Showing posts with label அரியலூர்மாவட்டத்தையே அச்சுறுத்தும் சிமெண்ட் ஆலை. Show all posts
Showing posts with label அரியலூர்மாவட்டத்தையே அச்சுறுத்தும் சிமெண்ட் ஆலை. Show all posts

Tuesday, December 01, 2015

அரியலூர்மாவட்டத்தையே அச்சுறுத்தும் சிமெண்ட் ஆலை!கரு கலைப்பு, நுரையீரல் பாதிப்பு, கேன்சர்.

ரியலூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது சிமெண்ட் ஆலைகள்' என்று அதிகாரிகளிடம் பல கட்சியினர் புகார் கொடுத்தாலும்,  நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட மக்களுக்கு வேலை கொடுக்காமல், வெளிமாநிலத்திலிருந்து ஆட்களை வரவைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், தனியார் சிமெண்ட் ஆலைகளை எதிர்த்தும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்ட களத்திலிருந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார்  பேசினோம்.
"விவசாயத்தை அழித்ததோடு இப்போது அரியலூர் மாவட்டத்தையும் அழிக்க தொடங்கியுள்ளன சிமெண்ட் ஆலைகள். பணத்திற்காக அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இம்மாவட்டம் சிமெண்ட்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கு வேலை கொடுத்தது இம்மாவட்டம்.  ஆனால் தற்போது பூர்வீக மக்களுக்கே வேலையில்லாமல், வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் இந்த ஆலை தரப்பினர்தான்.

தற்பொழுது அரசு சிமெண்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 10 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்து கொண்டிருக்கின்றனர். இதை 
விரிவுபடுத்தினால் ஆண்டிற்கு 12 லட்சம் டன் சிமெண்ட்  உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். கூடுதலாக 4 லட்சம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகளும், 150க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. அப்போ, வருடத்துக்கு எத்தனை லட்சம் டன் மண்ணை வெட்டுவார்கள்... எவ்வளவு தண்ணீரை உறிஞ்சுவார்கள்?  இப்படி எடுத்தால் என்ன ஆகும் இந்த மாவட்டம் என்று யோசித்து பாருங்கள்.

ஒவ்வொரு சுரங்கத்திலும் நானூறு அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே வரவும் வாய்ப்புள்ளது. கேரளாவில் 45க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் அங்கிருந்து மண்ணை எடுக்காமல், மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால், நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல், இம்மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் கிடைக்கிறது என்பதற்காக கணக்கில்லாமல் உற்பத்தி செய்கிறோம். இங்கு உற்பத்தி செய்வதை வெளிமாநிலம், வெளி நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இதைதான் தவறு என்கிறேன். இங்கு உற்பத்தி செய்வதை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்துங்கள். ஆலை விரிவாக்கம் வேண்டாம் என்கிறேன்.
இந்த ஆலை விரிவாக்கத் திட்டத்தினால் பல்வேறு பேரழிவுகள் ஏற்படுகிறது என்பதற்கு ஆய்வுகள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் நிலத்தை கையகப்படுத்தியபோது, 'நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம்' என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்கள். இதில் எதையாவது செய்துள்ளார்களா? ஆலையில் இருந்து வெளியிடும் புகையால் பலர் நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களால் இறந்துள்ளனர். தற்பொழுது கர்ப்பிணி பெண்களுக்கு வெடி அதிர்வால் கரு கலைந்து ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளால் இறந்த குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுத்ததுண்டா, கஷ்டப்படுவது நாங்கள், பலன் அடைவது யாரோ?
ஆலை விரிவாக்கத்திற்கு ஆட்களை வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வரப்போவதாகவும் தகவல் வருகிறது. இதை உடனே கைவிடவேண்டும். மாவட்ட மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும். முறையாக புகை கட்டுப்பாட்டு கருவி பொருத்தி,  அதிகாரி முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார் காட்டமாக.

பாஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலதலைவர் கவின் கமல்குமார் கூறுகையில்,  " தனியார் சிமெண்ட் ஆலைகள்,  மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி முடித்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சிமெண்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் தனியார் சிமெண்ட் ஆலைகள் வருடத்திற்கு 20 ஏரி, குளங்களை ஆழப்படுத்தி வரத்துவாய்க்கால்களை நீரமைத்து தர வேண்டும். மாவட்டத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் சிமெண்ட் ஆலைகள்,  வருடத்திற்கு 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சிமெண்ட் ஆலை வழங்க வேண்டும். இவை ஆறு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம்" என்று முடித்தார்.

மக்களுக்காகதான் இந்த அரசு. மக்கள் கேட்கும் அடிப்படை வசதிகளை ஆலைதரப்பினர் செய்தால் பிரச்னையை தவிர்க்கலாம். இல்லையேல் இதுவும் ஒரு கூடங்குளம் போல் மாறவும் வாய்ப்புள்ளது.

-எம்.திலீபன்

விக்டன்