Wednesday, December 09, 2015

தமிழக அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு!


" சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்திற்கும், அதில் ஏற்பட்ட உயிர் பலிகளுக்கும் தமிழக அரசின் மெத்தனமான போக்கே காரணம். குறிப்பாக சரியான நேரத்தில், ஏரிகளைத் திறந்து தண்ணீரை வெளியேற்றி இருந்தால், இவ்வளவு சேதத்தை எதிர்கொள்ளத் தேவை இருந்திருக்காது. மிகவும் தாமதமாக ஏரிகளின் மதகுகளைத் திறந்ததால்தான், அதிகளவு தண்ணீர் வெளியேறி மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி இருக்கிறது"  என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த ராஜிவ் ராய் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சென்னையில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்த மழை தீவிரமடைந்தது. இதனால் சென்னையைச் சுற்றி உள்ள பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் வேகமாக நிரம்ப ஆரம்பித்தன.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, கடந்த நவம்பர் 15-ம் தேதி விநாடிக்கு 554 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அது சில மணிநேரங்களில் விநாடிக்கு பத்தாயிரம் கன அடியாக என்று உயர்ந்தது. இதனால், நவம்பர் 16-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரி, அதன் மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடியை எட்டிவிட்டது. ஏரியில் இவ்வளவு விரைவாக நீர் மட்டம் உயர்வது ஆபத்து என்பதை உணர்ந்து இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17-ம் தேதி வரை தண்ணீரைத் திறந்துவிடவில்லை. அவர்கள் யாருடைய உத்தரவுக்கோ காத்திருந்ததுபோல், மௌனமாக இருந்தனர்.

ஆனால், கடந்த 17-ம் தேதி வேறு வழியில்லாமல், மொத்தமாக விநாடிக்கு பத்தாயிரம் கன அடித் தண்ணீரைத் திறந்துவிட்டனர். இப்படி அளவுக்கதிமாக தண்ணீர் வெளியேறியதால், தேவையான முன்னெச்சரிக்கை நடடிவக்கைகளை சரியாக எடுக்க முடியாமல் போனது. அதன்விளைவாக தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. பல உயிர்கள் பலியாயின. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயலே இத்தனை விபரீதங்களுக்கும் மிகப்பெரிய காரணம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காத தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து, முறையான விசாரணை நடத்தி தவறுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளதை விட கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இந்த மனு, வரும் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஜோ.ஸ்டாலின்

விகடன்

0 comments: