மாதவனின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இறுதிச்சுற்று' படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார்.


'வேட்டை' படத்தைத் தொடர்ந்து நீண்ட மாதங்கள் கழித்து தமிழில் சுதா இயக்கத்தில் நடித்து வந்தார் மாதவன். 'இறுதிச்சுற்று' என்று பெயரிடப்பட்ட அப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார். சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தனர்.இப்படத்துக்காக உடல் அமைப்பை எல்லாம் மாற்றி, குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் மாதவன். 'இறுதிச்சுற்று' படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. படம் எப்போது வெளியீடு, ட்ரெய்லர், இசை உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் இசை ஜனவரி 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.இப்படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இந்தி பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கலந்து கொள்ள இருக்கிறார்.


'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ்(Saala Khadoos)' என்று பெயரிலும் படமாக்கி வந்தார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என யு.டிவி நிறுவனம் அறிவித்திருக்கிறது.நன்றி - த இந்து  , மாலைம்லர், தினத்தந்தி  , தினமணி