Showing posts with label 'சகலகலா வல்லவன்' அப்பாடக்கர் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label 'சகலகலா வல்லவன்' அப்பாடக்கர் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, August 02, 2015

'சகலகலா வல்லவன்' அப்பாடக்கர் - சினிமா விமர்சனம்

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, விவேக் என்று நல்ல காம்போ இருக்கும் படம், 'அலெக்ஸ் பாண்டியன்' படத்துக்குப் பிறகு சுராஜ் இயக்கிய படம் என்பதால் அவர் மீண்டும் ஃபார்முக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையில், 'சகலகலா வல்லவன்' படத்தைப் பார்க்க முற்பட்டேன். அந்த ஆவல் என்ன ஆனது?
நகராட்சித் தலைவர் பிரபுவின் மகன் ஜெயம் ரவி. அப்பாவின் பெயரை சொல்லிக்கொண்டு நல்லது செய்கிறேன் என்று வெட்டியாய் நண்பர்களுடன் பொழுது போக்குகிறார். ஜெயம் ரவியை எதிரியாகப் பார்க்கிறார் சூரி. அஞ்சலியைக் காதலிக்கும் ஜெயம் ரவி, சந்தர்ப்ப வசத்தால் த்ரிஷாவின் கணவர் ஆகிறார். அது ஏன்? என்ன நடந்தது? அஞ்சலி என்ன ஆனார்? சூரி என்ன ஆகிறார்? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு திரைக்கதை பதில் சொல்கிறது.
ஜெயம் ரவி 'பேராண்மை', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நல்ல பையன் அடையாளத்தோடு இருக்கிறார். அவர் கொஞ்சம் கெட்ட பையனாக மாற இந்தப் படத்தில் முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், அது பொருந்தவே இல்லை. வொர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் உண்மை. ஜெயம் ரவி என்ட்ரி ஆகும் காட்சியே உவ்வே சொல்ல வைக்கிறது. டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும் என்பதற்காக வில்லன் செய்ய வேண்டியதை எல்லாம் ஹீரோ செய்கிறார்.
நோக்கம் சரியாக இருந்தாலும் போன ரூட்டு சரியா, முறையா இல்லையே. அப்பாவுக்காக வாக்குறுதியைக் காப்பாற்றுவது, குடித்துவிட்டு சலம்புவது, காதலில் கலங்குவது, கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுப்பது என எல்லாம் நடிப்பில் ஓகே என சொல்ல வைக்கிறார்.
ஹீரோவுக்கான பில்டப்பில் சம பங்கு சூரிக்கு. ஆனால், எல்லாமே பொடிமாஸ் ஆகிப் போகிறது. 'நான் கடவுள்' ராஜேந்திரனிடம் அடிவாங்கி முழிக்கும்போது நமக்கு சிரிப்பும் வரவில்லை. பரிதாபமும் வரவில்லை. பாடி லேங்வேஜை டெவலப் பண்ணுங்க பாஸ்...
அஞ்சலி என்ட்ரிக்கு ரசிகர்களின் ஏகோபித்த கைத்தட்டல்கள். அம்மணி எந்தக் குறையுமில்லாமல் நடித்திருக்கிறார். தாராளம் காட்டியிருக்கிறார். ஆனால், மேக்கப்பில் "ப்பா..." சொல்ல வைக்கிறார்.
த்ரிஷாவின் மேக்கப் ரசிகர்களை பேக்கப் செய்ய வைக்கிறது. கன்னs சுருக்கங்கள் கூட காண்பிக்கும் அளவுக்கு வதைத்திருக்கிறார்கள்.
சென்னை போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் சூரியின் காமெடி கொஞ்சம் எடுபடுகிறது. இரட்டை வேடங்களில் வரும் விவேக்கும், கூடவே வரும் செல்முருகனும் தான் நம்மை கொஞ்சம் காப்பாற்றி சிரிக்க வைக்கிறார்கள்.
பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய், தளபதி தினேஷ் எல்லோரும் சும்மா வந்து போகிறார்கள்.
'நான் கடவுள் ராஜேந்திரன்' சீரியஸ் போலீஸ் என்று காட்ட முயற்சித்து சிரிப்பு போலீஸ் ஆக்கியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸ் முடிந்த பிறகும் இவர் போர்ஷனை நீட்டித்திருப்பது பொறுமையை சோதிக்கிறது.
சன் மியூசிக்கில் இபோ ஒரு பாட்டு வருது என்று சொல்லிவிட்டு போடுவார்களே? அதே போல ஒவ்வொரு பாடலுக்கும் ஓர் அறிவிப்பு தருகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, நியாயமாரே...!
எந்த பாடலும் படத்தோடு ஒட்டாமல், தெலுங்கு பீட்டில் இருந்துகொண்டே நம்மை அலற வைக்கிறது.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆர்.கெ.செல்வா கத்தரி போட வேண்டிய பல இடங்களில் சும்மாவே இருந்திருக்கிறார். என்ன மாதிரியான கொலவெறியில் இருந்திருக்கிறார்? என்பதை நினைத்தால் தான் பதற்றம் வருகிறது.
கதை, திரைக்கதையில் எந்த அழுத்தமும் இல்லாததால் எல்லாமே புஸ் ஆகிப் போகிறது. காமோ சாமோ என நகரும் திரைக்கதையால் டயர்ட் ஆகிப் போகிறார்கள் ரசிகர்கள்.
படம் ஆரம்பித்த பத்தாவது நிமிஷமே இருந்தே "போலாமா மச்சான்" என்று நண்பனை அழைத்துக் கொண்டிருந்தார் ஒரு ரசிகர்.
இன்னொரு ரசிகர் செல்போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டு, இடையில் ட்வீட் ரிவ்யூ போட்டுக் கொண்டிருப்பதை கணிக்க முடிந்தது.
ஜெயம் ரவிக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் கூட கழுகு கழுவி ஊற்றினார். அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு சுராஜ் இயக்கும் படம் என்றால் எப்படி ஆவல் வரும்? அவல் தான் என்று ரசிகர்கள் நொந்துபோனதுதான் மிச்சம்.
சோகம் என்னணா டைட்டிலுக்கென்று இருக்கும் எனர்ஜி, சுவாரஸ்யம்கூட படத்தின் ஒரு காட்சியில் கூட இல்லை.
எல்லா ஹீரோவும் பண்ணவே கூடாத படம் என்று ஒன்று இருக்கும். ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் செய்த தப்பான படம் 'சகலகலா வல்லவன்' என்று சத்தம் போட்டு சொல்லலாம் போல இருக்கிறது.
இது எனக்கு மட்டும் தானா?