Showing posts with label கெத்து - திரை விமர்சனம் உதயநிதி ஸ்டாலின். Show all posts
Showing posts with label கெத்து - திரை விமர்சனம் உதயநிதி ஸ்டாலின். Show all posts

Sunday, January 17, 2016

கெத்து - திரை விமர்சனம்

இயற்கை
எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார்.


குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடுகிறார். இதனால் சத்யராஜுக்கும் பாரின் உரிமையாளர் ‘மைம்’ கோபிக்கும் இடையே மோதல் நடக்கிறது.



கோபியின் ஆட்கள் தன் அப்பாவைத் தாக்கும்போது அப்பாவைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார் உதயநிதி. மறுநாள் மைம் கோபி கொலையாகிக் கிடக்கிறார். கொலைப் பழி சத்யராஜ் மீது விழுகிறது. அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார் உதயநிதி.


அவரால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அந்தக் கொலைகாரன் யார்? அவனது நோக்கம் என்ன? விஞ்ஞானியைக் கொல்ல முனையும் விக்ராந்துக்கும் குமுளியில் நடக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன தொடர்பு? - இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் த்ரில்லராக விரித்துச் சொல்கிறது திருக்குமரனின் இயக்கத்தின் வெளியாகியிருக்கும் ‘கெத்து’.



தொடக்கக் காட்சியிலேயே கொலைகாரனை அறிமுகப்படுத்தி விட்டு, அவன் குமுளிக்கு எதற்காக வருகிறான் என்பதை மெல்ல மெல்ல விடுவிக்கும் திரைக்கதை, சரியான நேர்கோட்டில் அமைக் கப்பட்டிருப்பதும், திருப்பங்களை அளவாகவும் தெளிவாகவும் வைத்துக் கதையை நகர்த்திச் செல்வதும் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றவைக்கிறது. சர்வ தேசச் சதியுடன் குமுளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ள விதம் நன்றாக உள்ளது.



அடுத்தடுத்து மர்மமான முறை யில் கொலைகள் நடக்கின்றன. ஆனால் அதற்கேற்ற பரபரப்பு காவல் துறையினரிடம் இல்லை. பல காட்சிகள் எளிதில் யூகித்து விடக்கூடிய விதத்தில் உள்ளன. உதயநிதிக்கு எழும் கேள்விகள் எதுவும் காவல் துறையினருக்கு எழவே இல்லை. இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்துக்குள் உதய நிதி சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். பாடல்களும் காதல் காட்சிகளும் கதையுடன் ஒட்டவே இல்லை. காதல் கதையை விட்டு நகர்ந்த பிறகு படம் சிறிதும் திசை மாறாமல் கச்சிதமாக நகர்வதையும் குறிப்பிட வேண்டும்.



மொத்தப் படமும் செறிவான முறையில் நேர்த்தியாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. கதைக் களம், ஒளியமைப்பு, காட்சிகளுடன் இயல்பாகப் பொருந்தும் சிறப்புச் சத்தங்கள், கலை இயக்கம், நட்சத்திரங்களின் தோற்றங்கள், ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை என அனைத்திலும் காணப்படும் நேர்த்தி படத்துக்கு மிகப் பெரிய பலம். சண்டைக் காட்சிகள் இரண்டையும் வடிவமத்த அன்புறிவ் கவர்கிறார்.


இதுவரை குடும்பப் பாங்கான நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த உதயநிதி, முதல் முறை யாக ஆக்‌ஷன் கதையில் நடித் திருக்கிறார். தனக்குப் பொருந்தும் விதமாக அலட்டல் இல்லாத கதையைத் தேர்ந்தெடுத்த விதம் பாராட்டுக்குரியது. யோகா மற்றும் சைவ உணவு விரும்பியாக அறிமுக மாகும் உதயநிதி, அப்பா தாக்கப் படும்போது அங்கே ஆஜராகித் தன் ஆக்‌ஷன் முகத்தைக் காட்டும் திடீர் கெத்து ரசிக்கும் விதமாக இருக்கிறது.



கதாநாயகி எமி ஜாக்சனுக்குக் கதையுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவரது பங்கு படத் தின் வசீகரத்துக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கருணாக ரனை நகைச்சுவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றியதற்காக இயக்கு நரைப் பாராட்டலாம்.



முதல்முறையாக எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், பார்வையாலேயே மிரட்டிவிடுகிறார். குணச்சித்திர சத்யராஜுக்கு மேலும் ஒரு நறுக்கான பாத்திரம். அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.


மர்மக் கொலைகள், அதிமுக்கியமான விஞ்ஞானியைக் கொல்லும் சதி ஆகியவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள ‘கெத்து’ நேர்த்தியான படமாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற பரபரப்பான திரைக்கதையை அமைப்பதில் ஏற்பட்ட சறுக்கலால் கெத்து கொஞ்சம் குறைவுதான்.


நன்றி - த இந்து