Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Saturday, July 09, 2011

அரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எப்படி?



1..அரிசி - பருப்பு தோசை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு.  

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2.  வெங்காய குழம்பு 

தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

3. உளுந்து வடை மிக்ஸ் 

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

4. பருப்பு வடை மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்

Sunday, July 03, 2011

ரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்பருப்பு சாதம் அசத்தலா செய்வது எப்படி?

http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ரவா இட்லி மிக்ஸ் 

தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  
ரவா இட்லி செய்ய: தயிர் - 2 கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு,  சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.


http://www.systemsdesigngroup.net/photos/kitchen%20touch%20panel.jpg

2.  தனியா குழம்பு

தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தனியா, மிளகாயை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... வறுத்துப் பொடித்த தனியா - மிளகாய்தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் இறக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி, குழம்பில் சேர்க்கவும்.

இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.

குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.


3. அடை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்தால்... அடை மிக்ஸ் ரெடி! அதிக அளவு மாவு தேவையாக இருந்தால் மெஷினில் அரைக்கலாம்.

அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.

4. குழம்பு பவுடர்

தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.

குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10,    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகம், தனியாவை ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும்  

சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

 5.அரிசி - பருப்பு சாதம் 

தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், பூண்டு, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பு வடகம் தாளித்து, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலந்து, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

Saturday, June 18, 2011

சீரக குழம்பு வைப்பது எப்படி?லெமன் ரைஸ்,புளி சாதம்,தக்காளி சாதம் வெரைட்டிஸ் சமையல் குறிப்புகள்



1. எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் 

தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.

எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி!  

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2. .புளிக் காய்ச்சல் 

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

3. தக்காளி சாத மிக்ஸ் 

 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.

இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.

4.  சீரக குழம்பு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5.  பஜ்ஜி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.

பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்


டிஸ்கி - இன்று தான் நெல்லை சந்திப்பு,குற்றாலம் டூர் முடிந்து வந்தேன்.இனிமேல் தான் அவை பற்றி எழுதனும்.மேலும் ,அவன் இவன் ,ரதி நிர்வேதம்,அநாகரீகம் படங்கள் விமர்சனமும்.. பொறுத்திருக்க.. ஹி ஹி