Showing posts with label கதகளி. Show all posts
Showing posts with label கதகளி. Show all posts

Sunday, January 10, 2016

'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பாண்டிராஜ் பேட்டி

‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அடங்குவதற்குள் தனது அடுத்த படமான 'கதகளி'யில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வந்தவரிடம் உரையாடியதிலிருந்து…




'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..
முதன்முறையாக என்னிடமிருந்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். நம்முடைய பேச்சில் ‘கதகளி ஆட்டம் ஆடிட்டாண்டா’ என்று சொல்லுவோம் இல்லையா, அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்தேன். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒருவனின் வாழ்வில் விதி விளையாடுகிறது. அதற்கு அவன் ஆடும் ஆட்டம்தான் இப்படம். ஒரு பூனை துரத்தத் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கு மேல் நம்மால் ஒட முடியாது என்று தெரிந்தவுடன் திரும்பி நம்மைத் தாக்கப் புலி மாதிரி பாயும். அப்படி ஒருவனுடைய கோபம், ஆக்ரோஷம், ருத்ர தாண்டவம்தான் 'கதகளி'.



முதன்முறையாக மாஸ் படம் பண்ணிய அனுபவம்?
என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்துக்கு நான் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்தச் சம்பவத்தையும் கதையையும் பார்த்தீர்கள் என்றால், முன்னுக்கு வர நினைக்கும் ஒரு நாயகனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு படத்தை விஷால் ஒப்புக்கொண்டதே எனக்கு ஆச்சர்யம்தான். அவர் ‘பாண்டியநாடு' படம் பண்ணியிருப்பதால், இப்படம் அவருக்கு எப்படி வரும் என்று தெரியும்.



அனைவருக்குள்ளும் ஒரு நாயகன் இருக்கிறான். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஒரு ஹீரோயிசம்தான் இப்படத்தில் இருக்கும். 40 பேரை அடிக்கிறது, 20 நடனக் கலைஞர்களோடு ஆடுவது, சுமோ பறப்பது, இப்படி எதுவுமே இதில் இருக்காது. இது விஷால் படமா, பாண்டிராஜ் படமா என்று கேட்டீர்கள் என்றால் இது இருவரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.



இனிமேல் மாஸ் ஹீரோ படங்கள் மட்டும்தானா?
குறைந்த பட்ஜெட்டிற்குள் ஒரு நல்ல குழந்தைகள் படமோ, குடும்ப படமோ பண்ணிக்கொண்டுதான் இருப்பேன். புதுமுகங்களை வைத்துக் கூட படம் பண்ணுவேன். மாஸ் படங்களின் வெற்றிக்கு மயங்கி அதன் பின்னால் கண்டிப்பாகப் போக மாட்டேன். குடும்பம் படம், த்ரில்லர் படம் இப்படி ஒவ்வொரு தளத்திலும் படங்கள் பண்ணிக்கொண்டிருப்பார் மணிவண்ணன் சார். அவரை மாதிரி முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்பதுதான் என் ஆசை.
‘பசங்க 2' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
வடபழனியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கப் போனபோது, இறுதியில் ‘A Pandiraj Film' என போடும்போது கைதட்டினார்கள். மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அந்தக் கைதட்டலைக் கேட்கும்போது என்னை அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். மக்கள் வெளியே பார்க்கும்போது, ‘படம் நல்லாயிருக்கு சார்’ என்று சொல்லும்போது ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.




‘பசங்க 3' எப்போது எனக் கேட்கிறார்கள், நல்ல தருணத்தில் அப்படத்தையும் பண்ணுவேன். பொதுவாகவே, ரசிகர்களுக்கு ஒரு படத்தில் கருத்துச் சொன்னால் பிடிக்காது. ஆனால், இப்படத்தில் நிறைய கருத்து சொல்லியிருக்கிறோம், அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இனிமேல் எந்த ஒரு படம் பண்ணினாலும், அதில் ஒரு நல்ல விஷயம் இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன்.



தயாரிப்பாளர் பாண்டிராஜைக் காணோமே?
இந்த வருடம் கண்டிப்பாக எனது தயாரிப்பு நிறுவனத்தில் ஓரிரு படங்கள் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். மற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. அப்படித் தயாரிக்க முடியாமல் போனால் கூட, ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிட்டுவிடுவோம். எனது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து கண்டிப்பாக ஒரு நல்ல படம் தயாரிப்பாகவோ வெளியீடாகவோ இருக்கும். அதை உறுதியாகச் சொல்லுவேன்.



‘இது நம்ம ஆளு' வெளியீட்டுப் பணிகள் எந்த அளவில் இருக்கிறது?
‘இது நம்ம ஆளு' இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். காதலர் தினத்துக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கான பின்னணி இசைக் கோப்பு பணிகளெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் கையில்தான் எல்லாம் இருக்கிறது, என் கையில் எதுவுமே இல்லை.


THANX - THE HINDU