Showing posts with label இருவர் ஒன்றானால் - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label இருவர் ஒன்றானால் - திரை விமர்சனம். Show all posts

Thursday, June 04, 2015

இருவர் ஒன்றானால் - திரை விமர்சனம்


எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் உலகில் காதலும் அது ஏற்படுத்தும் உணர்வுகளும் மட்டும் அப்படியே இருக்கும். இந்தக் கோணத்தில் காதலை விரிவாக அலச முயன்றிருக்கிறார் இயக்குநர் அன்பு ஜி.
அனைவரிடமும் இயல்பாகவும் இனிமையாகவும் பழகும் கல்லூரி மாணவன் கவுசிக். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவனைச் சக மாணவிகளில் சிலர் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலை அவனிடம் வெளிப்படுத்தும்போது பதற்றப்படாமல் “உங்ககூட ஃபிரெண்டாத்தானே பழகினேன்” என்று உண்மையைப் பேசுகிறான்.
அப்படிப்பட்டவன் ஓவியா என்ற பெண்ணைப் பார்க்கிறான். தன் மனசுக்குப் பிடித்த பெண் கிடைத்துவிட்டதாக எண்ணி அவள் வீட்டின் முன் தவமிருக்கிறான். அவளைப் பின்தொடர்கிறான். ஒருதலையாக அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். தொல்லை தாங்காமல் அவனைத் திட்டி, கன்னத்தில் அறைகிறாள் ஓவியா. அதன் பிறகு அவன் காணாமல் போகிறான். தன்னை சுற்றிச் சுற்றி வந்தவன் இல்லாமல் போன வெறுமை அவளை வாட்டுகிறது. வெட்கத்தை விட்டு அவனை போனில் அழைக்கிறாள். ஓவியாவின் அழைப்பை ஏற்று கவுசிக் அவளைச் சந்திக்கச் சென்றானா? அவர்களது காதல் என்னவானது என்பதுதான் படம்.
கல்லூரி வாழ்க்கை சட் டென்று கடந்துபோகிற வானவில் வாழ்க்கை; அதில் மாணவர்கள் காதலுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற கோணத்தில் முதல் பாதி கடந்துபோகிறது. பள்ளியில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் கல்லூரியிலும் நண்பர்களாகத் தொடர்வது செயற்கையாக இருக்கிறது.
“நீ ஓகேன்னு சொல்ற வரைக்கும் உனக்காக காத்திட்டிருப்பேன்” என்று உருகும் கவுசிக்கை விரும்பிய தோழிகள் பிறகு அவனது நண்பர்களையே காதலிப்பதும், அதை கவுசிக் பெரிதுபடுத்தாமல் அவர்களுடன் நட்பைத் தொடர்வதும் இயல்பான பதிவு.
இரண்டாம் பாதியில் காதலின் தீவிரம் திரைக்கதையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. கவுசிக் - ஓவியா இடையிலான காட்சிகள் யூகிக்கும் விதமாக இருப்பதுடன் சினிமாத்தனமும் பூசிக்கொண்டிருக்கின்றன. என்றாலும் சின்னச் சின்ன வசனங்கள் மூலம் அறிமுக நடிகர்களை ஈடுபாட்டுடன் நடிக்க வைத்ததால் கவுசிக் - ஓவியா காதலுக்கு போதிய நம்பகத் தன்மையும் அழுத்தமும் கிடைத்துவிடுகிறது. இருப்பினும் இரண்டாம் பாதிக் காட்சிகள் செல்வராகவன் பாணியில் அமைந்துவிட்டதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
கவுசிக்காக நடித்திருக்கும் பி.ஆர். பிரபு பக்கத்து வீட்டுப் பையனைப்போலத் துறுதுறு வென்று கவர்கிறார். ஓவியாவாக நடித்திருக்கும் கிருத்திகா மாலினி, தன்னைக் காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்பவர்களால் எரிச்சலடையும் பெண்ணாகவும் பிறகு கவுசிக் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்குப் பிறகு அவன் தன்னைக் காண வராதபோது உள்ளுக்குள் காதல் மலர்ந்திருப்பதை உணர்வதும் வாடுவதுமாக உணர்வுகளின் வண்ணங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது தோழியாக நடித்திருக்கும் ஷ்ரவ்யாவின் நடிப்பும் நேர்த்தி.
தெரிந்த நடிகர்கள் என்று யாரும் இல்லாதது, நடிகர்களில் பெரும்பான்மையானவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது என இரண்டரை மணி நேரப் படம் முழுக்க இளமை பொங்கி வழியக் காரணமாக இருக்கிறது நட்சத்திரத் தேர்வு.
பொருத்தமான நட்சத்திரத் தேர்வுகள், கவர்ச்சியோ ஆபாசமோ இல்லாமல் காட்சிகளை அமைத்தது என்று கவரும் படத்தின் க்ளைமாக்ஸ் மட்டும் மனதில் ஒட்டாத நகைச்சுவைக் காட்சியாகக் கடந்து போய் விடுகிறது.
காதலில் விழும் கதாபாத்திரங்கள் கனவுகளைச் சுமந்தபடி சாலையில் பயணிக்கும் அழகையும் அவர்களது தனிமையையும் அதிக பரபரப்பு இல்லாமல் இயல்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. குரு கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் தேறாவிட்டாலும் பின்னணி இசை காப்பாற்றி விடுகிறது.
அதிகத் திருப்பங்கள் தேவைப்படாத, பம்மாத்துக்கள் இல்லாத காதல் கதையை இளம் நடிகர்களைக் கொண்டு படமாக்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் அன்பு ஜி.





thanx - the hindu