Sunday, December 20, 2015

ஷாரூக்+கஜோல்.=ஸ்டார் ஃபிட்னெஸ்

சிக்ஸ்பேக் வைத்தால் முகம் பொலிவு இழக்கும்’ என்பார்கள். ஆனால், ஷாரூக் மட்டும் இதில் விலக்கு. 50 வயதாகும் ஷாரூக் இன்றும் டீன்களின் டிரீம் பாய். ஷாரூக் எப்படி உடலை மெருகேற்றினார்?
`விருப்பத்தோடு உடற்பயிற்சி செய்யுங்கள்’ என்கிறார் ஷாரூக். எந்த வேலையைச் செய்தாலும், அதில் 100 சதவிகிதம் ஆர்வத்தோடு செய்வது ஷாரூக் ஸ்டைல். அப்படிச் செய்வதால், பலன்களும் 100 சதவிகிதம் முழுமையாகக் கிடைக்கும். `உடற்பயிற்சியும் அப்படித்தான். விருப்பத்தோடு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்’ என்பது ஷாரூக் தரும் சக்சஸ் டிப்ஸ்.

`15 நாட்களுக்கு ஒரு முறை வொர்க்அவுட் அட்டவணையை மாற்றுங்கள். ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் செய்வது மனதளவில் சோர்வு தரும். மேலும், உடல்தசைகளும் அதற்கேற்ப மாறி, பலன்கள் குறையத் தொடங்கிவிடும்’ என்கிறார்.

`ஆரோக்கியமும் ஃபிட்டான உடலும் உங்களுக்குத் தேவை என முடிவெடுத்தால், உடனே ஆல்கஹால் எடுப்பதை நிறுத்துங்கள். வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை என்பன எல்லாம் கண்கட்டு வித்தை. தேவை இல்லை என்றால், உடனே நிறுத்திவிட வேண்டும். அந்தக் கட்டுப்பாடுதான் ஆரோக்கியத்தின் திறவுகோல்’ என்கிறார்.

`வழிகாட்ட, முறையான ஆள் இருந்தால், அதன்படி நிறைய புரோட்டின் சாப்பிட்டு, அதை அன்றே உடற்பயிற்சிகள் மூலம் எரித்துவிடலாம். இதனால், சீக்கிரமே சிக்ஸ்பேக் உடற்கட்டு கிடைக்கக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யாமல்விட்டால், அதுவரை செய்துவந்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். எனவே, நல்ல பயிற்சியாளர் அமைவது அவசியம்’ என்கிறார் ஷாரூக்.

`ஜங்க் ஃபுட்களை தடுத்து நிறுத்த, நாம் ஒருவர் மட்டும் போராடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண்களிலேயே அவை படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரி, ஜங்க் ஃபுட். அதை நிறுத்தினாலே, பாதி ஆரோக்கியம் வந்துவிடும். மீதிப் பாதிக்கு உடற்பயிற்சி’ என ஃபிட்னெஸ் ரகசியம் பகிர்கிறார் இந்த பாலிவுட் கிங்.

ரண்டு குழந்தைகளின் அம்மா, 40 வயது என கஜோலைச் சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். இன்று மீண்டும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது?
முதல் குழந்தை பிறந்தபோது இருந்த சற்று பருமனான உடலைக் கஷ்டப்பட்டுக் குறைத்தார் கஜோல். `எடை கூடுவது என்பது நம் திறமை குறைவதுபோல’ என்கிறார் கஜோல். மீண்டும் நடிக்க வேண்டும் என முடிவெடுக்காத காலத்திலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் கஜோல்.

`நமது இலக்கு, பெரிதாக,  அசாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் படிகள் பிராக்டிக்கலாக இருக்க வேண்டும். வாரம் ஐந்து நாட்கள் பயிற்சி  செய்யலாம். வாரம் ஏழு நாட்கள், தினமும் மூன்று மணி நேரம் எனத் திட்டமிட்டால், அது நடக்க வாய்ப்பே இல்லை. பின் அதுவே நமது அடுத்தக்கட்ட பயிற்சிகள் செய்யாமல் இருக்கக் காரணமாகிவிடும்’ என்கிறார் கஜோல்.

`இல்லத்தரசிகள்தான் கூடுதல் ஃபிட்னெஸோடு இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலைகள் அளவுக்கு வேறு யாரும் செய்யப்போவது இல்லை. எனவே, இல்லத்தரசிகள் கூடுதல் கவனத்தை ஃபிட்னெஸ் மீது செலுத்த வேண்டும்’ என்கிறார் இந்த ஃபிட்டான இல்லத்தரசி.

‘யோகாவைப்போல எளிதான வொர்க்அவுட் வேறு எதுவும் இல்லை’ என்பது கஜோலின் இன்னொரு சீக்ரெட். `ஆரோக்கியம் என்பது உடலும் உள்ளமும் இணையும் புள்ளியில் இருக்கிறது. யோகா உங்களை மனதளவிலும் ஃபிட்டாகவைத்திருக்கும்’ என்கிறார்.

 `மனதுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். ஆனால், உங்கள் உடல், ஃபிட்னெஸ் இழக்காமல், எவ்வளவு தாங்குமோ அந்த அளவுக்குச் சாப்பிடுங்கள். இதுதான், டயட் என்பதற்கான எளிய சூத்திரம்’ என்கிறார் `தில்வாலே’ நாயகி.

விக்டன்

0 comments: