Showing posts with label சட்டமன்ற தேர்தல்: முதல் கூட்டணி; விஜயகாந்த்?. Show all posts
Showing posts with label சட்டமன்ற தேர்தல்: முதல் கூட்டணி; விஜயகாந்த்?. Show all posts

Tuesday, November 03, 2015

சட்டமன்ற தேர்தல்: உருவானது முதல் கூட்டணி; பலம் சேர்க்க வருவாரா விஜயகாந்த்?

 மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.  
 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை  உருவாக்கியுள்ளது. இந்த கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று மக்கள் கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வெளியிட்டனர்.

மக்கள் நலக் கூட்டணி 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்றும், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்படும் என்றும், மக்கள் நலக் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "எங்களது குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை முன்வைத்தே தேர்தலை எதிர்கொள்வோம். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடான அம்சங்களையே குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். அதனால் தனி தமிழீழம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போன்ற சில விவகாரங்களை தவிர்த்துள்ளோம்.

கடந்த 48 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை சீரழித்துள்ளன. இரு கட்சிகளும் ஊழலில் ஊறி திளைக்கின்றன. எனவே, ஊழல் எதிர்ப்பை பிரதானமாக கொண்டு இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.

ஊழல், மதவாதம், தீண்டாமை, மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. அதிமுக, திமுக எதிர்ப்பில் உருவானதே தேமுதிக. எனவே அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும். இணையும் என நம்புகிறோம்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்படும். திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது. ஒத்த கருத்துடைய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் சேரலாம்" என்றார்.
கூட்டணியில் இணைவாரா விஜயகாந்த்?
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தேமுதிக தலைவர் 
விஜயகாந்த் திட்டவட்டமாக கூறி வருகிறார். இந்நிலையில், தற்போது மக்கள் நலக் கூட்டணி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவர் அதில் இணைவரா அல்லது வழக்கம்போல் தேர்தல் அறிவிப்பு வரும் வரை   சுற்றலில் விடுவாரா என்ற எண்ணத்திலேயே விஜயகாந்தின் 'மூவ்' ஐ உன்னிப்பாக கவனித்து வருகின்றன முக்கிய அரசியல் கட்சிகள்.

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்?
இதனிடையே மக்கள் நலக் கூட்டணி சார்பில் தற்போது முதல்வர் வேட்பாளராக யாரையும் முன் நிறுத்த மாட்டோம் என்ற அறிவித்திருப்பது விஜயகாந்தை கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான யுக்திதான் என்றும், ஒருவேளை விஜயகாந்த் கூட்டணிக்குள் வந்தால் தேர்தல் நெருக்கத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தலாம் அல்லது அவருடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ளலாம் என்றும்  கூறப்படுகிறது.
திகைப்பில் அதிமுக... திகிலில் திமுக!
மக்கள் நலக் கூட்டியக்கம் அரசியல் கூட்டணியாக மாறுமா என்பது குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வந்தன. தேர்தல் நெருக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ அணி தாவி விடலாம் என்று யூகங்கள் கிளம்பின. ஆனால் இத்தகைய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மக்கள் நலக் கூட்டியக்கம், மக்கள் நலக்கூட்டணியாக உருவெடுத்துள்ளது கண்டு  அதிமுக வட்டாரம் இலேசான 'ஜெர்க்' ஆகி இருப்பது உண்மைதான். அதிலும், விஜயகாந்தை எப்படியும் தங்களது கூட்டணிக்கு கொண்டடு வரவேண்டும் என பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக தரப்புக்கு, மக்கள் நலக் கூட்டணி சார்பில் விஜயகாந்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு திகிலை ஏற்படுத்தி உள்ளது.

அங்கலாய்க்கும் பா.ஜனதா! 

இதனிடையே, மக்கள் நலக் கூட்டியக்கம் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறுகையில், "மக்கள் நலக் கூட்டணியில் சேர பாஜக எதிர்பார்த்தது கிடையாது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்கள் பல கூட்டணியில் இருந்து தோல்வியை கண்டவர்கள். இந்த கூட்டணியால் மாற்றத்தை கொண்டு வர முடியாது. எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தேர்தல் வரை கூட்டணி நீடிக்குமா என்பதே சந்தேகம்" என்றார். 

 அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், "கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் இடையே ஒத்தக் கருத்து கிடையாது. மக்கள் நலக் கூட்டணியால் எந்த மாயாஜாலத்தையும் செய்ய முடியாது" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி கூறுகையில், "முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணுவை அறிவித்தால் கூட்டணி மீது நம்பிக்கை ஏற்படும்" என்றார்.
 

படங்கள்: கே.கார்த்திகேயன்

விகடன்