Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Monday, July 27, 2015

‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா? - விஜய்சேதுபதி பேட்டி

ஆக்‌ஷன் மசாலா படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் அதிகரித்துவரும் தமிழ்சினிமாவில் விஜய்சேதுபதியின் பாதை வேறாக இருக்கிறது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற மென்னுணர்வுத் திரைப்படத்தைத் தயாரித்து அதில் 55 வயது முதியவராக ‘கைலாசம்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், இரண்டு சர்வதேசப் படவிழாக்களுக்குத் தேர்வாகியிருக்கிறது என்ற செய்தியை முதன்முதலாக பகிர்ந்தபடி நம்மிடம் உரையாடினார் விஜய் சேதுபதி…
இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் எது?
எமலிங்கம். ரசிகர்கள், இயக்குநர்கள் என இரண்டு தரப்பிலும் ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘புறம்போக்கு’ ஒரு தோல்விப்படம் என்று ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்குப் பயணம் செய்துவிட்டு வந்தவன் நான். படப்பிடிப்புக்காகச் செல்லும் எல்லா ஊர்களிலும் ‘எமலிங்கம்… எமலிங்கம்’ என்று ரசிகர்கள் என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறார்கள். எமலிங்கத்துக்கு அவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஜனநாதன் சார் என்னைக் கூப்பிடுவார் என்று நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அவர் எனக்கு இத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்தது எனக்குப் பெரிய கவுரவம் என்று சொல்ல வேண்டும். அவரது அரசியல் அறிவாகட்டும், நடிகனுக்கு அவர் தரும் சுதந்திரமாகட்டும், யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்பதிலாகட்டும், அவரைப் போன்ற இயக்குநர்கள் நம்மிடம் அபூர்வம். எமலிங்கம் நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள்?
படப்பிடிப்பில் நடிக்கும்போது சில வசனங்கள் நம்மையும் அறியாமல் வந்து விழும். இயக்குநரின் அனுமதியோடு, அவருக்கு உவப்பாகவும் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்தால் அதைப் பயன்படுத்துவோம். இது எல்லா நடிகர்களும் செய்வதுதான். ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு என் மீது நம்பிக்கை வந்துவிட்டது.
“நீங்கள் வசனம் எழுதுங்கள் சரியாக வரும்” என்றார், இயக்குநர் பிஜூ சார். வசனம் எழுதுவதற்கான தகுதி இதுவல்ல என்று நான் மறுத்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாகயில்லை. நாம உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியாகப் பேசுவோம் என்றார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியாகப் பேசினோம். சில காட்சிகளை நடித்துப் பார்த்தோம். அப்படி இந்தப் படத்தில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களையும் நான் நடித்துப் பார்த்தேன். காட்சிகளைப் பேசும்போதும் நடிக்கும்போதும் ரெக்கார்ட் செய்தோம். பிறகு அதைப் போட்டுப் பார்த்து வசனம் எழுதினேன். இந்த முறை எல்லாப் படத்துக்கும் அல்லது எல்லாருக்கும் சரியாக வருமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜு. விஸ்வநாத்தை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?
இல்லை. அவருக்கு அறிமுகமே தேவையில்லை. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவன். ‘பீட்சா’ படத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். அப்போது வேறோரு கதையை அவர் இயக்க இருந்தார். தயாரிப்பாளர் கூட முடிவான நிலையில் அந்தப் படம் நடக்காமல் போய்விட்டது. பிறகுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையை அவரிடம் கேட்டு அதை நான் தயாரிக்கிறேன் என்று அழைத்துவந்தேன்.
இயக்குநருக்கு எடிட்டிங் தெரியவில்லை என்றும், படத்தை நீங்கள்தான் எடிட் செய்தீர்கள் என்று செய்தி வெளியானதே?
அப்பட்டமான பொய். பிஜூ சாரின் திறமை, படைப்புக்கு அவர் காட்டும் நேர்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தப் படத்தை தயாரித்தது, நடித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தை எடிட்செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுதான் உண்மை.
55 வயது முதியவர் தோற்றத்தை விரும்பி ஏற்க என்ன காரணம்?
‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயது தோற்றத்தில் நடித்தது தானாக அமைந்த ஒன்று. ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோரைவிட எனது கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நலன் குமாரசாமி விரும்பினார். இந்தப் படத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்பது முதலில் முடிவாகவில்லை. வசனமெல்லாம் எழுதி முடித்துவிட்டேன்.
முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த நடிகர் வேறொரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். ஆனால், குறித்த காலத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை. படத்தையும் உடனே தொடங்கவேண்டும். அதனால் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா, மேக் அப் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா என்றேன். அவர் சம்மதித்தார். ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்றுதான் இந்தக் கதாபாத்திரத்தை முயன்றேன். அது சரியாக வந்திருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் படம் முதுமையைப் பற்றிப் பேசுகிற படமா?
நிச்சயமாக இல்லை. இதுதான் இந்தப் படத்தின் கதை என்று வரையறுத்துச் சொல்லவே முடியாது. 55 வயது முதியவரின் ‘பேபிஸ் டே அவுட்’. அப்பாவை இழந்து ஒரு மாதமே ஆன ரமேஷ் திலக். அவசரகால அழைப்புக்கு ஆம்புலன்சில் வரும் மருத்துவ உதவியாளர். அவரது அப்பாவைப் போலவே அடம்பிடிக்கும் 55 வயது கைலாசத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அந்தப் பெரியவரிடம் அவன் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவனுக்கு சவாலாகிறது. அவர்களுக்குள் உணர்வு ரீதியான இணைப்பும் கிடையாது. ஆனால் அந்தப் பயணத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நம் ஒவ்வொருவரையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயணம் நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் அபத்த நகைச்சுவை ரசிகர்களுக்கு அனுபவமாக இருக்கும். பயணத்தின் முடிவு என்ன என்பதும் இந்தப் படத்துக்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு அது நிச்சயமாகப் பிடிக்கும். இந்தப் படத்தை என் அம்மாவுக்கு போட்டுக்காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு “உங்க அப்பனைப் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” என்று சொன்னார். அண்ணன், தங்கை ஆகியோரும் அதையேதான் சொன்னார்கள். கைலாசம் ரசிகர்களுக்கு நெருக்கமான மனிதனாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.


நன்றி- த இந்து

Monday, May 04, 2015

சிம்பு வின் மூன்றாவது முன்னாள் காதலி பர பரப்புப்பேட்டி

விஜய், சிம்பு, ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஹன்சிகா. இப்போதெல்லாம் ஹன்சிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வருகிறது. “ஹலோ...நல்லா இருக்கீங்களா?” என்று அழகுத் தமிழில் கைகுலுக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வாலு, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே, இதயம் முரளி, புலி என்று வரிசையாக உங்களது படங்கள் வெளியாக இருக்கின்றனவே?
நன்றி. ஐந்தாறு வருடங்கள் கழித்தும் இதே மாதிரி பரபரப்பாக நான் இருக்க வேண்டும். ஹன்சிகா நல்ல நடிகை. ஹன்சிகா நடிக்கிற படம் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நம்ப வேண்டும். இதுதான் என் ஆசை.
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் பேசக் கற்றுக்கொண்டுவிட்டீர்களே?
ஆமாம். வணக்கம். நன்றி. எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற வார்த்தைகளைத் தாண்டி நிறைய கற்றுக்கிட்டே இருக்கேன். மேடையில் பேச சின்னதாகத் தயங்குகிறேன். குழந்தைகளிடத்தில் தமிழில் பேசும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழில் எனக்கு அக்கா என்ற வார்த்தை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அக்காவா? அப்படி உங்களை யார் அழைக்கிறார்கள்?
நான் தத்தெடுத்து வளர்க்கிற 30 குழந்தைகளும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். அந்த வார்த்தை எனக்கு மிகவும் அன்பான வார்த்தையாகத் தெரிகிறது.
முப்பது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான நோக்கம்?
என் அம்மா ஒரு டாக்டர். காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள் என எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லி சொல்லி வளர்த்தது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என் அம்மா மாதிரி முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நடிகை ஆனதும் எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் 30 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
என்ன மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
நான் தத்தெடுத்துக்கொண்ட குழந்தைகளின் கல்விக் கட்டணம், உடைகள், விளையாட்டுப் பொருட்கள், திறமைகளை வளர்ப்பதற்கான பயிற்சிகள் என அனைத்துச் செலவுகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நான் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறேன்.
அவர்கள் என்னைப் பார்த்தவுடன் “ ஹய்.. அக்கா” என்று சந்தோஷமாக கோரஸ் பாடுவதைப் போல அழைப்பார்கள். அவர்கள் அன்பில் நான் கரைகிறேன். பொம்மைகள் வாங்கிக் கொடுத்து நானும் சேர்ந்து விளையாடுகிறேன். தென்னிந்திய உடுப்பி சாப்பாடு என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என் பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடுவதில் அலாதி ஆர்வம் உண்டு.
குழந்தைகளுக்கு மட்டும்தான் உதவி செய்வீர்களா?
அப்படியில்லை. என் சக்திக்கு உட்பட்டு தேவைப்படும் யாருக்கும் உதவத் தயார். கடந்த வருடம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டேன். தற்போது முதியோர்களுக்காக ஒரு இல்லம் கட்ட விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்காக ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்ற முயற்சியும் இருக்கிறது.
சினிமாவில் இப்போது என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?
10 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இந்தியில் அமிதாப், ஹிருத்திக் ரோஷனோடு நடிப்பு, 15 வயதில் ஹீரோயின் என எனக்கு எல்லாமே நன்றாக அமைந்தன. அரண்மனை படம் என்னை நடிக்கத் தெரிந்த நடிகையாக அடையாளப்படுத்தியது. வாலு படத்தில் ப்ரியா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதில் என் நடிப்பில் இன்னும் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் சேட்டை செய்யும் குறும்புப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்தும் ஹன்சிகா நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். கேமராதான் என் உலகம். ஒரு நடிகையா, ஒரு படத்துக்கு நூறு சதவிகிதம் உண்மையாக நடிப்பதே பெரிய சாதனைதான்.
மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பீர்களா?
தமிழ், தெலுங்கில் நல்ல நடிகையாக வர வேண்டும். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஜொலிக்க வேண்டும். இதுதான் என் இலக்கு. இந்தி சினிமாவுக்குப் போகும் எண்ணம் இல்லை. தமிழ் சினிமாவின் தரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழ் சினிமாவில் நானும் இருப்பது எனக்குப் பெருமை.
படத்துக்குப் படம் அழகாகத் தெரிகிறீர்களே, அந்த ரகசியம் என்ன?
நன்றி. நான் எதற்கும் கவலைப்படுவதில்லை, டென்ஷன் ஆவதில்லை, எனக்குக் கோபமே வராது. திட்டினால்கூட, நான் சிரித்துக்கொண்டேதான் இருப்பேன். என் மனசுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன்.
உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?
என் அம்மாதான். நான், பிரபல நடிகையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது, நம்பிக்கை கொடுத்தது, சாதிக்கத் தூண்டியது எல்லாம் என் அம்மாதான்.
காதலை முறித்துக் கொண்ட பிறகு வாலு படப் பாடல் காட்சியில் நீங்களும், சிம்புவும் இணைந்து நடித்திருக்கிறீர்களே... (கேள்வியை முடிக்கும் முன்பே)
ஸாரி.. இந்தக் கேள்வியை மறந்திடுங்க. சிம்பு நல்ல நடிகர். அவ்வளவுதான். நன்றி.


நன்றி  - த இந்து

Thursday, April 23, 2015

‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான்ட்ரா சிறப்புப் பேட்டி

இளம் கதாநாயகி ரெஜினா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமும் தமிழ்நாடு. அள்ளிச் சூடிக்கொண்டதோ தெலுங்குத் திரையுலகை. தமிழில் ‘ராஜதந்திரம்’ தந்த வெற்றிக் களிப்பு முகத்தில் மின்ன ‘சுப்பிரமணியம் ஃபார் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டுக்கொண்டிருந்தவருடன். ஒரு குறும் பேட்டி:
தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ் சினிமாவில் நடிக்க பிகு செய்கிறீர்கள் போலத் தெரிகிறது..
திட்டமிட்டு ஒரு வேலையைச் செய்ய எனக்குப் பிடிக்காது. என் அதிர்ஷ்டமோ, என்னவோ இயல்பாக, யதார்த்தமாகத் தொடும் காரியம்தான் எனக்குச் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் நடித்தால் போதும். நம்ம ஊரில் நல்ல கதை கொண்ட யதார்த்தமான படத்தில் நடித்தால் மட்டும்தான் கவனிப்பாங்க. அதனால்தான் இங்கே நிதானமாகப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அறிமுகமான ‘கண்ட நாள் முதல்’ படம் வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகிறதே?
இந்நேரம் தமிழில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்க வேண்டாமா என்றுதானே கேட்கவருகிறீர்கள்? ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘கண்ட நாள் முதல்’ படம் வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிஸியானாலும் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பை விடவே இல்லை.
பி.எஸ்.சி. சைக்காலஜி வரைக்கும் தொடர்ந்தேன். அப்படிப் பார்த்தால் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள் எனது படிப்புக்காகவே டெடிகேட் செய்திருக்கிறேன். இந்த இடைவெளியில் நல்ல கதைகளை எப்படித் தேர்வு செய்வது என்ற ரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்துக்குப் பிறகு ‘ராஜதந்திரம்’. இடைவெளி இருந்தாலும் ‘பளிச்’சென இடம்பிடித்துவிட்டீர்களே?
‘ராஜதந்திரம்’ படத்துக்கு நட்சத்திரத் தேர்வு முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் அந்தக் குழுவினருடன் இணைந்தேன். அவர்கள் திடீரென்று அழைத்த நேரத்தில் தெலுங்கில் ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியும் இருந்தேன். ஆனால் கதையைக் கேட்ட பிறகு சில தந்திரங்கள் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டேன்.
அந்த டீம் என்னைக் கவர்ந்ததும் அதில் நடிக்க முக்கியமான ஒரு காரணம். கேடி பில்லாவுக்குப் பிறகுகூட என்னை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு நிஜமான வெற்றிக்குப் பிறகு எல்லோரும் நம்மை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
உங்களைப் போலவே தெலுங்கிலிருந்து வந்த ஹன்சிகா தற்போது இங்கே முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இடம்பிடித்துவிடுகிறாரே?
என் கையில் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது மட்டும்தான் என் வேலை. இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினா, மூன்றாவது ஹீரோயினா என்பதைக்கூட நான் பார்ப்பதில்லை. தேடி வரும் கேரக்டர் புதிதாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி பெரிய இயக்குநர்கள், முன்னணி நாயகர்கள் படங்கள் எல்லாம் அதுவாக அமைந்தால்தான். பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார், ஜோதிகா என்று திருமணதுக்குப் பிறகு திரைக்கு மறுபிரவேசம் செய்து கலக்க ஆரம்பித்திருக்கும் முன்னாள் கதாநாயகிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இன்றைய ஹீரோயின்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள்தான் சினிமா ஆயுள் என்ற நிலை மாறி வருகிறது. திருமணப் பேச்சு தொடங்கியதுமே நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்ளும் சூழல் முற்றிலும் மறைந்துவிட்டது. நடிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது, எங்களைப் போன்ற புதிய தலைமுறை நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனால் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையை இல்லாமல் செய்கிறது. குடும்பத்தின் முழுமையான ஆதரவும், சுதந்திரமும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் இவங்க மூணு பேருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.
நீங்கள் டிரெக்கிங் ப்ரியையாமே?
ஆமாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஏலகிரி மலைப்பகுதிக்குக் கிளம்பிவிடுவேன். இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் அமெரிக்காவில் ‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கப்போகிறேன். அங்கே டிரெக்கிங் செய்ய உகந்த இடத்தைப் பிரவுஸ் செய்து கொண்டிருக்கிறேன். குளிர்ச்சியான இடம் விரைவில் சிக்கும். அப்டேட்டுக்கு என் ட்விட்டரைச் செக் பண்ணுங்கள்.




நன்றி - த இந்து 

Monday, April 20, 2015

‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி இந்தியன் ரிக்கி கேஜ் சிறப்புப் பேட்டி

  • மணிரத்னத்துடன்
    மணிரத்னத்துடன்
  • கிராமி விருதுடன் ரிக்கி கேஜ், வோடர் கெல்லர்மே
    கிராமி விருதுடன் ரிக்கி கேஜ், வோடர் கெல்லர்மே
  • தனது இசை கோப்புக் கூடத்தில் ரிக்கி கேஜ்
    தனது இசை கோப்புக் கூடத்தில் ரிக்கி கேஜ்
பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் வரிசையில் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கேஜ். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. இதற்கு முன் நாம் அதிகம் கேள்விப்படாத ரிக்கி கேஜ் பிறந்தது அமெரிக்காவில். படித்தது, வளர்ந்தது வாழ்வது எல்லாம் பெங்களூருவில்.
பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இந்துஸ்தானி இசையின் மீது கொண்ட தீராக் காதல் அவரை கிராமி விருதுவரை அழைத்து வந்திருக்கிறது. வோடர் கெல்லர்மே எனும் தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞரோடு இணைந்து இவர் உருவாக்கிய ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) என்ற இசை ஆல்பத்துக்காகவே கிராமி விருதை வென்றுள்ளார்.
அண்மையில் சென்னைக்கு வந்திருந்தவர் ‘தி இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
இந்திய இசைக் கலைஞர்களில் உங்களை அதிகம் பாதித்தவர் யார்?
மறைந்த மாமேதை பண்டிட் ரவிசங்கர். தனியாளாக இந்துஸ்தானி இசைக்கு உலக அளவில் ரசிகர்களை உருவாக்கினார். அவரால்தான் என்னைப் போன்றவர்கள் இன்று வாழ முடிகிறது. அவரால்தான் எனது இசை மேற்கத்திய நாடுகளில் ஒலிக்கிறது. அவர் புதிய இசையைப் படைத்தார் என்பதோடு, பல்வேறு கலாச்சாரம், நாடுகளைச் சேர்ந்த புதிய இசைக் கலைஞர்களோடு இணையத் தயங்கியதில்லை. ஜப்பானிய இசைக் கலைஞர் கிடாரோவுக்கும் ரசிகன் நான். அதேபோல் ஏ.ஆர். ரஹ்மான். ஒவ்வொரு இசைக் கலைஞரிடமும் ரஹ்மானின் தாக்கம் இருக்கும். அப்படி இல்லையென்று கூறுபவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றே அர்த்தம். இந்திய இசைச் சூழலில் அவர் அப்படியொரு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கிராமி விருது பெற்ற உங்களின் விண்ட்ஸ் ஆஃ சம்சாரா ஆல்பத்தைப் பற்றி கூறுங்கள்..
தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞர் வோடர் கெல்லர்மேனும் நானும் மூன்று வருடங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சந்தித்தோம். அப்போது இருவரும் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நான் ஏற்கனவே இசையமைத்ததை அவரிடம் கூறினேன். அதே போல அவரும், நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை ஒட்டி இசையமைத்திருந்தார்.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா இருவருமே தத்தமது தேசத்தின் தந்தையாக அறியப்படுபவர்கள். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வாழ்ந்தது, காந்தியின் கொள்கைகளை நெல்சன் மண்டேலா பின்பற்றியது என இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் பல வகையில் தொடர்புகள் உள்ளன.
எனவே இவர்களது கொள்கைகளை அடிப்படையாக வைத்து இசையமைக்கத் தொடங்கினோம். உலகம் முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 120 இசைக் கலைஞர்களை இதில் ஈடுபடுத்தினோம். இரண்டு வருடங்கள் முடிந்தபோது எங்கள் கையில் விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா இசை ஆல்பம் இருந்தது.
இந்தியாவில் இசைத் துறை எப்படி இருக்கிறது?
இந்தியாவில் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான (Independent Musicians) வாய்ப்புகள் மிகவும் குறைவு. இங்கே எல்லா வகை இசையுமே சினிமா இசையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எல்லா மொழிகளிலுமே சினிமா இசையே ஆதிக்கம் செலுத்துகிறது. பண்பலை வானொலி, தொலைக்காட்சி என எல்லாவற்றிலுமே சினிமா பாடல்களுக்கே முக்கியத்துவம் இருக்கிறது.
இந்தியாவில் நான் யாரிடமாவது பேசும்போது என்னை ஒரு இசையமைப்பாளர் என அறிமுகம் செய்துகொண்டால், எந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளீர்கள் என்று கேட்கின்றனர். இங்கிருக்கும் பெரும்பான்மை இசை, ஒரு திரைக்கதையைச் சார்ந்தோ, நாயகன் நாயகியிடம் என்ன சொல்கிறான் என்பதைப் பொருத்தோ, அந்தக் கதையைப் பொருத்தோதான் இருக்கிறது. அந்த இசைக் கலைஞரைச் சார்ந்து இருப்பதில்லை; ஒரு இசைக் கலைஞரின் உணர்வு அவரது இசை மூலமாக வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குத் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான துறை, தளமும் மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.
தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான வாய்ப்பை திரை இசை கெடுக்கிறது என நினைக்கிறீர்களா?
இங்கு சூழலே அப்படி என நினைக்கிறேன். திரை இசையும் மிக நன்றாக இருக்கிறது. ஒரு இசைக் கலைஞர் அவருக்கான இசையைத் தர வேண்டும் என்றும் நினைக்கிறேன். அவர் வாழ்க்கையை ஒட்டிய இசையைப் படைக்க வேண்டும்.
மேற்கில் அடெல் என்ற ஒரு இசைக் கலைஞர் இருக்கிறார். தனக்கு ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் அந்த உணர்வுகளைப் பற்றி ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவார். யாரையாவது காதலித்தால் அதுபற்றி ஒரு இசை ஆல்பம். இதே போல ஜான் மேயர், நோரா ஜோன்ஸ் எனப் பல இசைக் கலைஞர்களின் இசை அவர்களது வாழ்க்கையை ஒட்டியே இருக்கிறது. அப்படியான இசை முக்கியம் என நினைக்கிறேன்.
இங்கிருக்கும் இன்னொரு பிரச்சினை, தனி இசைக் கலைஞர்கள், தனியான ஆல்பங்களை உருவாக்குவதும் திரை இசைக்கான வாய்ப்புக்காகவே. எனவே ஒரு தயாரிப்பாளர் தனது இசையை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இசையமைக்கிறார்கள். அதுவும் சினிமா இசையைப் போலவே இருக்கிறது. இசைக் கலைஞர்கள் ஆத்மார்த்தமாக, எதையும் சாராமல் இசையமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கன்னடப் படங்களுக்கு இசையமைத்தது உங்களது வளர்ச்சிக்கு உதவியதா?
இந்தியாவில் யாரைப் பார்த்தாலும் எந்தப் படத்துக்கு இசையமைத்தீர்கள் என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் நடிகர், இயக்குநர் ரமேஷ் அரவிந்தைச் சந்தித்தேன். அற்புதமான மனிதர் அவர். ஒருவகையில் அவரை என் வழிகாட்டி என்றுகூடச் சொல்லுவேன்.
நல்ல நண்பர். அவருடன்தான் கன்னடத்தில் 3 படங்களில் பணியாற்றினேன். ஒரு கதையைச் சார்ந்து இசையமைப்பது எனக்குக் கடினமாக இருந்தது. தனித்து இயங்குவதே எனது விருப்பம்.
அதே போல பைரஸியும் (Piracy) இசைக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறதே?
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பைரஸி குறைவாகவே இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்தியாவில் திரையுலகம் இந்த பைரஸியை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கு பாடல்கள் ஹிட் ஆனால் போதும். அதை வைத்து சினிமா டிக்கெட்டுகளின் விற்பனையை அதிகமாக்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எனவே இசை சிடிக்களின் விற்பனையை கண்டு கொள்வதில்லை.
இங்கு பைரஸி அனைத்து வகையிலும் வேரூன்றியுள்ளது. அனைவரிடத்திலும் 2 ஜிபி 3 ஜிபி என பாடல்கள் சேர்க்கப்படுகின்றன. கடைசியாக எப்போது காசு கொடுத்து ஒரு இசையை வாங்கினோம் என யாருக்கும் நினைவிருக்காது.
ஒரு தனி இசைக் கலைஞரின் வாழ்வாதாரம் அவரது ஆல்பத்தின் விற்பனையை ஒட்டி இருக்கிறது. யாருமே பணம் கொடுத்து வாங்காமல், பைரஸியின் பின்னால் சென்றால் இசைக் கலைஞர் எப்படி வாழ முடியும்? அதனால் தான் அவர்கள் சினிமா இசைக்குத் தாவுகிறார்கள். அவர்களுக்கு இங்கு இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று இசைத் துறைக்குச் செல்ல வேண்டும். அல்லது எங்காவது வேலை செய்து கொண்டு பகுதி நேரத்தில் இசையைத் தொடரலாம். எனவே இந்தியாவில் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கு கடினமான சூழலே இருக்கிறது.
எனக்குக் கடினமாக இருந்தது. தனித்து இயங்குவதே எனது விருப்பம்.
மீண்டும் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் எண்ணம் இல்லையா?
உடனடியாக அப்படி எந்த திட்டமும் இல்லை. ஒருவேளை எந்த இயக்குநருக்காவது எனது இசை பிடித்துப் போய், இப்படியான இசைதான் வேண்டும் என அணுகினால் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்வேன். ஏனென்றால் எனது இசை பலரிடம் சேர வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் யாராவது வந்து, அண்மையில் ஹிட்டான 10 பாடல்களைக் காட்டி, அதைப் போலதான் எனக்கு இசை வேண்டும் என்று கூறினால் என்னால் முடியாது. எனக்கு அந்தத் திறமை கிடையாது.
சர்வதேச அளவில் இசைக் கலைஞர்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் இந்த ஆல்பத்தின் இசை இந்திய இசையைப் போலவே இருப்பதற்கான காரணம் என்ன?
இசை எப்போதுமே நமது குணம், நம்பிக்கை, ஆளுமை இவற்றின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நான் எனது உணர்ச்சிகளை இந்திய இசையின் மூலமாகவே வெளிப்படுத்துவேன். நான் ஒரு இந்தியன், இங்கேயே வளர்ந்தவன். எனவே இந்துஸ்தானி, இந்திய இசையே எனது வெளிப்பாடாக இருந்து வருகிறது.
எனவே நான் எப்போது இசையமைக்க ஆரம்பித்தாலும் அதில் எப்படியாவது இந்தியத்தன்மை வந்துவிடும். அதானால் தான் விண்ட்ஸ் ஆஃப் சம்சாராவாக இருக்கட்டும், எனது முந்தைய இசைப் படைப்புகளாக இருக்கட்டும், அதில் இந்திய இசையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.
இசைத் துறைக்கு வர எவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டீர்கள்?
முதலில் இந்தத் துறைக்கு வரும்போது முறையான பயிற்சி ஏதும் இருக்கவில்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, இசைதான் என் எதிர்காலம் என முடிவெடுத்தவுடன் முறையாக பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஏனென்றால் முறையான பயிற்சி இல்லாததை ஊனம் போல உணர்ந்தேன். பெரிய இசைக் கலைஞர்களிடம் பேசும் போது அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளவாவது பயிற்சி தேவை. எனவே நல்ல ஆசிரியர்களிடம் இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுக் கொண்டேன்.
மருத்துவப் படிப்பு படித்தும் தொழில் முறையில் அதை கைவிட்டதன் காரணம் என்ன?
நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால் உண்மையில் நான் மருத்துவராகவேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. எப்போதுமே இசை தான் எனது பாதையாக இருந்தது. 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் இசை தான் என் எதிர்காலம் என முடிவு செய்து அதை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்களுக்கு எல்லா பெற்றோரைப் போலவே, நான் பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
பல சண்டை, வாக்குவாதங்களைத் தொடர்ந்து ஒரு சமரசத்துக்கு வந்தோம். நான் பல் மருத்துவம் படித்து முடித்து பட்டம் வாங்கிய பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடனே படித்தேன். எனவே படித்து முடித்து பட்டம் வாங்கியவுடன், அதை என் தந்தையிடம் கொடுத்து விட்டு இசையின் பக்கம் வந்துவிட்டேன்.
தமிழ் திரை இசையை கேட்பதுண்டா?
கண்டிப்பாக. ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா என பலரது இசையை விரும்பிக் கேட்கிறேன். சில வருடங்களுக்கு முன் 'பலே பாண்டியா' என்ற படத்தில், இசைக் கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து அகபெல்லா (A capella) வடிவில் ஒரு பாடலைக் கேட்டேன்.
அப்படி தமிழில் பல புதிய முயற்சிகளைத் தொடர்ந்து யாராவது செய்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களும் அத்தகைய முயற்சிகளை நன்றாக வரவேற்கிறார்கள். இந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கிராமி விருதை வென்றாகிவிட்டது. அடுத்து என்ன?
அறுதியிட்டு சொல்ல கடினமாக இருக்கிறது. ஏனென்றால் எனக்கு 33 வயதுதான் ஆகிறது. அதற்குள் மிகப்பெரிய இசை விருது கிடைத்துள்ளது. 60 வயதில் கிடைத்திருந்தால், இதுதான் என் வாழ்நாள் சாதனை என்று கூறிக் கொள்ளலாம். ஓய்வு பெறலாம். இப்போது கிடைத்துள்ளதால் மீண்டும் எனது இசைப் பயணத்தை புதிதாக தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த விருதால் 'நீ வணிகரீதியிலான இசையிலிருந்து விலகி உனக்குப் பிடித்ததை ஆத்மார்த்தமாக செய்தாய். அதனால்தான் உனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதையே தொடர வேண்டும்' என யாரோ கூறியதைப் போல இருக்கிறது. எனவே அதையே தொடர விரும்புகிறேன். இன்னும் அதிக மக்கள் என் இசையை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.


நன்றி - த இந்து

Saturday, March 28, 2015

நண்பேன்டா - நயன் தாராவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது எப்படி - உதயநிதி பேட்டி

“ஆறு மாதத்துக்கு முன் 'நண்பேன்டா' படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது நயன்தாராவைப் பார்த்தது. ஆனால் இப்பவும் கிசுகிசு எழுதிகிட்டே இருக்காங்க. கிசுகிசுக்கள் என்னோட படத்திற்கு விளம்பரம்தானே. அதனால் நான் எதையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் எனக்குக் கொடுக்கும் விளம்பரம், கோடி ரூபாய் செலவழித்தாலும் கிடைக்காது" எனச் சண்டை காட்சி படப்பிடிப்பு இடையே கெத்தாகப் பேசத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
மறுபடியும் ஒரு வெற்றி தேவை என்பதை மனதில் வைத்து உருவான படம் மாதிரித் தெரிகிறதே?
என்னோட கடந்த இரண்டு படங்கள் மாதிரிக் குடும்பம், சென்டிமெண்ட் எதுவும் எல்லாம் இல்லாமல் முழுக்கக் காமெடியைப் பின்னணியாகக் கொண்டு தொடக்கப்பட்ட படம்தான் ‘நண்பேன்டா'.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானம் என்னோடு முழுக்க இருப்பார். இந்தப் படத்தில் நான், சந்தானம், நயன் எல்லாருக்குமே சரிசமமா இருக்கோம். சந்தானத்துடன் நான் செய்திருக்கும் காமெடி கலாட்டா மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன். தமன்னா ஒரு சின்னக் கதாபாத்திரம் பண்ணியிருக்காங்க.
தொடர்ச்சியாகச் சந்தானத்தோடு கூட்டணி அமைக்க என்னக் காரணம்?
எனக்கு யாரோடு படப்பிடிப்புக்குப் போனால் ஜாலியாக இருக்குமோ அவர்களோடு பயணிக்கிறேன். அவ்வளவுதான். இப்போது 'கெத்து' படத்தில் கருணாகரனோடு நடிக்கிறேன். இந்தப் படத்தில் சந்தானம் கிடையாது. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை இயக்குநரின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். ‘நண்பேன்டா' படத்தில் சந்தானம் பண்ணியிருக்கும் பாத்திரத்தை வேறு யார் பண்ணினாலும் சரியாக வராது.
‘நண்பேன்டா' படத்தில் நடனம், சண்டை என அடுத்த கட்டத்திற்குப் போயிருக்கிறீர்களாமே?
அதற்குக் காரணம் சந்தானம்தான். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துக்கு நடனம் சொல்லிக் கொடுத்தால், "அய்யோ.. நடனமா இதெல்லாம் வேண்டாம்பா" என்று சொல்லிவிடுவார். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் பார்த்தேன்.
நாயகன் என்றவுடன் நடனத்திற்கு நிறைய பயிற்சிகள் செய்து அவ்வளவு சூப்பராக நடனமாடிவிட்டார். அப்படி என்றால் நான் சும்மா இருக்க முடியுமா? நானும் நடனப் பயிற்சி எல்லாம் எடுத்து, இந்தப் படத்தில் சந்தானத்துக்குச் சரிசமமாக நடனமாடி இருக்கிறேன்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
நான் நடித்துச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் முதல் படம் இதுதான். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் சண்டை இருந்தது. வேண்டாம் என்று தூக்கிவிட்டோம். எனக்கு ஒவர் பில்ட்அப் பண்ணினால் பிடிக்காது. ஆனால், இயக்குநர் ஜெகதீஷ் இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கிறார். சண்டைக்காட்சியிலும் காமெடியைக் கலந்திருக்கிறார். அதுதான் ஜெகதீஷ் ஸ்டைல்.
உங்களது வீட்டில் உங்களது படங்களை விமர்சனம் செய்பவர் யார்?
என் மனைவிதான். நான் நடிக்கும் எல்லாப் படங்களின் கதையும் அவங்களுக்குத் தெரியும். படம் முடிந்தவுடனே போட்டுக் காண்பிப்பேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' பார்த்துவிட்டுச் சூப்பர் என்றார், ‘இது கதிர்வேலன் காதல்' பார்த்துவிட்டு முந்தைய படம் மாதிரி காமெடி இல்ல என்றார்.
அவங்கதான் எனது முதல் விமர்சகர். அதற்குப் பிறகு என்னோட பசங்க, என்னோட தங்கை பசங்க. இப்பவும், சந்தானம் என்று பேச்சை எடுத்தால், அவர் பெயர் பார்த்தா, சந்தானம் கிடையாது என்கிறார்கள். அந்தக் கதாபாத்திரம் அந்தளவிற்குப் பதிந்துவிட்டது.
கெத்து' படத்தில் ஆக் ஷன் அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போல?
கண்டிப்பாகக் கிடையாது. ‘நண்பேன்டா' படத்தில் சண்டை காமெடியாக இருக்கும். இந்தப் படத்தில் ரோப் எல்லாம் கட்டி சண்டை போட்டிருக்கிறேன். இரண்டு சண்டைக் காட்சிகள். என் முந்தைய படங்களை விட கெட்அப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். கதாநாயகி ஏமி ஜாக் ஸன், காமெடிக்கு கருணாகரன், இயக்குநர் திருக்குமரன், ஒளிப்பதிவாளர் சுகுமாரன் எனப் புதிய கூட்டணி, புதிய களம்.
ஒரே மாதிரியான படங்கள் பண்ணுவதைவிட, அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கிறேன். ‘கெத்து' ஒரு ஆக் ஷன் த்ரில்லர் வகையில் இருக்கும். இப்படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் அஹமத்துடன் ‘இதயம் முரளி' பண்றேன். அப்படம் ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் நடப்பது போன்ற கதை.


நன்றி - த இந்து


Tuesday, March 24, 2015

கொம்பன் -ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம் - கார்த்தி பேட்டி

“இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி
கொம்பன் படத்தின் கதை என்ன?
ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..
‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.
‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?
திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.
நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.
அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?
அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.
ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?
ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!
எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும். ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.
இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?
‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.
உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?
நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.


thanx  - the hindu



  • Gow  
    Enaku Surya Na Romba Pidikum Karthi Unga Padam Madras சூப்பர் Komban Padam Vetri Pera Vazhthukal
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Shankar  
      சூரியாவிடம் ஒரே போன்ற நடிப்பு உள்ளது.நமக்கு அவரிடம் இருந்த லயிப்பு போய் அலுப்பு வந்து விட்டது.இவரும் ஒரு groove இல் வந்து விட்டார்.இந்த இருவரின் அளப்பல்கள் வேறு நம்மை படுத்துகின்றன.
      Points
      15400
      2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • பூபாலன்  
        அண்ணணோடு மோதினா அண்ணன் படம் ஓடாது
        3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Jay  
          ஒரு ஆண் அவன் வீட்டிலேயே அவன் செய்யும் தொழில் பற்றி சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை கூட ஏதோ பெரிய நகைச்சுவை போல சொல்லிகொள்கிறான் ! கொடுமை !
          Points
          3525
          3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
          • செல்வகுமார Chozhan  
            சாதிய ரீதியான படங்களில் நடிப்பதை முதலில் நிறுத்தவும். ஏற்கனவே பருத்திவீரனில் சேர்வையாக, இப்போ கொம்பனில் மறவராக. நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்து ஒரு தமிழரான நீங்களே எப்படி இது போன்ற படங்களில் கூச்ச நாச்சம் இல்லாமல் நடிக்கீன்றீர்கள்? கடந்த மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட கொலைகள். பாதிக்கப்பட்டது தமிழ் சமூகங்களான தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்), கோனார் (இடையர்), நாடார்(சானார்). கொலை செய்தது ஒரே சமூகம்....
            3 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
            • shankar  
              இன்னும் இந்த தமிழ் சமூகம் இப்படி எதாவது பிடித்துகொண்டு உருப்படாமல்போய் கொண்டு இருங்கள்...படத்தை படமாக பாருங்கள் அது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.have tolerance .