Showing posts with label 'தி வாக்' - ஹாலிவுட் விமர்சனம். Show all posts
Showing posts with label 'தி வாக்' - ஹாலிவுட் விமர்சனம். Show all posts

Friday, October 09, 2015

'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டும் சாகசம்!

பிலிப் பெடீ - ஒரு சாகசக் கலைஞர். உயரமான இடங்களைப் பார்த்தாலே அதில் கயிறு கட்டி நடக்க வேண்டும் என்று துடிப்பவர். 1974-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 6-ஆம் தேதி அவர் நிகழ்த்திய சாகசம் அவரை உலகுக்கு அடையாளம் காட்டியது. உலகப் புகழ்பெற்ற (2001-ல் தீவிரவாத தாக்குதலில் தரைமட்டமான) ட்வின் டவர் கட்டிடங்களுக்கு நடுவில், 1,350 அடி உயரத்தில் கயிறு கட்டி நடந்தது தான் அந்த சாகசம். அன்று ஒரு முறை அல்ல, 8 முறை, மொத்தம் 45 நிமிடங்களுக்கு அந்த கயிற்றில் நின்று, நடந்து, உட்கார்ந்து, வணங்கி, நடனமாடி, மண்டியிட்டு பார்வையாளர்களை வணங்கி என அனைத்து விதமான நம்ப முடியாத சாகசங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டினார். 'தி வாக்' (The Walk), பிலிப்பின் இந்த சாகசத்தை விவரிக்கும் திரைப்படம்.
அனைவருக்கும் தெரிந்த கதையை படமாக இயக்குவது சவாலான வேலை. நாவல் ஒன்றைத் திரைப்படமாக உருவாக்கும்போது, அதில் வேண்டிய மாற்றங்களை செய்யலாம். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கும் படத்தில் அப்படியான சுதந்திரமும் கிடையாது. உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டும்.
உயரமான இடங்களைத் தேடி, அதில் கயிறு கட்டி நடக்கும் ஆர்வமுள்ள பிலிப், பிரான்ஸில் வசிக்கும் ஒரு சாகசக் கலைஞர். 70-களில் புதிதாக திறக்கப்பட்ட ட்வின் டவரைப் பற்றி பத்திரிகையின் மூலம் தெரிந்து கொள்கிறார். அந்த இரு கட்டிடங்களுக்கு நடுவில் கயிறு கட்டி நடக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். 1,350 அடி உயரமுள்ள அந்தக் கட்டிடங்களுக்கு நடுவில், 140 அடி தூரத்தை பிலிப் கடக்க வேண்டும். தனது நண்பர்களின் துணையோடு நியூயார்க் சென்று, அங்கு சில நண்பர்களை திரட்டி, பல சிக்கல்களைத் தாண்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி, எப்படி நினைத்ததை நடத்தி முடிக்கிறார் என்பதே 'தி வாக்' படத்தின் கதை.
கேட்கும்போதே அசாத்தியமாகத் தோன்றும் இந்த சாகசத்தை, சொன்ன விதத்திலும் பிரம்மிப்பூட்டுகிறார், ஏற்கெனவே நம்மை 'ஃபாரஸ்ட் கம்ப்', 'பேக் டு தி ஃபியூச்சர்', 'கேஸ்ட் அவே' போன்ற படங்கள் மூலம் ஆச்சரியப்படுத்திய இயக்குநர் ராபர்ட் ஸெமிகிஸ். வித்தியாசமான காட்சியமைப்புகளுக்குப் புகழ்பெற்ற ஸெமிகிஸ், 'தி வாக்' படத்திலும் தனது பாணியைத் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே பிலிப் பெடீ பற்றி 'மேன் ஆன் வயர்' (Man on Wire) என்ற ஆவணப் படம் வெளியாகி ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளது. அதனால் திரைப்படமாக எடுக்கும்போது, பிலிப்பின் ட்வின் டவர் சாகசத்தில் அதிக கவனம் செலுத்தி படமாக்கியுள்ளார் இயக்குநர் ஸெமிகிஸ்.
சிறுவன் பிலிப், சர்க்கஸில் சாகசக் கலைஞர்கள் கயிற்றில் நடப்பதை பார்த்துவிட்டு தன் வீட்டுக்கு வந்து, ஒரு கயிறை இரு மரங்களுக்கிடையே நான்காக மடித்துக் கட்டி அதில் பயிற்சி செய்கிறான். அந்தக் கயிற்றில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, ஒவ்வொரு கயிறாக கீழே விழுந்து, கடைசியில் ஒற்றைக் கயிறில் இளைஞன் பிலிப் நடந்து பார்க்கிறான். மற்றொரு காட்சியில், ட்வின் டவரில் கயிற்றைக் கட்டி நடக்க தயாராகும்போது, சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பிலிப் பார்வையிலிருந்து மறைகின்றனர். தனக்குக் கீழே இருக்கும் ஆழம், எதிரே இருக்கும் கட்டிடம் என அனைத்தும் மேகங்களில் மறைந்து வெறும் கயிறு மட்டும் பிலிப்பின் கண்களுக்குத் தெரிகிறது. முதல் அடி எடுத்து வைத்தவுடன் மேகங்கள் விலகி, மீண்டும் அனைத்தும் அவரது பார்வைக்கு வருகிறது. படம் முழுவதும் இப்படியான காட்சிகளால் முத்திரை பதிக்கிறார் இயக்குநர்.
இயக்குநரின் பார்வைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களின் அசுரத்தனமான உழைப்பு துணை நின்றுள்ளது. ஒளிப்பதிவு (டாரியஸ் வொல்ஸ்கி), கிராபிக்ஸ் (அடாமிக் ஃபிக்‌ஷன், ரோடியோ எஃபெக்ஸ்), இசை (ஆலன் சில்வெஸ்ட்ரி), எடிட்டிங் (ஜெரெமியா) என அனைவரது உழைப்பின் பலனும் திரையில் தெரிகிறது. வழக்கமாக 3டி யுக்தியை தேவையில்லாமல் பயன்படுத்தும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், 'தி வாக்' தனித்து நிற்கிறது.
தேவையில்லாமல் பொருட்கள், ஆயுதங்கள், மனிதர்கள் பறந்து நம் கண்ணைக் குத்தும்படியான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. காட்சிகளின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரும் பொருட்டே 3டி பயன்படுத்தப்பட்டுள்ளது. பிலிப், ட்வின் டவரின் மாடிக்கு சென்று எட்டிப்பார்ப்பதிலிருந்தே நம் வயிற்றில் ஏதோ சங்கடம் ஏற்படுவதை உணரலாம். அந்த உயரத்தில் நாமும் பிலிப்போடு நின்று பார்ப்பது போலவே இருக்கிறது. தொடர்ந்து, கயிற்றில் நடக்கும் அவரது சாகசத்தின் போது நமது கால்களும் கிட்டத்தட்ட நடுங்கிக் கொண்டே இருக்கின்றன.
படத்தின் இசையில் எந்த இரைச்சலும், மிகையும் இல்லாமல், ஓர் ஓவியத்துக்கான மென்மையோடு காட்சிகளுடன் பயணிக்கிறது. பிலிப் முதல் முறை ட்வின் டவர் கயிற்றில் நடக்கும்போது, மிக மெதுவாக ஆரம்பிக்கும் ஃபர் எலைஸ் (fur elise) பியானோ இசை, சிலிர்ப்பு.
கிராபிக்ஸ் வழக்கம் போல ஹாலிவுட்டின் தரத்தில் மிரட்டுகிறது. 70-களின் நியூயார்க் நகரத்தை முடிந்தவரை அப்படியே மீண்டும் உருவாக்கியுள்ளார்கள். முக்கியமாக, தரைமட்டமான ட்வின் டவர்கள் கிராபிக்ஸ் உதவியால் தத்ரூபமாக நிமிர்ந்து நிற்கிறது.
ஒருவரின் சாகசத்தை விவரிக்கும் படம் என்பதைத் தாண்டி, சாதிக்க வேண்டியவர்கள் சோர்வடையக் கூடாது, தங்கள் கனவுகளை நனவாக்க நினைப்பவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என பாஸிட்டிவ் விஷயங்களையும் 'தி வாக்' சொல்லாமல் சொல்கிறது.
பிலிப்பாக ஜோசப் கார்டன் லெவிட். பிரெஞ்ச் தொனியில் ஆங்கிலம் பேசுவது, எளிதில் மற்றவர்களிடம் பேசி தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது, பரபரப்புடன் திரிவது, கயிற்றில் நடப்பதற்கு முதல் நாள் வீட்டில் பயத்தில் துடிப்பது, கயிற்றில் நடக்கத் துவங்கும்போது லேசான பதற்றம் தொற்றிக் கொள்ள மெல்ல மெல்ல அது விலகி தான் நினைத்ததையெல்லாம் செய்வது என கச்சிதமான உடல் மொழியோடு அந்த பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.
பிலிப்பின் தோழியாக சார்லட், குருவாக பென் கிங்ஸ்லி என அனைவருமே சிறிய பாத்திரங்களிலும் சிறக்கின்றனர். குறிப்பாக, பிலிப்பின் நண்பராக நடித்திருக்கும் சீஸர், உயரங்களைக் கண்டால் பயப்படுபவர் (வசூல்ராஜாவின் கருணாஸை ஞாபகமூட்டும் பாத்திரம்). படத்தில் நாம் வாய்விட்டு சிரிக்கும் தருணங்களுக்கு சொந்தக்காரர்.
பிலிப்பாக வரும் ஜோசப் பேசும் விதம் சரியாக இல்லை, பிலிப்பின் இந்த சாகசத்துக்கு பிந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது என சொல்லவில்லை என்று ஹாலிவுட் ஊடகங்கள் விமர்சித்தாலும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை 2 மணி நேரம் சிதற விடாமல் கட்டுக்குள் வைத்துள்ளார் இயக்குநர்.
சட்டவிரோதமாக ட்வின் டவரில் நுழைந்து, மொட்டை மாடிக்குச் சென்று, நடப்பதற்கு கயிறை இழுத்துக் கட்டி ஆயத்தமாகி, நடக்கும்போதுதான் நடுவில் செல்லும் கயிறு தலைகீழாக கட்டியிருப்பது பிலிப்புக்குத் தெரிகிறது. இதற்குப் பின் என்ன நடந்தது என்பதை வழக்கம் போல வெள்ளித்திரையில் காண்க.
கிராவிட்டி எப்படி விண்வெளியில் மிதப்பது போன்ற அனுபவத்தை உங்களுக்குத் தந்ததோ, அதே போல 'தி வாக்', நிஜமாகவே 1000 அடி உயரத்தில் கயிற்றில் நடப்பது போன்ற உணர்வை உங்களுக்குத் தரும். டாரண்ட், ஸ்டார் மூவிஸ் என கணிணியிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தால் கண்டிப்பாக இந்தப் படத்தை ரசிக்க முடியாது. நல்ல ஒலி-ஒளி-3டி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள்.
உங்களுக்கு உயரங்கள் பயம் என்றால், உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்க. நீங்கள் மூர்ச்சையாகி விழுந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

நன்றி-தஹிந்து