Showing posts with label இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, March 30, 2015

இரவும் பகலும் வரும் - சினிமா விமர்சனம்

இரவும் பகலும் வரும்

காவல் துறையினரே திருடர்களாக இருந்தால், பொதுமக்களின் கதி என்னவாகும் என்பதுதான் "இரவும் பகலும் வரும்' படத்தின் கதை.
 நாயகன் மகேஷ், வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக சிறு சிறு தவறுகள் செய்துகொண்டு பொறியியல் படித்துவருகிறார். இதனிடையே ஏரியாவில் சுற்றும் அனன்யாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அம்மா இல்லாத பிள்ளையாக வளரும் அவரின் தவறுகள் எல்லை மீறும்போது வீட்டை விட்டே துரத்தப்படுகிறார்.
 வெளியில் வந்தவர் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தில் சேர்கிறார். ஏரியாவில் மேஜிக் செய்வதுபோல கூட்டத்தைக் கூட்டிவிட்டு கொள்ளையடிக்கும் கூட்டம் ஆளில்லாத வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கிறது. அப்படி ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது மகேஷை திருடனாகப் பார்க்கிறார் அனன்யா. இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவர் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷ்.
 திருடர்கள் எப்படியெல்லாம் திருட வருவார்கள் என்று தான் சார்ந்திருக்கும் சமூக அமைப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் அனன்யா. இதனால் கொள்ளையடிக்கும் இடத்தில் பொதுமக்களாலேயே கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்படுகின்றனர். இந்தச் சம்பவம் போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷுக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அனன்யாவை பழி தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவரே போலீஸ் ஸ்டேஷன் சென்று முக்கியமான திருடனை எனக்குத் தெரியும் என்று மகேஷைப் பற்றிச் சொல்கிறார்.
 இந்தக் கொள்ளைக் கூட்டத்தில் மகேஷ் சேர்ந்தது ஏன்? போலீஸ் அதிகாரி ஏ.வெங்கடேஷ் அனன்யாவைப் பழிவாங்கினாரா? மகேஷின் காதல் என்னவானது என்பது மீதிக் கதை.
 கதைப்படி நாயகன் மகேஷ்தான் என்றாலும், கதையை விறுவிறுப்பாக நகர்த்துவது இயக்குநர் ஏ.வெங்கடேஷின் முரட்டுத்தனமான நடிப்புதான். அனன்யா வழக்கமான நாயகி. இரண்டு டூயட்டுக்கு மகேஷுடன் ஆடிவிட்டுப் போகிறார்.
 திரைக்கதையைச் சீராக அமைக்காமல், ஆங்காங்கே தாவித் தாவிச் செல்வது போன்ற உணர்வைத் தருவதால் படத்துடன் ஒன்றவைக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர் பாலாஸ்ரீராம்.
 "இரவும் பகலும் வரும்'தான் -
 ஆனால், இப்படி வருமா?  நன்றி - தினமணி