Showing posts with label அதிமுகவில் 'தொடர் பதவி பறிப்புகள்': காரணம் என்ன?. Show all posts
Showing posts with label அதிமுகவில் 'தொடர் பதவி பறிப்புகள்': காரணம் என்ன?. Show all posts

Tuesday, January 05, 2016

அதிமுகவில் 'தொடர் பதவி பறிப்புகள்': காரணம் என்ன?

.தி.மு.க.வில் கட்சிப் பொறுப்பாளர்களின் பதவிகளும், மந்திரிகளின் பதவிகளும் ' திடீர் ' மாற்றத்துக்குள்ளாவது  புதிதான விஷயமல்ல. தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த செந்தமிழனை இன்று அப்பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் ஜெயலலிதா. அதே வேளையில், திருப்பூர் மாவட்டத்திலும் இப்படி பதவி பறிப்பு நடந்துள்ளது. மேலும் 
அ.தி.மு.க.வின்  பிரசார பீரங்கியாக காட்சியளித்த நாஞ்சில் சம்பத்தின் பதவியைப் பறித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் ஜெயலலிதா. 

"முன்பெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட்டு அடிப்பாங்க, இப்ப சொல்லாமலே அடிக்கறாங்களே..." என ஜெ.வின் பதவிப்பறிப்பு பட்டியலில் இடம் பெறுபவர்களிடமிருந்து புலம்பல் சற்று அதிகமாகவே எதிரொலித்ததால், கோட்டையில் சற்று காதை கொடுத்தோம். 
 
திருப்பூர் புறநகர் மா.செ. பொறுப்பிலும், துணை சபாநாயகர் பொறுப்பிலும், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பிலும்  இருந்து வந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவர் இப்பதவிக்கு வந்தபோது, தமிழ்நாடு கேபிள் கழக தலைவராக  இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். 'பொள்ளாச்சி' யின் கைகளுக்கு மா.செ. பொறுப்பு போவதற்கு முன்னர் அது 'உடுமலை' கையில்தான் இருந்தது. அந்த பொறுப்பை பிடுங்கித்தான் பொள்ளாச்சி ஜெயராமன் கையில் ஜெயலலிதா கொடுத்திருந்தார். இப்போது பரமபத விளையாட்டில் அதே பொறுப்பு மீண்டும் 'உடுமலை' கைக்குப் போயிருக்கிறது. 

இப்போது துணை சபாநாயகர் பொறுப்போடு, பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் பிரிவு செயலாளராக மட்டுமே இருக்கிறார். பொள்ளாச்சியையும், உடுமலையையும் இருந்த இடத்துக்கே மீண்டும், மீண்டும் மாற்றிப் போட்டு ஒரு 'ஜெர்க்' கொடுத்துள்ள ஜெயலலிதா,  தென் சென்னை மா.செ.வான,  எம்.எல்.ஏ. செந்தமிழனை 'காலி' செய்து அந்த இடத்துக்கு மார்க்கெட் பாபு என்பவரை மா.செ. ஆக்கியிருக்கிறார். உடுமலை, பொள்ளாச்சி ஆகியோருக்கு  'யு' டர்ன் மாற்றம் என்பதால் அது பற்றி பெரிய அளவில் பேச்சு எழவில்லை. ஆனால், செந்தமிழன் கதைதான் பாவம். "சட்ட அமைச்சராக இருந்தவர், ஒருமுறை மா.செ. வாக இருந்தவர்... மீண்டும் அவரைத் தேடிப் பிடித்து கொடுத்த பதவி இப்படியா பறி போகணும்?"   என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

'என்னதான் ஆச்சு?' அவர்களிடமே கேட்டோம். "அண்ணன்தான்  கோட்டூர்புரம் ஏரியாவில் அதிகமா அம்மாவோட பொதுக்குழு பேனரை வெச்சவரு. இதுக்கு முன்னால பொறுப்புல இல்லாதபோதும் அண்ணன் வைக்குற பேனரை அடிச்சுக்க சிட்டியில் ஆளே இல்ல. அதுல நாலஞ்சு பேனருங்க காத்துல கீழே விழுந்து கொஞ்சம் பேருக்கு அடிபட்டிருக்கும்போல. அதை  நம்ம கட்சியில அவருக்கு எதிரா இருக்குற கும்பல் 'அம்மா' கிட்ட வசமா போட்டு விட்டுட்டாங்க . அதுக்குத்தான் இந்த நடவடிக்கைன்னு இப்போதைக்கு சொல்லிக்கிறாங்க... உண்மையான காரணம் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும். பேனர் வெச்சாலும் பிரச்னை, வைக்காமல் போனாலும் பிரச்னைதாங்க" என்கின்றனர். 

தொடர்ந்து அவர்களே, "எங்க கட்சியைப் பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினால்தான் கொஞ்சம் சிக்கல். அம்மாவுக்கு கோபம் தீர ரொம்ப நாளாகும், நம்மாளு ஏதோ பெருசா பண்ணிட்டாருன்னு முடிவு பண்ணிக்குவோம், இதுக்குப் பேருதான் 'நீக்கம்'. 

'விடுவிப்பு' என்றால், பதவி பறிப்பு மட்டும்தான். அடிப்படை உறுப்பினர் பதவியில் கை வைக்க மாட்டார்கள். 'நீக்கம்' செய்தால், அந்த அறிவிப்பிலேயே 'இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தலைமையால் அறிவுறுத்தப் படுகிறது' என்று அம்மா தெளிவாக கீழே ஒரு லைன் சேர்ப்பார்கள். அத்தோடு அந்த ஆசாமி காலிதான். விடுவிப்பு என்றால் அப்படி ஒரு 'லைன்' சேர்க்க மாட்டார்கள்...' என்று தெளிவாக (!) விளக்கினர்

தென்சென்னை மாவட்டத்தில் இன்னும் சில 'தலை' களும், வடசென்னை மாவட்டத்தில் சில 'தலை'களும் அடுத்தடுத்து உருளும் என்று கட்சி வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியிருக்க,  அச்சத்தில் இருக்கின்றனர் இன்னும் பலர். அதே சமயம் பதவி பறிப்புகள் குறித்து இன்னொரு தகவலும் உலாவருகிறது. அ.தி.மு.க.வில் நிஜமாக கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்து கட்சியின் இக்கட்டான நேரங்களில் 'அம்மா' வுக்காக சிறைக்குப் போனவர்களுக்கு 'பதவி' கொடுக்கும் முனைப்பில் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாம்.

இதற்கான முன்நடவடிக்கைகள்தான் இந்த 'கட்டம் கட்டும் படலம்' என்கிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை  கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் இண்டு இடுக்கெல்லாம் அறிந்தவர் என்பதால் அவரிடமே களைப்பறிப்பு வேலையை ஒப்படைத்திருக்கிறதாம தலைமை. வட்டம், பகுதி தொடங்கி, அது மாவட்டம் வரை எபெக்ட் கொடுக்கும் என்பதால், வடசென்னை ர.ர.க்கள் அன்றாடம் 'மது' முகத்தில் விழிப்பதே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். 

- ந.பா.சேதுராமன்

நன்றி - விகட்ன்