Thursday, December 31, 2015

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்? ஜெ.க்கு விஜயகாந்த் பதிலடி!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் நிவாரணம் வழங்க வேண்டி தேமுதிக சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பின் அதிமுகவை சார்ந்தவர்கள் மேடை, ஒலிப்பெருக்கிகள், ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடி, தோரணங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டு எனது உருவபொம்மை எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய தேமுதிகவினரின் வேன் கும்பகோணத்தில் வழிமறித்து கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லாம் நடக்கும் வரை அமைதியாக ஒருநாள் முழுவதும் இருந்துவிட்டு, அதன் பிறகு தேமுதிகவை சார்ந்தவர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

தரமில்லாதவர்களுடன் 2011ல் கூட்டணி அமைத்து, தரம்தாழ்ந்த ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர்கள் ஆட்சி அமைத்திட பாடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜெயலலிதா என்னுடன் கூட்டணி அமைக்கும்போது தரம் தாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதே தெரியவில்லையா? அது இப்போதுதான் தெரிகிறதா? மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தமைக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.

ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மபுரியிலே மாணவிகளை எரித்த சம்பவமும், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா சிறைக்கு செல்லும்போதும் அதிமுகவினர் நடத்தும் தரம் தாழ்ந்த அராஜகங்களையும், வன்முறைகளையும் மக்கள் பார்க்கிறார்கள். இவரது அதிமுக மட்டுமே கண்ணியமிக்கது போலவும், மக்களுக்கு தொண்டாற்றுவது போலவும் கூறியுள்ளார். 1996ல் ஊழல் குற்றச்சாட்டால் முதலமைச்சராக இருந்தபோதே  பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனீர்களே அப்போதே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் அதிமுகவில் இல்லையென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தற்போது வெள்ள நிவாரணப் பணியில் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை பறித்து, அதிமுகவினர் எப்படி ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார். எனக்கு எதிராக எதையும் செய்ய வேண்டாமென அறிவித்தும் கன்னியாகுமரியிலும், விழுப்புரத்திலும், அரியலூரிலும் உருவபொம்மையை எரித்து உள்ளார்கள். இதுதான் அதிமுக தொண்டர்களின் கட்டுப்பாடா? ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் கொடுக்கும் மரியாதையா?

நான் தேமுதிக தொண்டர்களிடம் ஆளும் அதிமுக எனக்கு எதிராக வன்முறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டாலும், நீங்கள் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி இருந்தேன். அதற்கு கட்டுப்பட்டு தேமுதிக தொண்டர்கள் எங்கேயும், எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடவில்லை. கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும் மறைத்திடவும், உரிய நிவாரணம் எங்கேயும் வழங்காமல் இருப்பதை மக்களிடம் மறைத்திடவும், ஸ்டிக்கர் அரசாங்கத்தால் நடத்தப்படும் நாடகமே இதுவாகும்" என்று கூறியுள்ளார்.


விகடன்

0 comments: