Showing posts with label அங்கோர் வாட் மைய ஆலயம். Show all posts
Showing posts with label அங்கோர் வாட் மைய ஆலயம். Show all posts

Tuesday, June 18, 2013

அங்கோர் அப்சரா


ஜி.எஸ்.எஸ்.

அங்கோர் வாட் மைய ஆலயத்தின் வெளிப்புறம் சுமார் 800 மீட்டர் நீளச்சுவர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதன் நீளத்தால் மட்டுமல்ல, அதில் காணப்படும் அழகிய சுதைச் சிற்பங்களால்.


குருட்சேத்திரப் போர் விரிவாக சித்திரிக்கப்படுகிறது. பீஷ்மரின் அம்புப் படுக்கைக் காட்சியிலிருந்து கர்ணனின் மரணக் காட்சி வரை கண்டு ரசிக்க முடிகிறது. தென்மேற்கு மூலையில் உள்ள சிற்பங்கள் ராமாயணம் தொடர்பானவை.


இந்த இரு காவியங்கள் மட்டுமல்ல, சொர்க்கக் காட்சி, நரகத்தில் கிடைக்கக்கூடிய தண்டனைகளை வலியுறுத்தும் காட்சிகளும் அருமை.


எருமை மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார் பதினெட்டுக் கைகள் கொண்ட யமதர்மன். கம்போடியாவின் ஆஸ்தானச் சிற்பமான கூர்மாவதாரக் காட்சியும் உண்டு.


படிக்கட்டுகள் இல்லாத உயரப்பகுதி ஒன்றும் உள்ளது. யானையில் வரும் மன்னர்கள் அங்கு யானையைக் குனிய வைத்து அந்தப் பகுதியில் இறங்கி ஆலயத்துக்குள் வருவார்களாம்.


ஜெர்மனி நாட்டு தொல்லியல் நிபுணர்கள் அங்கோர் வாட்டை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இவ்வளவு பெரிய இந்து ஆலயத்தைப் பாதுகாத்து புதுப்பிக்கும் வேலையில் நம் நாட்டு நிபுணர்கள் ஈடுபட்டிருக்கலாமே" என்றான் ஜருகண்டி.

அப்படித்தான் ஈடுபட்டார்கள். ஆனால் அந்தப் பணியில் ஏதோ தவறான அமிலமும் சேர்க்கப்பட்டதால், வேண்டாத விளைவுகள் சில உண்டாகின என்று செய்தி பரவியது" என்றார் ராமநாதன்.

இந்த இடத்தில்அப்சராபற்றிக் குறிப்பிட வேண்டும்.

சியாம் ரீப் நதிக் கரையில் இருக்கிறது கம்போடிய நாட்டின் கலாசாரத் துறையின் முக்கிய அங்கமான அங்கோர் பாதுகாப்புப் பிரிவு. இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

இதையெல்லாம் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கலாமே" என்றான் ஜருகண்டி.

முன்பு அங்கோர் பாதுகாப்புப் பிரிவின் அங்கமாக இருந்து இப்போது தனியாகவே செயல்படுகிறதுஅப்சரா’ (அதாவது அதாரிடி ஃபார் புரொடெக்ஷன் அண்ட் மேனேஜ்மென்ட் ஆஃப் அங்கோர் அன்ட் தி ரீஜன் ஆஃப் சியாம் ரீப் என்பதன் சுருக்கம்). அங்கோரைச் சுற்றியுள்ள ஆராய்ச்சிகள், கலாசார விஷயங்களைப் பாதுகாத்தல் போன்றவை இதன் பொறுப்பு.


இந்து மதத்தின் கூறுகளை நாங்கள் மிக அதிகமாகக் கண்ட மற்றொரு ஆலயம் பந்தியாஸ்ரே (BINTEA SREI). பூசாரி ஒருவர் எழுப்பிய சிவ ஆலயம் இது. தொடர்ந்து அந்தக் காட்டுப் பகுதியில் வசித்துக் கொண்டே இதை எழுப்பி இருக்கிறார். அற்புதமான கலை வண்ணம் கற்களில் மிளிர்கிறது. சிவலிங்கம் மட்டுமல்ல, நந்தி, இரண்யனைக் கொல்லும் நரசிம்மர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். துவார பாலகர்களாக அனுமன் போன்ற உருவம் கொண்டவர்கள் காட்சி தருவது வித்தியாசமாக இருக்கிறது. ‘வனத்தில் வசிக்கும் அமைதியான மனிதனான நான், ஐந்தாம் ஜெயவர்மனின் நினைவாக இந்த ஆலயத்தை எழுப்புகிறேன்என்கிறது அந்தப் பூசாரியின் கல்வெட்டு.



பிங்க் வண்ணக் கல்லில் பெரும்பாலான உருவங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அளவில் பெரிய ஆலயம் அல்ல என்றாலும் அழகிலும், நன்கு பாதுகாக்கப்படுவதாலும், பார்ப்பவர்களை மகிழ்விக்கிறது. பாண்டியா ஸ்ரே என்றால்பெண்களின் கோட்டைஎன்ற அர்த்தம். இதை வடிவமைப்பதில் ஒரு பெண்ணுக்கும் பங்கு இருந்தது என்று (மட்டும்) கூறப்படுகிறது. புதுப்பிக்கும் பணிக்கான முதலில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஆலயம் இதுதான் என்பார்கள்.


நாம் பார்ப்பதாகத் திட்டமிட்ட அங்கோர் ஆலயங்கள் முடிவுக்கு வந்து விட்டன" என்றார் ராமநாதன்.

அங்கோரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தள்ளி ஓர் ஆலயம் இருக்கிறது. அதை மிஸ் செய்தால் அப்புறம் வருத்தப்படுவீர்கள். போகலாமா?" என்றார் காரோட்டி.

பிறகெப்படிப் போகாமல் இருப்பது? காரில் சுமார் நாற்பது நிமிடங்கள் பயணம் செய்த பிறகு அந்த ஆலயம் வந்தது. அதன் பெயர்பெங்க் மிலியா’" என்றார் காரோட்டி.

இரண்டாம் சூரியவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். அது மட்டுமல்ல இங்கேயே தங்கிய மன்னன் இந்தப் பகுதியைத் தலைநகராக்கத் திட்டமிட்டான். மக்கள் இப்பகுதியில் குவியத் தொடங்கினர்.


ஆனால் அவர்களால் அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. காரணம் ஆறு எதுவும் இல்லாத பகுதி அது. ஒரு பெரும் நூலகம் இருந்த அடையாளமும் காணப்படுகிறது. இது ஒரு விஷ்ணு ஆலயம். காலம் எந்த அளவுக்கு ஒரு கம்பீரத்தை அலங்கோலப்படுத்த முடியும் என்பதற்கு மற்றொரு சான்று இது.



மிக அதிகம் சேதமடைந்த கோவில், மிகச் சிறப்பாக ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய கோவில் ஆகிய இரண்டுமே இதைக் காணும்போது எழுகின்றன. சுமார் ஒரு கி.மீ. நீளம் கொண்ட அகழிக்கு நடுவே உள்ளது இந்த ஆலயம். மைய கோபுரம் முழுக்கவே இடிந்து விழுந்து அங்குள்ள பிரம்மாண்ட கூடங்களில் சிறு பகுதிகளாகக் கலந்திருக்கின்றன.



 இதன் சில பகுதிகளில்தான் அனுமதி உண்டு. சொல்லப்போனால் ஆலயத்தின் பகுதிகளில் பலவித ஏற்ற இறக்கங்கள். பாறைகளின் மீதும் கம்பிப் படிகளின் மீதும் பார்த்துப் பார்த்து கவனமாகத்தான் ஏற வேண்டியிருக்கிறது. ஒரு மினி சாகச விளையாட்டில் ஈடுபட்டதைப் போன்ற ஓர் உணர்வுகூட ஏற்படுகிறது. வெகுதூரம் மரப்பாலங்களில் நடக்க வேண்டியிருக்கிறது. இதில் ஓரிரு பாலங்கள்டூ பிரதர்ஸ்என்ற ஆங்கிலப் படத்துக்காக எழுப்பப்பட்டவை (தலைப்பில் உள்ள இரு சகோதரர்கள் என்பது இரு புலிக் குட்டிகளைக் குறிக்கிறது).

ஒரு தலைநகராக கம்போடியச் சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய ஒரு பகுதி இன்று சிதிலமடைந்திருப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.

(பயணம் தொடரும்)


நன்றி - கல்கி