Showing posts with label கூஸ்பம்ஸ் (2015)-சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கூஸ்பம்ஸ் (2015)-சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 06, 2015

கூஸ்பம்ஸ் (2015)-சினிமா விமர்சனம்

டிகர் : ஜாக் பிளாக்
நடிகை :ஜில்லியன் பெல்
இயக்குனர் :ராப் லெட்டர்மேன்
இசை :டானி எல்ப்மேன்
ஓளிப்பதிவு :ஜேவியர் அக்வீரெஸ்ரோபே
தனது அம்மாவுடன் நியூயார்க் நகருக்கு வரும் நாயகன் டிலான் மினைட், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒடியா ரஷ் என்ற பெண்ணுடன் நட்பாகிறான். ஆனால், இது ஒடியா ரஷ்ஷின் அப்பா ஜாக் பிளாக்கிற்கு பிடிக்காததால், டிலானை எச்சரித்து விரட்டுகிறார். அன்றைய இரவு ஒடியா ரஷ்ஷின் வீட்டிலிருந்து அலறல் சப்தம் கேட்கிறது. இதனால் டிலான் அவள் வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கிறான். 

ஆனால், மீண்டும் ஜாக் பிளாக்கால் டிலான் விரட்டப்படுகிறான். ஜாக் பிளாக் வீட்டை விட்டு வெளியே சென்றதும், தன் நண்பனை அழைத்துக் கொண்டு ஒடியா ரஷ்ஷின் வீட்டின் பின்பகுதி வழியாக செல்கிறான் டிலான். அந்த சமயம், வீட்டினுள்ளே இருக்கும் புத்தக அலமாரியிலிருந்து வினோதமான சப்தங்கள் எழவே, அதிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்க்கிறான் டிலான்.

அந்த புத்தகம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைம் டிலான், அதனுடைய சாவியைக் கண்டுபிடித்து, அதை திறக்கிறான். திறந்த மறு நிமிடமே அதிலிருந்து மிகப்பெரிய மனிதக் குரங்கு ஒன்று வெளியே வந்து வீட்டை விட்டு ஓடுகிறது. இதைப் பார்க்கும் ஒடியா ரஷ், அந்த குரங்கின் பின்னால் சென்று விடுகிறார். என்ன நடக்கிறது என்று தெரியாத நண்பர்களும் பதட்டத்துடன் ஒடியா ரஷ் பின்னாடியே செல்கிறார்கள். 

அந்த குரங்கு டிலான், ஒடியா ரஷ் ஆகியோரை கொல்ல வரும் நிலையில், ஒடியா ரஷ்ஷின் அப்பாவான ஜாக்பிளாக் அந்த புத்தகத்தை திறக்கிறார். இதனால் அந்த குரங்கு மீண்டும் புத்தகத்தினுள் சென்று விடுகிறது. பின்னர் வீட்டிற்கு செல்லும் இவர்கள் அங்கு பொம்மை ஒன்று புத்தகத்தில் இருந்து வெளியே வந்து உட்கார்ந்திருப்பதை பார்க்கிறார்கள். அந்த பொம்மையை புத்தகத்தில் அடைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த பொம்மை வீட்டில் உள்ள அனைத்து புத்தகத்தையும் திறந்து விடுகிறது.

அதிலிருந்து வித்தியாசமான பூதங்கள், மிருகங்கள் உள்ளிட்ட பல வெளிவருகின்றன. புத்தகத்தைத் திறந்ததும் இப்படி நடக்கிறது? புத்தகத்தில் இருந்து வெளியான பூதங்கள், மிருகங்கள் மீண்டும் அடைக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இது ஒரு காமெடியான பேன்டஸி அட்வெஞ்சர் படம் என்பதால் லாஜிக் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கிறது. குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் சொல்லப்படும் ‘பெட் டைம் ஸ்டோரி’ டைப்பிலேயே இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்கள் டேரன் லேம்கே மற்றும் ஸ்காட் அலெக்ஸாண்டர். இவர்களின் கைவண்ணத்தில் உருவான திரைக்கதைக்கு தன் இயக்கம் மூலம் உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராப் லெட்டர்மேன்.

முந்தையை ஹாலிவுட் படங்களை ஞாபகப்படுத்துவது போல்தான் இதுவும் உள்ளது. இந்த படத்தில் புத்தகங்களை ஒவ்வொன்றாக திறக்க, அதிலிருந்து மிகப்பெரிய ஜந்துக்கள், ஆக்ரோஷமான விலங்குகள், வில்லத்தனமான பேய்ப்பட கதாபாத்திரங்கள் என படையெடுக்கின்றன. படத்தின் வேகமும், விறுவிறுப்பும் சற்று குறைவு. விஷுவல் எபெக்ட்ஸ், 3டி உருவாக்கம் போன்றவையே படத்தின் பெரிய பலம். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அதையும் தாண்டி நட்பு, காதல், சென்டிமென்ட், திகில் என பலவித அனுபவங்களையும் இப்படம் தருகிறது.

நடிகர்களின் பங்களிப்பு, டெக்னிக்கல் விஷயங்கள் போன்றவை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன. திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் பெரிதாக ரசித்திருக்கலாம். ஆனாலும், குழந்தைகளுடன் சென்று ஜாலியாக ரசித்துவிட்டு வருவதற்கு ஏற்ற படம்தான் இந்த ‘கூஸ்பம்ஸ்’. 3டியில் பார்ப்பது கூடுதல் அனுபவத்தைத் தரும்.

மொத்தத்தில் ‘கூஸ்பம்ஸ்’ பொழுதுபோக்கு.

-மாலைமலர்