Sunday, December 13, 2015

பெண்களே முதல் போராளிகள்! -மேதா பட்கர்

மேகம் போல் அலைபாயும் வெண்ணிறக் கூந்தல்...கழுத்தில் தொங்கும் ரீடிங் கிளாஸ்... எளிய பருத்திப் புடவை என்று ரிட்டையர்டு இங்கிலீஷ் டீச்சர் போல் சாந்தமான தோரணையில் இருந்தாலும், இவர் பேச ஆரம்பித்துவிட்டால் மீடியா அதிரும். அதிகாரத்தில் உள்ளவர்கள் அலறுவார்கள். அணை போராட்டம் முதல் அணு போராட்டம் வரை சமூக நலன், மக்கள் சார்ந்த பிரச்னைகளில் நேரடியாகக் களமிறங்கிக் கலக்குபவர்...மேதா பட்கர். நியுட்ரினோ போராட்டத்துக்காக, தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேதா பட்கர், ஜன்னல் வாசகர்களுக்காக மனம் திறந்து பேசினார். 
 
‘டீன் ஏஜ்’ மேதா எப்படிப்பட்டவர்? 
 
பள்ளிப் பருவத்திலேயே சமூக சேவையில் ஆர்வம் இருந்தது. இளைஞர் அமைப்புகள் மூலமாக விடுமுறை நாட்களில் கிராமங்கள், சேரிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு பயிற்சிப் பட்டறைகள், புத்துணர்வு முகாம்கள் நடத்துவோம். கிராமங்களில் பெண்கள் மற்றும் விவசாயத்தின் நிலை குறித்த சர்வேக்களில் பங்கு கொள்வதற்கு முன்னுரிமை கொடுத்ததால் என் சிந்தனை அந்தப் பக்கம் திரும்பியது. என் கல்லூரிக் காலத்தில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, மனித உரிமை மீறல் சர்வ சாதாரணம் ஆனது. அது குறித்து, நண்பர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டேன். குழந்தைப் பருவம் தவிர்த்து, சராசரியான பெண்ணாக நான் வாழ்ந்த நாட்கள் மிகவும் குறைவு. 
 
இன்றும் உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து பேசுவீர்களா? எவ்வாறு புத்துணர்வூட்டிக் கொள்கிறீர்கள்?
 
என் கல்லூரி நண்பர்களில் பலர், இன்றும் பல களப்போராட்டங்களில் என்னுடன் உள்ளனர். அவர்களுடன், பழங்கதை பேசவோ, சிரித்து விளையாடவோ நேரம் கிடைப்பதில்லை.  எழுத்து, இலக்கியம், பேச்சுதான் என் இளைப்பாறுதல். கவிதை எழுதுவதும், வாசிப்பதும் பிடிக்கும். சர்தார் சரோவர் அணை பிரச்னைக்காகப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில், நான் எழுதிய கவிதை, பாடல்கள் சிடிக்களாக வரும் அளவுக்கு பிரபலமாயின. 
 
சமீபத்தில் ஹோலியை ஆதிவாசிகளுடன் கொண்டாடினேன். அவர்களின் பாரம்பரிய முரசு இசை, ஆட்டம் பாட்டத்துடன் இந்த ஹோலி அமைந்தது மறக்க முடியாத தருணம். மற்றபடி, மார்ச் 8 பெண்கள் தினத்தன்று மும்பை சேரிப் பகுதியில் உள்ள பெண்களுடன் மகிழ்ச்சியாகக் கலந்துரையாடுவேன். அவ்வளவுதான். 
 
நடிகர்கள், சினிமா, அதில் சொல்லப்படும் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 
எனக்கு டிவி, சினிமாக்களில் ஆர்வம் இல்லை. நீண்ட தூரப் பயணங்களில் நண்பர்கள், ‘இது நல்லபடம்’ என்று ஏதாவது ஒரு படத்தைப் பரிந்துரைப்பார்கள். அதை மட்டும் பார்ப்பேன். இந்தியில் அமீர்கான் பிடிக்கும். அவர் பங்கேற்கும் படங்கள், சிறந்த கற்பனை வளம் மற்றும் சமூக நல சிந்தனை கொண்டதாக இருப்பதைப் பார்த்துள்ளேன். சில நல்ல படங்கள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மற்றபடி, சினிமாவை சினிமாவாகப் பார்ப்பது மட்டுமே என் வழக்கம். 
 
இந்தி, ஆங்கிலத்தில் உங்களுக்குப் புலமை உண்டு. ஆனால், மற்ற மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்கும்போது எப்படி சமாளிக்கிறீர்கள்? 
 
மராத்தியும் எனக்குப் பரிச்சயமான மொழிதான். குஜராத்தி மொழியைப் புரிந்துகொள்வேன். மக்கள் பிரச்னைகளை முன்வைக்க, மனதில் வலு இருந்தால் போதும். இசையைப் போலவே, கொள்கைகளை வெளிப்படுத்தவும் மொழி ஒரு தடையே இல்லை. நான் பேசும் மொழி தெரியாத மாநில மக்கள்கூட, என் உரையைக் கேட்டு உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பொதுவாக, பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மொழி பெயர்ப்பாளர்களின் உதவியை நாடுவேன். அவர்கள் சிறப்பானவர்களாக இருந்து விட்டால், அன்றைய பேச்சு அருமையானதாக அமையும்.
 
இந்தியாவின் எதிர்காலத் தேவைக்கு அணு மின்சாரம் அவசியம் என அரசு சொல்கிறது. நீங்களோ, அதை எதிர்க்கிறீர்கள். வளர்ச்சி என்பது எதனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்?
 
அணு மின்சாரத்தால் மக்களுக்குப் பாதிப்பு மட்டுமே மிஞ்சும். புதிய திட்டங்கள் மக்கள் சக்தியைப் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்தியா விவசாய நாடு. விவசாயம் காக்கப்பட வேண்டுமென்றால், இயற்கை காக்கப்பட வேண்டும். இதற்காக ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். இயற்கை மூலம் கிடைக்கும் பொருட்களில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட வேண்டும். சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விவசாயம், தொழிற்சாலை என அனைத்து வளர்ச்சியும் இயற்கையைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்தினாலே, பற்றாக்குறையை சமாளிக்கலாம். மின்சாரத்தை வழங்குவதில் நிறைய வழிப்பறி நடைபெறுகிறது. இதைத் தடுக்க வழி காண வேண்டும். மின்சாரத்திற்காக எவ்வளவோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் 30 சதவீத கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் 
கிடைக்கவில்லை. 
 
முந்தைய காங்கிரஸ், இன்றைய பாஜக அரசுக்கான வேறுபாடு என்ன? ஆட்சி மாற்றத்தினால் உங்கள் போராட்டக் களங்களில் மாற்றம் உள்ளதா?
 
காங்கிரஸ், பாஜக இரண்டுமே உலகமயமாக்கல் திட்டத்தைப் பின்பற்றுபவை. முந்தைய காங்கிரஸ் அரசு தவறு செய்யும்போது எதிர்த்துக் கேள்வி கேட்டால், அதற்கான தீர்வைப் பேச்சளவிலேயே வைத்திருந்தது. இதற்கு நில எடுப்புச் சட்டம் நல்ல உதாரணம். பாஜக அரசு அவ்வாறு செய்வதில்லை. இவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால், ஏழை மக்களையோ, மக்கள் அமைப்புகளைப் பற்றியோ கவலைப்படுவது போல் தெரியவில்லை. போகப்போகத்தான் தெரியும். எந்தத் தேர்தலில் நிற்பவர்களாக இருந்தாலும், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அது அவசியம். 
 
ஆம் ஆத்மியுடன் கை கோர்த்த நீங்கள் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?
 
நான் ஆம் ஆத்மியில் இணைந்து தொடக்கத்தில் கட்சிப் பணியாற்றினேன். 2013 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். தோல்வி ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, நாங்கள் இன்னமும் அதிகமாக ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. போதிய ஹோம் ஒர்க் இல்லாமல் லோக்சபா தேர்தலை சந்தித்ததால், ஒரு சில இடங்களில் மட்டும் எங்கள் கட் சிக்கு வெற்றி கிடைத்தது. லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நான் கட்சி பொறுப்பில் இல்லை. ஆனால், கட்சியில் ஒருவராக இருந்தேன். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி மக்கள் பிரச்னை குறித்து துல்லியமாக பேசியது. பெரும் வெற்றி பெற்றது. கட்சியை உருவாக்கிய யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் கடுமையாக உழைத்தனர். கெஜ்ரிவாலின் வெற்றிக்கு உதவினர். கட்சி நலன், பொதுப் பிரச்னைகளில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஆகியவற்றால் நான் போட்டியிடவில்லை.
 
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இந்தியாவின் பெருமையாகக் கூறுகிறோம்.உண்மை--யில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது சாத்தியமா?
 
பெரும்பான்மையான மக்கள் வேற்றுமையில்  ஒற்றுமை என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றனர்.இருந்தபோதும் சில ஜாதிய, மதவாதிகள் மக்களைப் பிரிக்கின்றனர். மதவாதம், பிரித்தாளும் கொள்கையால் ஜனநாயக நாடான இந்தியாவில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்படுகிறது.இதை எதிர்க்க வேண்டும். 
 
வளர்ச்சி எண்ணத்தை அடித்தளமாகக் கொண்ட இளைஞர்கள், பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும். அப்போதுதான், அரசியல் சாசனத்தில் உள்ளது போல் பொருளாதாரம், அரசியல், சமூகநீதியில் சமத்துவம் ஏற்படும். இதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை என்பது அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக்கப்படும். 
 
பெண்கள், போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
மணிப்பூரில் ராணுவ சட்டத்தை எதிர்த்து 12 ஆண்டுகளாகப் போராடி வரும் இரோம் சர்மிளா, அகிம்சை வழிப் போராட்டத்திற்கான அடையாளம். அனைத்துப் பகுதிகளிலும் இயற்கையை பாதிக்கும் விஷயங்கள், 
 
சாதாரண மக்களைப் பாதிக்கும் விஷயங்களை முதலில் எதிர்ப்பவர்கள் பெண்களாகவே உள்ளனர். பெண்களின் போராட்டங்கள் அமைதியையும், வளர்ச்சியையும் 
சார்ந்ததாகவே உள்ளது. இது பாராட்டத்தக்கது. 
 
- ஆர். ஜெயலட்சுமி,
 
படங்கள்: ஆர். பாலகிருஷ்ணன்.
 
ஜன்னல் சமூகத்தின் சாளரம் -இதழிலிருந்து

0 comments: