Monday, December 21, 2015

தங்க மகன்-திரை விமர்சனம்

a




பாசத்துக்கு முன்னால் பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று வாழும் ஒரு தங்கமான மகனின் கதை.


தனுஷ், எமி ஜாக்சன் இருவரும் காதலிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த கருத்து வேறுபாட்டால் காதல் முறிகிறது. பெற்றோர் தனுஷுக்கு சமந்தாவைத் திருமணம் முடிக்கிறார்கள். எமி, தனுஷின் அத்தை மகன் ஆதிக்கை மணந்துகொள்கிறார்.



அப்பா பணியாற்றும் அலுவலகத் திலேயே வேலைக்குச் சேருகிறார் தனுஷ். புதுமண வாழ்க்கை, பாசமான பெற்றோர், ஒட்டித் திரியும் நண்பன் சதீஷ் என எல்லாம் சரியாக அமைந்துவிட்ட தனுஷின் வாழ்க்கையை அவரது அப்பா ரவி குமாரின் திடீர் தற்கொலை புரட்டிப்போடுகிறது. தனுஷுக்கும் வேலை பறிபோகிறது. அப்பா மீது அலுவலகம் சுமத்திய களங்கமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்பதை உணர்கிறார். இதன் பிறகு தனுஷ் என்ன செய்கிறார், அப்பா மீது படிந்த களங்கத்தை எப்படித் துடைக்கிறார் என்பதுதான் திரைக்கதை.



காதலும் குடும்பப் பாசமும் ஆதிக்கம் செலுத்தும் கதையில் ஆக்‌ஷனுக்கான இடம் அளந்தே வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட குடும்ப நாடகம் போன்ற இந்தப் படத்தில் இளம் நாயகன் ஒருவர் நடிக்கத் துணிந்ததே ஆச்சரியம். இயக்குநர் வேல்ராஜ் காதல் காட்சிகளை இளமைத் துள்ளலோடு சித்தரித்திருக்கிறார். குடும் பப் பாசத்தைக் காட்டும் காட்சிகளில் யதார்த்தம் இருந்தாலும் பழைய படங்களில் பார்த்த காட்சிகளை இவை நினைவுபடுத்துகின்றன. முதல் பாதி காதலும் நட்பும் கலந்து வேகமாகச் செல்ல, இரண்டாம் பாதி சோகத்திலும் கணிக்கக்கூடிய காட்சிகளின் குவியலிலும் சிக்கித் திணறுகிறது.



காதலை மட்டுமின்றி, குடும்ப உறவுகளைச் சித்தரிக்கும் காட்சிகளிலும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கிறார். குடும்பச் சித்தரிப்பில் பல காட்சிகள் புதுமையாக இல்லாவிட்டாலும் மன தைத் தொடுகின்றன. வசனங்களிலும் இயல்பும் கூர்மையும் உள்ளன. தனுஷுக் கும் எமிக்கும் இடையே எழும் வாதத் தில் இருவரது தரப்புகளுக்கும் சம இடம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட் டுக்குரியது. எமிக்கும் அவர் கணவனுக்கும் இடையில் எழும் சண்டைகளிலும் பெண் குரல் ஒடுக்கப்படாமல் ஒலிக்கிறது. திருமணத்துக்குப் பின் தனுஷ் வீட்டில் எமி தங்கும் காட்சியில் தனுஷும் சமந்தாவும் பேசிக்கொள்ளும் காட்சி அழகு.

தனுஷ் அழுகிறார்; ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். தனுஷ் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்கிறார்; ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். பெற்றோரை விட்டு விட்டு வர முடியாது என்கிறார் தனுஷ்; ரசிகர்கள் ஆரவாரம் திரையரங்கை நிறைக்கிறது. இப்படிப்பட்ட ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் ஒரு சவாலை எதிர்கொள்ளும் விதத்தில் கொஞ்சமாவது வேகமும் பரபரப்பும் இருக்க வேண்டாமா? தந்தையின் களங்கத்தைத் தனயன் துடைக்கும் முயற்சிகள் மந்தமாக இருக்கின்றன. மற்ற விஷயங்களில் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் இதில் கோட்டைவிட்டிருக்கிறார்.



விடலைத்தனத்தையும் காதலையும் முன்னிறுத்தும் நடுத்தர வர்க்க குடும்பக் கதைகளில் பொருந்துவது தனுஷுக்கு என்றுமே சிக்கலாக இருந்ததில்லை. அவரது எளிய தோற்றமும் இயல்பான நடிப்பும் இதற்குக் கைகொடுக்கின்றன. இந்தப் படமும் இதற்கு விலக்கல்ல.



எமி ஜாக்சனும் சமந்தாவும் தோன்றும் காட்சிகளிலும் திரையரங்கில் விசில் பறக்கிறது. முன் பகுதியில் இளமைத் துள்ளலும் பின் பகுதியில் சோகமும் கொண்ட பாத்திரத்தை எமி நன்றாகவே செய்திருக்கிறார். குடித்துவிட்டு தனு ஷிடம் மல்லுக்கட்டும் இடத்திலும் பிறகு கணவனிடம் மோதும் இடத்திலும் முத்திரை பதிக்கிறார். பெரும்பாலும் சோகமாகவே வரும் சமந்தா, பாத்திரத்துக்கேற்ற பாவனைகள், உடல் மொழி ஆகியவற்றைப் பொருத்தமாக வெளிப்படுத்திக் கவர்கிறார்.



மறதியால் அவதிப்படும் நபராக வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு தனித்துத் தெரிகிறது. உள்ளடங்கிய குரூரத்தனத்தை மிகையில்லாமல் வெளிப் படுத்தும் ஜெயப்பிரகாஷின் வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது.



அனிருத்தின் இசையில் ‘என்ன சொல்ல’, ‘ஜோடி நிலவே’ ஆகிய பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை சில இடங்களில் காட்சிக்கு மீறிய ஆரவாரத்துடன் ஒலிக்கிறது. ஏ.குமரனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்.



மாஸ் ஹீரோக்கள் குடும்பக் கதை களில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்ற கருத்தைத் துடைக்க நினைத் திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் மேலும் மெனக்கெட்டிருந்தால் அவரது முயற்சி முழு வெற்றி பெற்றிருக்கும்


-தஹிந்து

0 comments: