்னுடைய முதல் தேர்வு கமல்ஹாசன்தான். இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றபோது தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி என்னிடம் “இப்படத்தைத் தமிழில் யாரை வைத்து எடுப்பீர்கள்?” எனக் கேட்டார். உடனே “கமல்ஹாசன் இல்லை என்றால் ரஜினிகாந்த் ” என பல நடிகர்களைச் சொன்னேன். கமலின் நடிப்பு, தோற்றம், செயல்திறன் அனைத்துமே இப்படத்தின் கதைக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும். படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் நீங்கள் இயக்காமல் தமிழில் மட்டும் இயக்கக் காரணம் என்ன?
இந்தியில் இயக்க வேண்டும் என எண்ணியது உண்மைதான். அவர்கள் என்னிடம் கேட்கும்போது எனக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருந்தன. அதனால் என்னால் இயக்க இயலாமல் போய்விட்டது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் எனக்கு தெரியாது. இந்தியில் அமையவில்லை என்பதால் தமிழில் இயக்கினேன்.
'த்ரிஷ்யம்' வெற்றிக்குக் காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?
அழுத்தமான கதைக்களமும் திரைக்கதையும்தான். ‘த்ரிஷ்யம்' திரைக்கதையில் நாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் வைத்து நான் எழுதவில்லை. அக்கதையில் வரும் சிறு சிறு பாத்திரங்களுக்குக்கூடத் தனித்துவமான அடையாளம் இருக்கிறது.
'பாபநாசம்' படத்தில் ஜெயமோகன், சுகா, கமல்ஹாசன் போன்ற எழுத்தாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன் என்ற முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனக்குத் தமிழில் நிறைய வார்த்தைகள் தெரியாது. தமிழ்க் கலாச்சாரம் எப்படி இருக்கும், ஒரு காட்சி பண்ணும்போது தமிழில் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறையக் கற்றுக்கொண்டேன்.
கமல்ஹாசன் ஒரு இயக்குநர். நீங்கள் இயக்கும்போது இயக்குநர் கமல்ஹாசன் வெளியே வந்தாரா?
நான் இப்படம் தொடங்கும்போதே என்னிடம் பலர், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; கதையில் கமல் தலையீடு செய்வார் என்றெல்லாம் சொன்னார்கள். முதல் நாள் படப்பிடிப்பின்போது மானிட்டர் பக்கம்கூட கமல் வரவில்லை. மூன்றாவது நாள் “இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது எனப் பாருங்கள் சார்” என கேட்டேன். அப்போது கமல் சார் “நீங்கள் இயக்குநர். அது உங்களுடைய வேலை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விக்கு இதுவே பதிலாக இருக்கும்.
அதே போல, இந்தக் காட்சியில் இப்படிப் பண்ணலாமா என்று கேட்பார். நான் வேண்டாம் சார், சரியாக இருக்காது என்று சொன்னால், நீங்கள் சொன்னால் சரி என்று கூறிவிடுவார்.
மலையாளத்தில் தற்போது புதுமுக இயக்குநர்கள், நடிகர்கள் அசத்திவருவதைக் கவனிக்கிறீர்களா?
கண்டிப்பாக. ஒவ்வொரு 15 ஆண்டுக்கும் ஒரு மாற்றம் வரும். திறமையுள்ள நிறைய புதுமுக இயக்குநர்கள் வர வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் வலுவான போட்டி இருக்கும். மலையாளத்தில் ஒரு காலகட்டத்தில் நல்ல படங்களின் எண்ணிக்கை வருவது மிகவும் குறைவாக இருந்தது. அப்போது மக்கள் திரையரங்குக்கு வருவது மிகவும் குறைவு. இப்போது நல்ல படங்கள் நிறைய வருகின்றன. நல்ல படங்கள் அதிகரித்தால், மக்கள் திரையரங்குக்கு வந்து பார்ப்பதும் அதிகரிக்கும் என்பது என் கருத்து.]


நன்றி - த இந்து


  • பல வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி (Sexual harassment thro ' landline போன்)ஒரு தொடர்கதை(?).'சுஜாதா" எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது. (அதன்" கிளைமாக்ஸ்"வேறு.)ஒரு தாயின் மனநிலையை மிக சிறப்பாக வெளி கொனர்ந்த படம்.தமிழில் , ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    Points
    790
    a day ago
     (0) ·  (0)
     
    reply (0) 
       
    • Kriti Janarthanan  
      இதே இந்துவில் படித்து விட்டுதான் படம் பார்க்க சென்றோம்..இப்படத்தின் இரண்டு கருத்துக்கள் வலிமையானது..ஒன்று-குற்றம் செய்பவர் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும்;சட்டத்தால் சாத்தியம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு ஒரு வகையில் தண்டனை கிடைத்தே தீரும்.இன்னொன்று மிகுந்த சர்ச்சையை உண்டாக்கியது(படத்தை பார்த்தீர்கள் என்றால் புரியும்)-வள்ளுவர் சொன்னார் பொய்மையும் வாய்மையிடத்து; ஆனால் ஜார்ஜ்குட்டி மிக மிக நல்ல மனிதராக இருந்ததால் தான் அது சாத்தியமாயிற்று..மிக நல்ல, சுவாரஸ்யமான படம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் பெண்களுக்கு உண்டாகும் பற்பல தீமைகளில் ஒன்றை இப்படம் உறைக்கும்படி சொல்லியுள்ளது.
      Points
      2030
      a day ago
       (1) ·  (0)
       
      MannanMannenUp Voted
      • Mannan Mannen  
        நானும் தமிழ் இந்துவில் படித்து இந்த படத்தை பற்றிய ஆர்வம் தொற்றியது
        about 19 hours ago
         (0) ·  (0)
         
      • Mannan Mannen  
        இது போன்ற ஒரு திரைகதை அமைவது மிகவும் rare என்று தான் சொல்ல வேண்டும் .....அத்தனை கதாபத்திரங்களும் மிக மிக சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்கள் மலையாளத்தில் மற்றும் தெலுங்கில் பார்த்தேன் ......தமிழில் அதே போல வரும் என்று நம்புகிறேன் ......இவ்வளவு பெரிய hit கொடுத்த இயக்குனர் இவர் தான இது என்று இன்று தான் இவர் புகை படத்தை பார்கிறேன் .........மலையாளம் மோகன்லால் நடித்து மிக சிறப்பாக வந்து collection அள்ளியது அதே போல தெலுங்கில் venketsh நடித்து சிறப்பாக வந்தது ....தமிழில் அதை விட சிறப்பான collection வரும் என்று எதிர்பார்கிறேன் .....அடுத்த வாரம் தெரிந்து விடும் தமிழக மக்கள் எப்படி இதை எடுத்து கொள்கிறார்கள் என்று ....All the best to this director ஜித்து ஜோசப்