Friday, February 05, 2016

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

மலையாளத்தில் ஹிட்டடித்த 'பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ் ரீமேக், ஆர்யா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராணா, சிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம், தெலுங்கில் 'பொம்மரில்லு' படத்தை இயக்கிய பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் முதல் தமிழ்ப் படம் என்ற இந்த காரணங்களே 'பெங்களூர் நாட்கள்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.



பொதுவாக ரீமேக் படங்கள் என்றாலே பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். 'பெங்களூர் நாட்கள்' எப்படி இருக்கும்? என்பதை அறியும் ஆர்வத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.


கதை: ஸ்ரீதிவ்யா எம்பிஏ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எதிர்பாராவிதமாக அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஸ்ரீதிவ்யாவின் உறவினர்களான சிம்ஹாவும், ஆர்யாவும் அதைக் கொண்டாடுகிறார்கள். அதற்குப் பிறகு இவர்கள் நட்பு என்ன ஆனது, கள்ளம் கடபடமில்லாத வாழ்வு சாத்தியமானதா, ஸ்ரீதிவ்யாவின் கனவு நிறைவேறியதா, ஆர்யா, சிம்ஹா என்ன ஆகிறார்கள் என்பது மீதிக்கதை.


தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா நடிப்பில் பாஸ்கர் இயக்கிய 'பொம்மரில்லு' வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. அதற்குப் பிறகு அந்தப் படம் தமிழில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' என ரீமேக் ஆனது. தமிழிலும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.


மலையாளத்தில் ஹிட்டடித்த ஒரு படத்தை பாஸ்கர் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்த பாஸ்கரின் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், அந்த முயற்சி முழுமை பெறவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.



படத்தின் தலைப்பில் கூட எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தமிழ்ப்படுத்தி இருக்கிறீர்களே? ஏன் பாஸ்?


கதாபாத்திரத்தின் மொத்த கனத்தையும் தன் தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு ஸ்ரீதிவ்யாவுக்குதான். ஆனால், அந்த கனத்தை தாங்க முடியாமல் திணறுகிறார். தடுமாறுகிறார். புரிதல் - பிரிதல் - இணைதலில் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில் எந்த முதிர்ச்சியும் இல்லை.



கம்பீரம், கண்டிப்பு மிக்க கதாபாத்திரத்தில் ராணா சரியாகப் பொருந்துகிறார். அவரது உடல் மொழியும் கவனிக்க வைக்கிறது.


ஆர்யா ஓரளவு கதாபாத்திரத்துக்கான நடிப்பை நியாயமாக தர முயற்சித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்துங்கள் பாஸ்!



பாபி சிம்ஹா ஏன் அவ்வளவு வலிந்து கஷ்டப்பட்டு தமிழ் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரின் நடிப்பும் ஒட்டாமலேயே இருக்கிறது. பார்வதியின் நடிப்பு கச்சிதம். ராய் லட்சுமி பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் வந்து போயிருக்கிறார்.



பிரகாஷ்ராஜின் நடிப்பும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய் விடுகிறது. டெம்ப்ளேட் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் இதில் பின்னி இருக்கிறார். அவரின் ஒவ்வொரு நவீன மாற்றத்துக்கும் தியேட்டர் குலுங்குகிறது.


குகன் பெங்களூர் நகரத்தை அழகாக தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். மலையாளப் படத்துக்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழ் மறு ஆக்கத்துக்கும் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது.பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ் இரண்டாம் பாதியில் மட்டும் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.


''என்ன நடக்குது இங்கே?''


''கார் நடக்குது!''


''ஏழு மணிக்கு படம்''


''இன்னைக்கு ஏழு மணிக்குன்னு சொல்லுடா! ''என்ற வசனங்களில் வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர்.



ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது கதாபாத்திரத் தேர்வு, வசன உச்சரிப்பு போன்றவை தீராத இடியாப்ப சிக்கலாக தொடரும். ஆனால், அது பெங்களூர் நாட்கள் படத்தில் பெரிதாகவே இருப்பதுதான் குறையாகத் தெரிகிறது.



ஒப்பீட்டளவில் பார்க்கக்கூடாது என்று கண்ணோட்டத்தை மாற்றினாலும், கதாபாத்திரத் தேர்வு நிறைவை அளிக்கவில்லை. அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.



கதாபாத்திரத் தேர்வை ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தால், 'பெங்களூர் நாட்கள்' பெரிய திருப்தியையோ, நல்ல அனுபவத்தையோ தரவில்லை. அந்த விதத்தில் இந்தப் படம் சுவையிழந்த அனுபவம்தான்!

நன்றி - த ஹிந்து

0 comments: