Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Monday, April 22, 2013

கரூர் உப்பிடமங்கலம் பெண் அர்ச்சகர் சிவராணி பேட்டி

நம்மால் முடியும்!

கருவறையில் பெண்கள்!

பூஜைக்கு வந்த மலரே...

பூஜை செய்யும் உரிமையை பெண்களுக்கும் தர வேண்டும் என வலியுறுத்தும் வித்தியாசமான கிராமம் உப்பிடமங்கலம்... ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கும் இக்காலத்தில் கரூர் உப்பிடமங்கலம் கிராமத்தில் உள்ள கோயில் நிர்வாகியான சிவராணி, தன்னைப் போன்று பல பெண் அர்ச்சகர்களையும் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுத்துவது ஒரு சிறந்த முன்னுதாரணம்.
மார்கழி காலைப்பொழுது, நகரப் பேருந்தை விட்டிறங்கி கிராமத்து மண்ணில் கால் பதிக்கிறோம். காற்றில் மிதந்து வருகின்றன பன்னிரு திருமுறைப் பாடல் வரிகள். எதிர்ப்படும் நபரிடம் கேட்கிறோம்.
அய்யா... இங்கு பெண்களே அர்ச்சகர்களாக?..." அடியார்க்கு எளியர் கோயிலை அடையாளம் காட்டினார் அவர்.
அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்
கொற்றங் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு படியின் மிசைப்
பெற்றான் சாம்பானுக்கு பேதமுறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை."

இன்பத் தேனாய் நம் செவிகளுக்குள் வந்து பாய்கின்றன. இது ஓலைச்சுவடியில் சிவபெருமானே, தம் கைப்பட எழுதிய பாடல் எனச் சொல்லப்படுகிறது.
கோயிலை வந்தடைகிறோம். உட்பிராகரத்தில் சுவாமியின் வலதுபுறம், சிறிய ஐம்பொன் சிலைகளாக நால்வரான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தருடன், அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். எதிரே உற்சவ மூர்த்தியாக கிளிசேர் மொழிமங்கை உடனமர் அடியார்க்கு எளியர் (சேயிலைச் செல்வர்) ஐம்பொன் சிலைகளாக அருள்பாலிக்கிறார். அதனைக் கடந்தால் எதிரே தெரிவது கிழக்கு நோக்கிய கருவறை. ஈசன், லிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். அந்தக் கருவறையில் இடது கையில் மணியும், வலது கையில் விபூதி கற்பூரத் தட்டுமாக ஒரு பெண்!
தமிழில் மந்திரங்களைப் பாடி ஈசனுக்கு அர்ச்சனை செய்கிறார் கோயிலின் பெண் அர்ச்சகரான சிவராணி. இக்கோயிலின் நிர்வாகியும் அவரே.
ஈசன் கருவறையில் ஒரு பெண்ணாகிய நீங்கள் எப்படி?" என்றோம்.

புன்முறுவலுடன் எல்லாம் ஈசன் செயல். நானும் என் கணவரும் சிவனடியார்கள். சிவன் கோயில்களில் உளவாரப் பணி செய்து வருகிறோம். ஒருமுறை எங்கள் ஊரின் அருகிலுள்ள பாழடைந்த சிவன் கோயிலில் உளவார பணி செய்த போது தொடர்ந்து எதிர்ப்புகள் ஏற்படவே பணியைத் தொடர முடியவில்லை. கோவையிலுள்ள மணிவாசக மன்றத்திலுள்ள எங்கள் குருநாதரிடம் கூறி வருந்தினோம்.
சில நாட்களில் குருநாதரிடமிருந்து தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. ‘எங்களிடம் சிவலிங்கம் ஒன்று உள்ளது. எடுத்து வருகிறோம். பிரதிஷ்டை செய்ய இடம் ஏற்பாடு செய்என்றார். எங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்தோம். இரவோடு இரவாக வேலை ஆரம்பித்தோம். கருவறைக்குத் தோண்டிய இடத்தில் திருக்கைலாய மலை உச்சியைப் போன்றே ஒரு பாறை இருந்தது. சிவனடியார்கள் பலர் வந்து பார்த்து வியந்தனர். ஒரு ரூபாய்கூட கூலி கொடுக்காமல் கொத்தனார் மற்றும் பெண்ணடியார்களைக் கொண்டுக் கட்டப்பட்ட கோயில் இது. தினமும் நான்கு கால பூஜைகள் உண்டு.
என் கணவர் வேலைக்குச் சென்று விடுவதால் நானே பூஜை செய்கிறேன். முதலில் எதிர்ப்புகள் வந்தன. இங்கு வரும் பெண்களையும் பூஜை செய்ய அனுமதித்தேன். எங்கள் ஈசன் முன் சாதிமத பேதமின்றி அனைவரும் சமம் என்பதை இங்கு நிறுவியுள்ளோம்.
பி. ஆங்கில பட்டதாரியான நான் சைவசித்தாந்தம் இரண்டு வருடம், தமிழில் குடமுழுக்கு வேள்விக்கான படிப்பு, தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலமாக இரண்டு வருட அர்ச்சகர் படிப்பு ஆகியவை கற்று பணியாற்றி வருகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமானவர் திருநீலநக்க நாயனார். அவரது மனைவியார் கருவறையில் சிவபூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார். ஆக, இறைவன் கருவறையில் பெண்கள் இருந்து வழிபடுவது அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இடைக்காலத்தில் ஏதும் இல்லாதிருக்கலாம். பெண்களும் அர்ச்சகப் பணியில் ஈடுபடலாம். அதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். முழுவதும் தமிழிலேயே மந்திரங்களைப் பாடி வழிபடுவது எங்களின் தனிச்சிறப்பு. மனம், வாக்கு, மெய் (உடல்) மூன்றும் தூய்மையாக இருந்தால் போதும்!" எனச் சொல்கிறார் சிவராணி.


நன்றி - கல்கி

Sunday, May 29, 2011

ஜெ வின் முதல் தலை வலி - கரூரைக் கலக்கும் உர ஊழல்... பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !

http://tamilnews.ebest.in/images/news/fertibag-d.jpg

கரூரைக் கலக்கும் உர ஊழல்...

பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை 


தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.


இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில்  முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார். 

''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.

'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.

தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.

கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.

அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.

பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி - பசுமை விகடன்