Showing posts with label குடும்ப ஒற்றுமை. Show all posts
Showing posts with label குடும்ப ஒற்றுமை. Show all posts

Tuesday, May 13, 2014

கல்யாண யோகமும் குடும்ப ஒற்றுமையும் பெருக நீங்கள் போக வேண்டிய ஸ்தலம் எது?

அழகிய சிறிய கிராமம் அது. காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருப்புட்குழி என்று பதாகையில் எழுதி வைக்கப்பட்டுள்ள இடத்தைத் தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில் மேல்வெண்பாக்கம் என்று மற்றொரு பதாகை வழிகாட்டுகிறது. அந்தத் தெருவில் இறங்கினால் இருபுறமும் திண்ணைகள் கொண்ட பழைய கால வீடுகள். இவ்வூரில்தான் மஹாலஷ்மி சமேத ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் நான்கு யுகங்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பெருமாளைக் கண்டவுடன் கண்கள் ஆனந்த நீர் கொண்டு நிரம்பி ஆறாய்ப் பெருகுவது ஓர் அதிசய அனுபவம். இங்கு ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரதன்று சிறப்புக் கலச பூஜை, ஹோமம், பெருமாளுக்கு கலசாபிஷேகம் ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. ராகு, கேது தோஷ பரிகாரமாகவும் இத்தலம் விளங்குகிறது. 



சீதாதேவியைக் காட்டில் விட்ட பிறகு அவரை தரிசிக்க வருகிறார் அனுமன். அன்னை பவழம் பூ மரத்தடியில் அமர்ந்து இருக்கிறார். மரத்தில் இருந்த பூக்களெல்லாம் தரையில் உதிர்ந்துள்ளன. அவற்றைக் கொண்டு ஸ்ரீராமா என்று எழுதுகிறாள் அதனைக் காண முடியாத அளவிற்கு கண்ணில் நீர் நிரம்பி அன்னையின் மென்மையான கன்னங்களில் ஆறாகப் பெருகி ஓடுகிறது. இதனைக் கண்ட அனுமனுக்கு ஆச்சரியம். இதுவல்ல வோ ராம பக்தி. இப்படி பக்தி பண்ண சொல்லித் தாருங்கள் அன்னையே எனக் கேட்கிறார். ‘பாஷ்பவாரி பரிபூரணலோசனம் மாருதிம் நமதா ராட்ஷசாந்தகம்’ என்று அனுமன் சுலோகம் செல்கிறது. பக்திக்கு அடையாளம் இந்த ஆனந்தக் கண்ணீர்தான். 



இதே அனுமன்தான் தனது ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட மேல் வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும் பூஜித்துப் பலன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இப்பெருமாள் ப்ரம்மஹத்தி தோஷத்தைக்கூட நீக்கிய சக்தி வாய்ந்த பெருமாளாக இருப்பதால், பக்தர்களின் தெரிந்த, தெரியாத அனைத்துத் தோஷத்தையும் நீக்கி விடுவார் என்பது ஐதீகம். இப்பெருமாள் சன்னதி சுற்றுச் சுவர் முழுவதும் ராமாயண நிகழ்ச்சிகளின் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கின்றன. 



இக்கோயிலுக்கு 1957-ம் ஆண்டு விஜயம் செய்த காஞ்சி மகா பெரியவர் இங்கேயே மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்தார் என்றார் த. மணிவண்ணன். இவர் இக்கோவிலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலஷ்மி நாராயாண பெருமாள் சேரிடபிள் டிரஸ்டின் செயலர். 



இங்கே மஹாலஷ்மி சமேதராக ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் மூலவராக சாளக்கிராமத்தில் சுயம் திருமேனியாக காட்சியளிக்கிறார். பெருமாளின் இடது தொடையில் தாயார் அமர்ந்து இருந்தாலும், பெருமாளின் திருமுக மண்டலத்திற்கு அருகில் தாயாரின் அழகிய திருமுகம் இருப்பது ஆபூர்வமான காட்சி. இப்பெருமாளின் கழுத்தில் மாலையாகக் காட்சி அளிக்கும் பாம்பின் ஐந்து தலைகளும் கழுத்தணியின் பதக்கம் போல் மார்பில் காணக் கிடக்கும் கோலம் அற்புதம். 



இந்தப் பெருமாளும் திருப்பதி பெருமாளும் சம காலத்தினர் என்பது வரலாறு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பதினோரு நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் திகழ்ந்திருக்கிறது. அஷ்ட லஷ்மிகளுக்கும் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்நியர் படையெடுப்பு காரணமாக சிதிலமடைந்த இத்திருக்கோவிலில் காட்சி அளித்த அஷ்ட லஷ்மிகளின் சக்தியும் இங்கு ஒரே லஷ்மியிடம் இணைந்துள்ளதாக ஐதீகம். 



ஸ்ரீராமானுஜர் தனது காலத்தில் இங்கு விஜயம் செய்துள்ளார். இத்திருக்கோவிலில், தேவர்களும், முனிவர்களும் சூட்சும ரூபமாக இப்பெருமாளுக்கு நித்ய ஆராதனை செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் ஆண்டாளின் அருளிச் செயலில் நன்மக்களைப் பெற்று வாழ்வரே, என்பதை நிரூபிப்பவர் இப்பெருமாள். அதனால் இப்பெருமாளுக்கு பிள்ளைக்காரன் சுவாமி என்பது காரணத் திருநாமம். பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு இணைந்தோ, தனித்தோ வந்தால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை. 



புது மணத் தம்பதிகள் இந்தப் பெருமாளைப் தரிசித்து அந்நியோன்னிய பலனைப் பெறலாம். குழந்தை வரமும் கேட்டுப் பெறலாம். நெய் தீபம் ஏற்றுதல் இங்கு விசேஷம். வெள்ளிக் கிழமைகளில் நீவேதனம் செய்யப்படும் பால் பாயசம் உடனடியாகப் பலனளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
டீக்கடை கூட இல்லாத கிராமம்தான். ஆனால் ஆறு கால பூஜை நடை பெறும் இக்கோவிலில் காலையில் மிளகுப் பொங்கல் பிரசாதமும், ஹோமம் பூஜை முடிந்த பின் மதிய உணவாக புளியோதரைப் பிரசாதமும் அளிக்கப்படுகின்றன. இங்கு நடந்த ஹோமத்து அக்னி வலம் சுழித்து எழுந்தது இக்கோவிலின் புனிதத்திற்கு சான்று என்று சொல்லப்படுகிறது. 


நன்றி - த ஹிந்து