Showing posts with label எங்க வீட்டுப் பிள்ளை (1965)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label எங்க வீட்டுப் பிள்ளை (1965)- சினிமா விமர்சனம். Show all posts

Sunday, June 07, 2015

எங்க வீட்டுப் பிள்ளை (1965)- சினிமா விமர்சனம்

தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது. பாடல்கள் வாலி, ஆலங்குடி சோமு. இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தயாரிப்பு விஜயா புரொடக் ஷன்ஸ், நாகிரெட்டி, சக்ரபாணி. இயக்கம் சாணக்யா.
சிக்கல் இல்லாத தெளிவான கதை, அளவான வசனங்கள், உறுத்தல் இல்லாத காதல் காட்சிகள், மிகையில்லாத நடிப்பு. அற்புதமான படத்தொகுப்பு. தெவிட்டாத இசை. சுவையான காட்சிகள். எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரக் கதாநாயகனுக்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாக இல்லாமல் திரைக்கதைக்கு ஏற்ற காட்சிகளை மட்டுமே வைத்து சுவை குன்றாமல் கொண்டு போயிருக்கிறார்கள். பாடல்களில் ‘பெண் போனால்… இந்தப் பெண் போனால்’ என்ற பாட்டு மட்டுமே சுமார். அதுகூட இல்லாவிட்டால் அந்தக் காலத்து தியேட்டர் பீடா ஸ்டால்கள் பிழைப்பது எப்படி?
பூஞ்சோலை ஜமீன்தார் குடும்பக் கதை. ஜமீன்தாருக்கு ஒரு மகள், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பையன்கள். பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் இளைய மகன் காணாமல் போய்விடுகிறான். புத்திசாலியான ஜமீன்தார் தம்பதி தங்களிருவரின் புகைப்படங்கள் பொருத்திய லாக்கெட்டை இரண்டு மகன்களுக்கும் முதலிலேயே போட்டுத்தான் கூட்டிச் செல்கிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு அதை ஆதாரமாக வைத்து அவர்கள் இணைகிறார்கள். சின்ன மகன் காணாமல் போன ஏக்கத்தில் ஜமீன்தாரிணி இறந்துபோக, அவர் இறந்த ஏக்கத்தில் ஜமீன்தார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு அவரும் இறந்துவிடுகிறார். ஜமீன்தாரின் பெண்ணுக்கே தனது தம்பியைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறாள் இளைய ஜமீன்தாரிணி.
ஜமீன்தாரின் மகன் ராமுவைப் படிக்க வைக்காமல், பயந்தாங்கொள்ளியாக வளர்த்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார் நம்பியார். கிராமத்தில் குடியானவர் வீட்டில் வளரும் இன்னொரு எம்.ஜி.ஆர். நன்றாகப் படித்ததுடன் அடி தடி சண்டைகளில் ஆர்வமுள்ளவராக வளர்கிறார். விவசாயத்தில் நாட்டம் போகவில்லை அவருக்கு. அந்த ஊருக்குப் பக்கத்தில் சங்கரன்காடு என்ற கிராமத்தில் பழைய ஜமீன்தாரிணி அம்மா புத்தி பேதலித்து, பேத்தியுடன் தனியாக வாழ்கிறார். அவர்தான் இரட்டையர்கள் புதிரை அவிழ்த்து கிளைமேக்ஸில் அனைவரையும் இணைத்து வைக்கிறார்.
குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.
தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான். இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.
வடிவேலு இக்காலத் திரைப்பட ரசிகர்களுக்கு அளித்திருக்கும் ஒரு பஞ்ச் டயலாக், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’. அதை இந்தத் திரைப்படத்தில் கேட்கலாம். தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.
நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.
ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான். இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்? ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.
எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.
படங்கள் உதவி: ஞானம்


நன்றி -த இந்து


  • Sekar  

    அருமயான பொழுது போக்கு படம் எல்லா பாடல்களுமே ஹிட் தான் மலருக்கு தென்றல் பகையானால் ..பி சுஷீலாவும் எல் ஆர் ஈஸ்வரியும் ஜமாய்திருந்தார்கள்..இந்தப் படத்தை ஆள் மாறாட்ட கருவைத் தழுவி கமலை வைத்து 'தூங்காதே தம்பி தூங்காதே என்று எடுத்தார்கள் ...

    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       


    • SUNTHAR  

      பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து மண்ணில் வைத்ததை மங்கையுனது கண்ணில் வைத்தானோ....பெண் போனால் ,,அருமையான ரொமான்டிக் டுயட் அல்லவா ..வாலி எழுதினார் செம ஹிட் படம்

      about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


      • Sothi  

        இத்திரைப்படத்தின் TMS பி சுஷீலா பாடல்கள் இலங்கை வானொலியில் பிரமாதமாக ஒலித்தன //அத்தானின் காதை கடிச்சான் // எம் ஜி ஆர் நடிப்பும் பிரமாதம் சரோஜாதேவி பதுமை போல வந்தார்

        about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


        • Sothi  

          முதல் வெளியீட்டின் போது பாஎக்கவில்லை ...ஆனால் 1981 இல் பார்த்தேன் இலங்கையில் கருப்பு வெள்ளை புதுப் படங்களின் நடுவே வசூலை நிலைநாட்ட எம் ஜி ஆர் ரின் பழைய படங்களை திரையிடுவார்கள் அப்படி திரையிட்டபோது 1981 இல் தெகிவளை கொன்கோர்ட் திரையரங்கத்தில் ஜனத்திரள் காட்சிகளாக ஓடியது டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்து பின்பு ஒரு வழியாக காணும் வாய்ப்பு கிடைத்தது.. சிங்களவர்களும் அந்நாளில் எம் ஜி ஆர் படங்களுக்கு குவிந்து விடுவார்கள் ///ஏகப்பட்ட விசில் ..காதைப் பிளக்கும் கரகோஷம் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டு கூட பிரபலமானது ..சிங்களவர்களும் முணு முணுக்கும் பாடலானது அப்படி ஒரு படம் கூட எடுத்தார்கள் ...மறக்க முடியாத அந்நாளைய நினைவுகள் ..அப்பப்பா !

          about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



          • ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள்? ஆஹா நான் அவர்கள் அங்கு வீட்டுவேலை,தோட்டவேலை செய்யும் நபர்கள் என்றல்லவா நினைத்தேன்.

            about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



            • எங்க வீட்டுப் பிள்ளை முதல் நாள் முதல் காட்சி அடித்துப் பிடித்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. விஜயா பிக்சர்ஸ்-ஐத தொடர்ந்து எ.வி.எம், ஜெமினி அனைவரும் எம் ஜி.அரைக் கதாநாயகனாக புக் செய்து படமெடுத்தனர். எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதில் இந்தப் பாடலுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு. ஆனால் மாறி விட்ட இன்றைய சூழ்னிலையில் இந்தப் படம் மீண்டும் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
              Points
              665

              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



              • முதலில் தெலுங்கில் ராமுடு பீமுடு என்று NTR ஜமுனா எல்.விஜயலட்சுமி நடித்து சாணக்யா இயக்கத்தில் ராமா நாயிடு தயாரிப்பில் வந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் . சென்னையில் காசினோ, மேகலா, பிராட்வே 3 தியட்டர்களிலும் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு ஆக்க்ஷன் ஹீரோ என்று அறியப்பட்ட MGR வில்லன்களிடம் உதை வாங்கும் ஒரு பயந்தாங்கொள்ளியாக முதல் முறையாக தோன்றியது படத்தின் இன்னொரு சிறப்பம்சம். படத்தில் சாட்டையை சுற்றியது போலவே திரைக்கு பின்னால் சாட்டையை சுற்றினாரோ என்னவோ தெரியாது இந்த படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பெரும்பான்மை பாடல்கள் சிரஞ்சீவித்துவம் பெற்றன. ரீமேக் செய்த அத்தனை மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்தது. இதே தயாரிப்பாளர்கள் நௌஷாத் இசையில் திலிப்குமார்-மும்தாஜ்- சைரா பானு நடிக்க ஹிந்தியில் ராம் அவுர் ஷ்யாம் எடுத்ததில் அதுவும் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. மலையாளிகளும் தங்கள் பங்குக்கு அஜயனும் விஜயனும் என்ற பெயரில் எடுத்து அதுவும் ஹிட்.