Showing posts with label இங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி). Show all posts
Showing posts with label இங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி). Show all posts

Wednesday, June 17, 2015

இங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)

ஒரு வாசகர் “சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றை calamity அல்லது catastrophe என்னும் சொற்களில் எதை வைத்து வர்ணிக்கலாம்?” என்று கேட்கிறார்.
சுனாமியோ நிலநடுக்கமோ ஏற்படும்போது இப்படியெல்லாம் வர்ணித்துக்கொண்டிருக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக வழி தேடுவதுதான் புத்திசாலித்தனம்.
calamity, catastrophe ஆகிய இரண்டுமே disastersதான். அதாவது பேரிடர்கள். எதிர்பாராத விதத்தில் சூழலைப் புரட்டிப் போடுபவை. ஒரு வார்த்தைக்குப் பதிலாக இன்னொரு வார்த்தையைப் பயன்படுத்தினால் தவறில்லை. ஆனால், கடந்த காலப் பயன்பாடுகளை மனதில் கொண்டால் calamity என்ற வார்த்தை அந்த அதிர்ச்சியான நிகழ்வையும் அதைத் தொடரும் மாபெரும் சோகத்தையும் குறிக்கிறது.
Catastrophe என்பது மேலும் கொஞ்சம் அழுத்தமான வார்த்தை. அதாவது, அடுத்தடுத்து சுனாமிகளோ, நிலநடுக்கங்களோ ஏற்பட்டு ஒரு பகுதியையே புரட்டிப் போட்டால் அதைக் குறிக்க catastrophe என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்ல, கொஞ்சம் பரவலான பகுதியில் அது நடக்கும்போது catastrophe. விமான விபத்து என்பது disaster அல்லது calamity.
மொழிக் காதல்
“மொழியை ஆழமாக நேசிக்கும் சிலர் வார்த்தைகளைக் கொண்டு அழகாக விளையாடுவார்கள். இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான உருவாக்கங்களை ஆங்கிலத்தில் lexophile என்பார்கள். உங்கள் பங்களிப்பையும் எழுதி அனுப்பலாமே’’ என்று வாசகர்களைக் கேட்டிருந்தேன்.
வந்திருந்த விடைகளில் எஸ்.சங்கரநாராயணன் என்பவர் எழுதியவை எனக்குப் பிடித்தது. The sudden death of the King gave birth to so many problems. Raju was booked for breaking and entering the library. (முதல் வாக்கியத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தால் இன்னும் சுவையாக இருக்குமோ? - The sudden death of King, who was childless, gave birth to many problems).
To read a dictionary upside down is meaningless என்று எழுதி அனுப்பியுள்ள வாசகமும் ரசிக்கத்தக்கதுதான்.
ADJECTIVES DEGREES
Adjective என்பது noun- ஐ விவரிக்கும் சொல். நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? ஒப்பிடுவதற்கு இந்த adjective- ஐத்தான் பயன்படுத்துவோம்.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது adjectives- ல் மூன்று வகை உண்டு.
Positive என்றால் ஆக்கப்பூர்வமான என்ற அர்த்தத்தில் குறிப்பிடுவோம். ஆனால், ஒரு adjective என்பது positive என்றால் அதில் ஒப்பிடுதல் இல்லை என்று அர்த்தம். அதாவது, இதில் நீங்கள் யாரையும், யாருடனும் ஒப்பிடவில்லை. எதையும், எதனுடனும் ஒப்பிடவில்லை.
Harini is an intelligent girl.
Jack Fruit is a sweet fruit.
He made a fast revision.
இந்த வாக்கியங்களில் intelligent, sweet, fast ஆகியவை adjectives. இவற்றில் எந்த ஒப்பிடுதலும் இல்லை. அதாவது ஹரிணி ஒரு புத்திசாலியான சிறுமி. அவ்வளவுதான். யாரைவிட புத்திசாலி? எப்படிப்பட்ட புத்திசாலி? இதெல்லாம் இந்த வாக்கியத்தில் கொடுக்கப்படவில்லை.
இந்த வாக்கியங்கள் வேறுமாதிரியும் இருக்கலாம்.
Harini is more intelligent than Swetha.
Jack Fruit is sweeter than banana.
He made a faster revision than Lakshmi.
இந்த வாக்கியங்களில் ஹரிணி புத்திசாலி என்பது மட்டுமல்ல, அவள் ஸ்வேதாவைவிட புத்திசாலி. பலாப்பழம், வாழையைவிடப் இனிப்பான பழம். லட்சுமியைவிட அவன் வேகமாக ரிவைஸ் செய்தான்.
ஆக, இவற்றிலெல்லாம் adjectives தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதுபோன்ற adjectives- ஐ comparative என்பார்கள்.
மூன்றாவதாக ஒரு வகை உண்டு. இதுவும் ஒப்பிடல்தான். ஆனால், ஒன்றை மற்ற ஒன்றோடு மட்டும் ஒப்பிடாமல் பலவற்றுடன் ஒப்பிடுதல் நடக்கும்.
Harini is the most intelligent girl of all.
Jack Fruit is the sweetest fruit.
He made the fastest revision of all.
மேற்படி வாக்கியங்களில் மற்ற எதையும்விட அல்லது மற்ற யாரையும்விட என்ற அர்த்தம் புலப்படுகிறது அல்லவா? இதுபோன்ற adjectives- ஐ superlative என்போம்.
சில adjectives- ன் மூன்று வடிவங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
Tall Taller Tallest
Short Shorter Shortest
Fast - Faster - Fastest
Sweet Sweeter Sweetest
அதற்காக எல்லா adjectives- ம் er est ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டுதான் பிற வடிவங்களை எடுக்குமென்று சொல்லிவிட முடியாது. கீழே சில எடுத்துக்காட்டுகள் உள்ளன.
Beautiful - More beautiful- Most beautiful
Difficult- More difficult- Most difficult
Essential- More essential- Most essential
சில வாக்கியங்களுக்கு காவிய அழகு கூட்டுவதற்காக, இலக்கணத்தை மீறிச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒன்றாக, தன் உயிர் நண்பன் ப்ரூட்டஸ் தன்னைக் கத்தியால் குத்தியதை ஜூலியஸ் சீஸர் The most unkindest cut of all என்கிறார் ஷேக்ஸ்பியர்.
பிரம்மச்சாரிகளின் வகைகள்
திருமணமாகாதவர்களை Bachelor என்கிறோம். திருமணமாகாத பெண்களை என்னவென்று குறிப்பிடலாம்? இது ஒரு வாசகரின் கேள்வி.
Spinster என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ஆனால், பொதுவாக அதிக வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பெண்களைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள்.
Bachelor என்றால் அவர் திருமணமாகாதவர், அவ்வளவே. அவர் இளைஞர், நடுவயதுக்காரர், முதியவர் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
‘திருமணம் தேவையில்லை’ என்று முடிவெடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்களை ‘Confirmed Bachelor’ என்றோ, ‘Lifelong Bachelor’ என்றோ குறிப்பிடலாம்.
அப்படியானால், திருமணத்துக்குத் தயாராக இருந்தும் திருமணமாகாமல் இருக்கும் ஆண்களை எப்படிக் குறிப்பிடலாம்? இருக்கவே இருக்கிறது ‘Eligible Bachelor’ என்ற வார்த்தை.
தொடர்புக்கு- [email protected]


நன்றி -த இந்து