Showing posts with label அமேடியஸ். Show all posts
Showing posts with label அமேடியஸ். Show all posts

Friday, April 10, 2015

AMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ) 8ஆஸ்கார் அவார்டு பெற்ற படம் - 1984

ஒரு பெரும் நிலப்பரப்பை, கானகத்தை, பிரம்மாண்டமான அரங்கின் பேரமைதியை, மூடிய கண்களுக்குள் காட்சிப் படிமமாக விரிக்க, தேர்ந்த இசைக்கலைஞர்களால் முடியும். இரவின் நிசப்தத்தை, பனி மலையின் உறைந்த அழகை இசைக் கருவிகளாலேயே காற்றில் வரைந்து காட்ட அவர்களால் முடியும்.



உலகின் மாபெரும் இசைமேதைகள் தங்கள் கற்பனை மூலம் எத்தனையோ ஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மொசார்ட். அமேடியஸ் வுல்ஃப்காங் மொசார்ட். பீத்தோவன், சைக்காவ்ஸ்கி போன்ற இசை மேதைகளுக்குத் தாக்கம் தந்த பெருங்கலைஞர்.
அவரது சமகாலத்தில் இயங்கிய மற்றொரு இசைக்கலைஞர் ஆன்டானியோ சலியேரி. மொசார்ட்டை விட 6 வயது மூத்தவர். இருவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பெருமளவில் கற்பனை கலந்து ‘மொசார்ட் அண்ட் சலியேரி’ எனும் நாடகமாக எழுதினார் ரஷ்யக் கவிஞரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் புஷ்கின்.
இந்த நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அமேடியஸ்’. 1984-ல் வெளியான இப்படம், 8 ஆஸ்கர் விருதுகள் உட்பட, 40 சர்வதேச விருதுகளை வென்றது. உலகமெங்கும் உள்ள திரைப்பட ஆர்வலர்களால் கொண்டாடப்படும் படைப்பு இது.
சலியேரி மூத்தவர் என்றாலும், அவருக்கு முன்னதாகவே இசையுலகுக்கு வந்துவிட்டவர் மொசார்ட். அவரது தந்தை லியோபோல்ட் மொசார்ட்டும் இசைக்கலைஞர்தான். தனது மகனுக்கும் மகள் மரியா அன்னாவுக்கும் இளம் வயதிலேயே இசை கற்றுத் தந்திருந்தார்.
‘சின்னப்பயல்’ மொசார்ட்டின் அசாத்தியமான இசைப் புலமை, அவரது இசைக்கு இருந்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாகப் பொறாமை கொள்ளும் சலியேரி, ஒரே நேரத்தில் அவரது இசையை ரசிப்பவராகவும், அவரது இருப்பை முற்றிலும் வெறுப்பவராகவும் உருவாவதைப் படம் சித்தரிக்கிறது.
வயதான சலியேரி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறார். நீண்ட நாட்களாகவே, மொசார்ட்டின் இறப்புக்குத் தான்தான் காரணம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் சலியேரியைச் சந்தித்துப் பாவமன்னிப்பு வழங்க வருகிறார் பாதிரியார் ஒருவர். அவரிடம் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார் சலியேரி.
மொசார்ட் முழுமையான இசைக்கலைஞராக உருவான காலத்தில், விளையாட்டுப் பையனாகத் திரிந்தவர் சலியேரி. மொசார்ட்டின் தந்தையைப் போல் அல்லாமல், தனது இசையார்வத்துக்குத் தடைவிதிக்கும் தனது தந்தை மீது வெறுப்புடன் இருக்கிறார்.
தந்தை இறந்துபோனதை கடவுள் ஏற்பாடு செய்த ‘அதிசய நிகழ்வாக’க் கருதி தனது இசைக்கனவை நனவாக்கிக் கொள்கிறார். இத்தாலியையும் ஜெர்மனியையும் ஆட்சி செய்த ரோமப் பேரரசர் இரண்டாம் ஜோசப்பின் அரண்மனையின் தலைமை இசைக் கலைஞராக உயர்கிறார்.
அவரது மகிழ்ச்சியை, மனநிறைவைக் குலைக்கும் வகையில் அமைகிறது மொசார்ட்டின் வருகை. ஆர்ப்பாட்டமான சிரிப்பும், துள்ளும் இளமையும், வேடிக்கை குணமும் கொண்ட மொசார்ட்டை ஒரு அசந்தர்ப்பச் சூழலில் சந்திக்கிறார் சலியேரி. மொசார்ட்டின் இசைக்குறிப்புகளில் தெறிக்கும் மேதைமை தனது இருப்பைக் கேள்விக்குரியதாக்குவதை உணர்கிறார்.
இரண்டாம் ஜோசப்பின் அரண்மனைக்கு அழைக்கப்படும் மொசார்ட்டை வரவேற்க சலியேரி எழுதிய ‘மார்ச் ஆஃப் வெல்கம்’ இசைக் குறிப்பை, பேரரசர் இசைத்துக் காட்டும் காட்சி படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடும். அந்த இசைக் குறிப்பை ஒரு முறை கூட பார்க்காமல், ஒரே ஒரு முறை கேட்டதை நினைவில் வைத்து அப்படியே வாசித்துக்காட்டுவார் மொசார்ட். சலேரியின் இசைக்குறிப்பில் இருந்த ‘சாதாரணத் தன்மையை’ மெருகேற்றி வாசித்துக் காட்டும் மொசார்ட் மீது ஆத்திரம் கொள்வார் சலியேரி. மொசார்ட்டின் வாழ்வில் விதியின் நிழலைப் போல் விளையாடத் தொடங்குவார்.
வறுமையையும், புறக்கணிப்பையும் சந்திக்கும் மொசார்ட் இளம் வயதிலேயே மரணமடையும் வரை தொடர்கிறது சலியேரியின் வன்மம். தனது தந்தை இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மொசார்ட்டை வீழ்த்த, முகமூடி அணிந்த மர்ம மனிதராக வந்து ‘ரெகுயெம் மாஸ்’ எனும் இசைக்கோவையை எழுதப் பணிப்பார். உடனடியாகப் பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால், அதை எழுதத் தொடங்கும் மொசார்ட் குடிப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு காரணமாக அகால மரணமடைவார்.
படத்தின் மொத்த பாரத்தையும் சுமந்திருப்பவர் சலியேரியாக நடித்த முர்ரே ஆபிரஹாம். உயர்தர இசையை உருவாக்கி மறைந்துவிட்ட மொசார்ட், அவரை ஆராதிக்கும் ரசிகர்கள் ஒருபுறம் என்றால் வெறுப்பின் உடல் வடிவமாக, தோல்வியின் ஆராதகராக மேன்மையான கலையைக் கேலிசெய்துகொண்டே தனது இருப்பை நிலைபெறச் செய்யும் முயற்சியில் இருக்கும் பாத்திரம் அது.
தனது திறமையைக் கேலிசெய்யும் மொசார்ட் மூலம் தன்னிடம் வெறுப்பைக் காட்டுவது கடவுள்தான் என்று முடிவுசெய்யும் பாத்திரம். முகபாவனை, உடல்மொழி, கண்ணசைவு என்று நடிப்பின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தி அந்தப் பாத்திரத்தை மேன்மைப்படுத்தியிருப்பார் முர்ரே ஆபிரஹாம்.
தான் இசையமைத்த மெட்டுக்களை இளம் பாதிரியாரிடம் பியானோவில் சலியேரி வாசித்துக் காட்டும் காட்சியைச் சொல்லலாம். அவர் இசையமைத்த மெட்டு எதையும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பாதிரியார் கேள்விப்பட்டதில்லை; கடைசியாக சலியேரி வாசிக்கும் இசைக்குறிப்பைக் கேட்டதும் பாதிரியாரின் முகம் மலர்கிறது. ‘ஆமாம், இதை நான் கேட்டிருக்கிறேன்’ என்று சொல்லி, கூடவே பாடுகிறார்.
நொந்துபோகிறார் சலியேரி. “இது என்னுடைய இசை அல்ல. மொசார்ட்டுடையது “ என்று வெறுப்புடனும், அவமானத்துடனும், அதை மறைக்க முயலும் வெற்றுப்புன்னகையுடனும் சொல்லும் காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார் முர்ரே ஆபிரஹாம். மொசார்ட்டாக நடித்திருக்கும் டாம் ஹல்ஸ் துள்ளலும் துடிப்புமாக அந்தப் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார்.
உண்மையான திறமையைப் புரிந்துகொள்ளத் திராணியற்ற அதிகாரவர்க்கம், அதைச் சுற்றியிருப்பவர்களின் அசட்டுத்தனம் என்று பல்வேறு விஷயங்கள் படத்தின் அடிநாதமாகப் பின்னப்பட்டிருக்கும். இன்று வரை இந்தப் படத்தைப் பிரதியெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அது வெற்றிகரமாகவில்லை. ஏனெனில், இந்தப் படத்தின் ஆன்மா அத்தனை மேன்மையானது. மொசார்ட்டின் சாகாவரம் பெற்ற இசையின் ஆன்மாவுக்கு ஒப்பானது அது!



நன்றி  - த இந்து