Friday, July 01, 2016

ஜாக்சன் துரை - திரை விமர்சனம்

'பர்மா' இயக்குநர் தரணிதரனின் அடுத்த படம், சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் 10-வது படம், சிபிராஜ்- சத்யராஜ் கூட்டணியில் வெளியாகும் 5-வது படம், த்ரில்லர் காமெடி சார்ந்த பேய் படம் என்ற இந்த காரணங்களே ஜாக்சன் துரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
சிபிராஜூம் - சத்யராஜூம் இணைந்து நடித்த படங்கள் என்ற சிறப்புக் கவனம் பெற்ற போதிலும், அவை சிபிராஜூக்கு நடிகன் என்ற அடையாளத்தை அள்ளி வழங்கவில்லை. இந்தப் படம் கடந்து வந்த வரலாற்றை தொடரச் செய்யாமல், சிபிக்கு புது எனர்ஜி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தோம்.



பேய், ஆவியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் தற்போது ஹாரர் பாதி, காமெடி மீதி என்றே சரிவிகிதப் பாணியில் எடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் 'ஜாக்சன் துரை'யும் உள்ளேன் ஐயா சொல்கிறது.


கதை: அயன்புரம் கிராமத்தில் ஜாக்சன் பேய் இருப்பதாக ஊரே அஞ்சுகிறது. இதனால் உண்மை நிலையைக் கண்டறிய எஸ்.ஐ. சிபிராஜ் அந்த ஊருக்கு வருகிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அந்த ஊர் மக்களின் அச்சத்துக்குக் காரணம் என்ன? அதை எப்படி சிபி கண்டுபிடிக்கிறார்? அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறாரா? என்பது மீதிக் கதை.


பேய் படம், காமெடி படம் தான் இப்போதைய ட்ரெண்ட் என்று நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தரணிதரன். அதனால் இரண்டையும் ஒரே மிக்ஸியில் அடித்து குருமா செய்ய முயற்சித்திருக்கிறார். அது நம்மை ரொம்பவே சோதிப்பதுதான் சங்கடம்.
உதார் விடும் எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் சிபிராஜ். வசன உச்சரிப்பு, உடல் மொழியிலும் முன்பை விட ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. கூலிங்கிளாஸ் மூலம் கண்களின் சமநிலையை ஈடுசெய்திருக்கிறார். பயம், தவிப்பு, எமோஷன், காதல் என்று உணர்வுகளில் சரியாக பங்களித்துள்ளார். ஆனால், கதைத் தேர்வில் சிபிராஜ் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.



பிந்து மாதவி வழக்கமான கதாநாயகியாக வந்து போனாலும், கதாபாத்திரத்துக்குரிய நடிப்பை குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்.
'பேய்க்கே பேப்பர் போட்டவன் நானா தான் இருக்கும்' என்று பன்ச் பேசும் யோகி பாபு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோரும் அட்டகாச நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகின்றனர்.
இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்திருப்பது தந்தை மகற்காற்றும் உதவியாகத்தான் இருக்கக்கூடும். அந்த உதவி எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை என்பதும் வருத்தம் தான்.



யுவாவின் ஒளிப்பதிவு முழுக்க பேய் வாசனை. சித்தார்த் விபின் பேய்ப் படத்துக்கான பின்னணி இசையில் சில இடங்களில் ஸ்கோர் செய்பவர், பல இடங்களில் இரைச்சலை மட்டுமே முன்னிறுத்துகிறார்.



தரணிதரன் திரைக்கதையில் பெரிதாக சொதப்பி இருக்கிறார். அயன்புரம் ஊரை சரியாக காட்சிப்படுத்தவில்லை. ஃபிளாஷ்பேக் எந்த வித அழுத்தத்தையும் தராமல், பின்மண்டையில் ஓங்கி அடித்து தலை தெறிக்க ஓட வைக்கிறது.


சுதந்திரத்துக்கு முந்தைய காட்சிகள் எதுவும் படத்துக்கு கூடுதல் பலத்தைத் தரவில்லை. அதற்குப் பிறகான சம்பவங்கள் அலுப்பையும், சோர்வையும் மட்டுமே தருகின்றன. ரிப்பீட் காட்சிகள் இழுவையாய் நீண்டு எப்போ முடியும் என ரசிகர்களை சத்தம் போட்டு கேட்க வைக்கிறது.


பேய்களின் கோபம், கண்ணீர், பழிவாங்கும் படலம் ஆகியவைதான் எந்த ஒரு பேய்ப் படத்துக்கும் ஆதார ஃபார்முலா. அந்த ஃபார்முலாவில் எந்த சோகமும், பின்புலமும், நம்பகத்தன்மையும், லாஜிக்கும் இல்லாதது 'ஜாக்சன் துரை' படத்தின் பெருங்குறை.


மொத்தமாகப் பார்த்தால் 'ஜாக்சன் துரை' இதுவும் ஒரு பேய் படம் என்று மட்டுமே சொல்ல வைக்கிறது.

thanx - the hindu

0 comments: