Tuesday, December 15, 2015

தரை தட்டிய ரியல் எஸ்டேட்!-தத்தளிக்கும் தலைநகரம்

தத்தளிக்கும் தலைநகரம்... - தரை தட்டிய ரியல் எஸ்டேட்!
சி.சரவணன்
மீபத்திய  மழை சென்னை மற்றும் சென்னை புறநகரத்தின்  அனைத்து திசைகளையும் வெள்ளக் காடாக மாற்றியிருக்கிறது. பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் வடிந்திருக்கும் நிலையில் உள் தெருக்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற புறநகரங்களில்தான் மழை நீர் அதிகமாக வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதில்லை. தி.நகர், சைதாப்பேட்டை, கே.கே நகர், அசோக் நகர் போன்ற நகரின் பிரதான பகுதிகளில்கூட பல இடங்களில் முதல் தளம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் வந்திருக்கிறது. தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரின் ரியல் எஸ்டேட் நிலவரத்தை நேரில் அறிந்துகொள்ள களமிறங்கினோம். முதலில் என்னென்ன பாதிப்பு என்பதைப் பார்ப்போம். 
இந்த முறை மழை, வெள்ளத்தால், ஏரிகள் உடைப்பு மற்றும் திறப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாதாரணமானவர்களைவிட வசதி படைத்தவர்கள்தான். காரணம், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத் தளம், கார் பார்க்கிங் பகுதி மூழ்கி, முதல் மாடி மூழ்கும் அளவுக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
எல்லாம் போச்சு!
மேற்கு தாம்பரம் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த சிவக்குமார், ‘‘மழைத் தண்ணீர் வீட்டுக்குள் வந்ததும், வாடகை வீட்டுக்காரர்கள் லாரி கொண்டு வந்து பொருட்களை அள்ளிக்கொண்டு, காலி செய்து விட்டு வேறு ஏரியாவுக்கு சென்றுவிட்டார்கள். இந்த சீசனில் மட்டும் இதுவரைக்கும் ஐந்து முறை வீட்டுக்குள் தண்ணீர் வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய பொருட்கள் செலவு ரூ.5,000, கூலி ரூ.10,000 ஆகி இருக்கிறது. சிலிண்டர், கார், டூவீலர், சோபா எல்லாம் போச்சு. இந்தச் செலவுகளை ஈடுகட்ட அரசு கொடுக்கும் ரூ.5,000 நிவாரணம் எந்த மூலைக்கு? வெள்ளத்தால் தெருவே சாக்கடையாக காட்சி அளிக்கிறது. வாழ்க்கையே வெறுத்து போயிருக்கிறது. அசுத்தமாகிப் போன வீட்டை சுத்தம் செய்யும்போது மனநிலை பாதிக்கப்பட்டது போலிருக்கிறது. குழந்தைகள் வேறு இடத்துக்கு போய்விடலாம் என்கிறார்கள்” என்றபோது அவர் கண்கள் கலங்கின.
முடிச்சூர் சாலை மல்லிகா நகரை சேர்ந்த ஆறுமுகம், மகாராணி தம்பதிகளுடன் பேசினோம். ‘‘கடந்த 2005-ம் ஆண்டு பெரிய மழை பெய்தபோது வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. இவ்வளவுக்கும் வீட்டை சாலையிலிருந்து 7 அடி உயரத்தில் உயர்த்தி கட்டி இருக்கிறோம். இவ்வளவு உயரத்தில் வீடு கட்டியபோது எந்த மழைக்கும் நம் வீட்டுக்குள் தண்ணீர் வராது என 100% நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், இந்த மழை அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இரும்புலியூர் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, தாம்பரம் ஏரி ஆகிய மூன்று ஏரிகளிலிருந்து   தண்ணீர் செல்லும் வழியை அடைத்து, அதில் இரும்புலியூர் - மதுரவாயல் புறவழிச் சாலை போடப்பட்டிருப்பதால்தான் இந்த பாதிப்பு.
எங்களுக்கு கார், பைக் என பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  நாங்கள் அரசிடமிருந்து எந்த நிவாரணத்தையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடுத்த மழை வருவதற்குள் மழை நீர் வெளியேறும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தந்தாலே போதும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் அரசியல்வாதிகள். பல இடங்களில் ரோட்டுக்குகூட பட்டா போட்டு தந்திருக்கிறார்கள்.  இதுபோன்ற அத்துமீறிய செயல்களால்தான் மழையால் இந்த அளவுக்கு அதிக பாதிப்பு.
இந்த வெள்ளச் சேதத்தால் எங்களின் மூன்றாண்டு சேமிப்பு கரைந்துவிட்டது. இப்போது லேசாக மழைத் தூரல் போட்டாலே, என்ன ஆகிவிடுமோ என்று உடல் நடுங்குகிறது” என்றனர்.
பழைய கிராமங்களுக்கு பாதிப்பு இல்லை!
இந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை களில் பெரும்பாலானவை புதிதாக போடப்பட்ட லே அவுட்களில் கட்டப்பட்ட வீடுகள்தான். பழைய கிராமங்களான சென்னையை அடுத்த தாம்பரம், கன்னடப்பாளையம், பழைய பெருங்களத்தூர், மணிமங்கலம் போன்ற பழைய கிராமங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை. காரணம், மேடான இடங்களில்தான் அப்போது வீடு கட்டினார்கள். இப்போது மேடு, பள்ளம் என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. 
ரியல் எஸ்டேட் பாதிப்புகள்!
இப்போது பலரும் வீட்டுக் கடன் மூலமாகத்தான் வீடு வாங்குகிறார்கள். மொத்தமாக பணத்தை திரட்ட இயலவில்லை; வருமான வரிச் சலுகை என்பதால் வீட்டுக் கடனை பலரும் நாடுகிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ரியல் எஸ்டேட் இறக்கத்தில் இருப்பது, ஐடி மற்றும் இதர துறை நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சி காண்பது போன்ற காரணங்களினால் வீட்டுக் கடன் கேட்டு வரு்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்ததுடன்,  கடன் பெற்ற சிலரும் இப்போது அதை ரத்து செய்திருக்கிறார்கள் என்றார் தனியார் வீட்டுக் கடன்  வசதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்.
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், நாவலூர், போரூர், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் சுமார் 40% பேர் பின்வாங்கி இருப்பதாக தகவல். இதே பாதிப்பு குரோம்பேட்டை, தாம்பரம், ஜிஎஸ்டி சாலை, சேலையூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் பகுதிகளிலும் இருக்கிறதாம். பல வீட்டு வசதி நிறுவனங்களின் மேனேஜர்களுக்கு டார்கெட் இருப்பதால், அவர்கள் மழை நீர் பாதிப்பு இல்லாத ஏரியாக்களை அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரை செய்து வருவதாக தகவல்.     
லட்சக் கணக்கில் செலவு செய்து ஃப்ளாட் வாங்கியவர்கள் வேறு வழி இல்லாமல் அதில் தொடர்ந்து வசிக்கும் நிலை இருக்கிறது. அதே நேரத்தில், புதிதா
க மனை, வீடு வாங்கப் போகிறவர்கள் வெள்ளச் சேதத்தை தவிர்க்கலாமே என நினைக்கிறார்கள்.
ஃப்ளாட் முன்பதிவுகள் ரத்து!
சென்னையை அடுத்த பீர்க்கன்கரணை ரமணி நகர் விரிவாக்கத்தில் சுமார் 40 ஃப்ளாட்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டடத்தின் முதல் தளம் மூழ்கும் வரைக்கும் வெள்ளம் வந்துவிட, இதில் முன்பதிவு செய்த பலரும் அதனை ரத்து செய்து கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு பில்டரிடம் சண்டை போட்டு வருவதாக தகவல்.
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கே.ஜே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கஸ்தூரி மற்றும் இளங்கோவுடன் பேசினோம். ‘‘எங்களின் பத்தாண்டு ரியல் எஸ்டேட் அனுபவத்தில் இதுபோன்ற பயங்கர மழை சேதத்தை இப்போதுதான் பார்க்கிறோம். தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் ஒருவர் இடம் எல்லாம் பார்த்து பிடித்து போய், அட்வான்ஸ் தந்துவிட்டார். அண்மையில் கனமழை பிடித்துக்கொண்ட நிலையில் அவர் வாங்கப் போகும் மனையை குடும்பத்துடன் பார்க்க வந்திருக்கிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தண்ணீர் கடல் போல் காட்சி அளித்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு எனக்கு இந்த இடம் வேண்டாம் என்று போய்விட்டார்” என்றார்.
தாம்பரம் - முடிச்சூர் சாலையில் இருக்கும் வடிவேலன் ஹார்டுவேர்ஸ் கடை நாம் சென்றபோது திறந்திருந்தது. அதன் உரிமையாளர் டி.தனசேகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘கடைக்குள் மழை தண்ணீர் வந்ததால் சுமார் 60 மூட்டை சிமென்ட் நனைந்து வீணாகிவிட்டது. மேலும், லோடு வேன் எல்லாம் மூழ்கிவிட்டது. தீபாவளிக்குப் பிறகு ஏறக்குறைய வியாபாரம் இல்லை.  நிலைமை சீராக எப்படியும் 2016 ஜனவரி ஆகிவிடும். அப்போதும் புதிய கட்டுமான வேலை நடக்குமா என்று தெரியவில்லை. பராமரிப்புப் பணிகளுக்காக சில்லறையில் கட்டுமானப் பொருட்கள் விற்பனையாகவே அதிக வாய்ப்பு இருக்கிறது’’ என்று புலம்பினார்.      
  
‘‘சென்னை மற்றும் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் ஏற்கெனவே கடந்த இரு ஆண்டுகளாக மந்தநிலையில்தான் காணப்படுகிறது. எனவே, விலை விரைவாக இறங்கும் என்பது கேள்விக்குறிதான். சென்னையில் 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமியால் கடற்கரையோர நகரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அதிக உயிர் இழப்பும் ஏற்பட்டது. அப்போது யாரும் கடற்கரை ஓரத்தில் வீடு வாங்கக் கூடாது. இருக்கிற வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட வேண்டும் என முடிவு எடுத்தனர். ஆனால், ஆறு மாதத்தில் இந்த பாதிப்பின் அறிகுறி இல்லாமல் ரியல் எஸ்டேட் தொழில் நடக்க ஆரம்பித்தது” என்றார் சொத்து ஆலோசகர் அரசு அழகப்பன்.
இந்த மழையால் சென்னையில் ரியல் எஸ்டேட் பாதிக்கப்படுமா, மீண்டும் இப்படியொரு மழை பெய்தால் அதை எப்படி சமாளிப்பது என தென் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் (ஃப்ளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் சென்னை சௌத்) தலைவர் ஏ.ஆர்.ஆத்மாவை சந்தித்து பேசினோம்.
‘‘இது தமிழ்நாடு ரியல் எஸ்டேட்டுக்கு போதாத காலம். அரசின் வழிகாட்டி மதிப்பு கண்டபடி அதிகரிக்கப்பட்டிருப்பதால், கடந்த மூன்று வருடமாகவே தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் மந்தநிலையிலேயே காணப்படுகிறது. கடந்த வருடம் முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து, ஃப்ளாட்கள் விற்பனை கணிசமாக சுணங்க ஆரம்பித்தது. இப்போது பள்ளமான பகுதிகளில் தண்ணீர் வாரக் கணக்கில் தேங்கியதால், மழை தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மிகவும் மந்தமாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. விற்பவர் விலை சொன்ன காலம் போய், வாங்குபவர் விலை சொல்லி கேட்கும் நிலைக்கு ரியல் எஸ்டேட் தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு அரசின் அலட்சியப் போக்கு, அதிக வருமானம் பார்க்க வேண்டும் என்கிற நிலை, உள்ளாட்சி நிர்வாகம் சீர் இல்லாத நிலையே காரணம்.
அரசின் அலட்சியப் போக்கு என்பதில் ஏரிப் பகுதியில் முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது மற்றும் அதன் கட்டுமானத்தை சிஎம்டிஏ அதிகாரிகள் சரிவர கவனிக்காதது அடங்கும். அடுத்து, அரசின் வருமானத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காக ஒரு இடத்தில் ஒருவர் அதிக வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக மனை மதிப்பை கூட்டி பதிவு செய்தால், அதையே அந்தப் பகுதியில் அடுத்து செய்யப்படும் பத்திரப் பதிவுகளுக்கும் அரசு வழிகாட்டி மதிப்பாக (கைடு லைன் வேல்யூ) மாற்றி விடுவது. மழை நீர் வடிகால் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் சரியாக நிர்வாகம் செய்யாமல் விட்டதால், சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி வாழ்வதற்கு ஏற்ற நிலை இல்லாமல் இருக்கிறது’’ என்று மனம் கொதித்தார்.
‘‘இதனால் ரியல் எஸ்டேட் விலை பாதிக்கப்படுமா என்றோம்.
‘‘நிச்சயமாக..! மழை நீர் தேங்கும் பகுதிகளில் மனை மற்றும் வீடுகளின் விலை குறையும். தாம்பரம் - முடிச்சூர் சாலையில் கிருஷ்ணா நகர், சக்தி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் சுமார்  3 அடி உயரத்துக்கு மழைத் தண்ணீர் தேங்கி நின்றது. இது வீட்டில் குடியிருந்தவர்களின் மனநிலையை பாதித்துள்ளது. பலர் வீட்டை விற்றுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மழை வெள்ளம் வீட்டுக்குள் புகும்போது, டிவி, வாஷிங் மிஷின், கட்டில், அலமாரி என்று பல பொருட்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இதனால் ஒரு குடும்பத்துக்கு சுமார் ரூ.5 லட்சம் இழப்பு. நண்பர் ஒருவரின் கார் மழையில் மூழ்கிவிட்டது. செலவு ரூ.1 லட்சம். இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீடு ரூ.25,000 தான் கிடைக்கும் என்கிறார்கள். மழை மீண்டும் பெய்ய ஆரம்பிப்பதால், வீட்டுக்குள் மீண்டும் செல்ல பயப்படும் நிலை காணப்படுகிறது. இந்தப் பயம் இன்னும் ஆறு மாத காலத்துக்கு இருக்கும். அந்த வகையில் மனை விலை 
10%, அடுக்குமாடி குடியிருப்பு விலை 20% இன்னும் குறையக்கூடும்” என்றார்.
வீடு என்பது அத்தியாவசியம் மற்றும் அந்தஸ்து என்பதைத்  தாண்டி இனி வெள்ளத்தினால்  பாதிக்காமல் இருக்குமா என்று கவனிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டது மழை.
படங்கள்: கே.கார்த்திகேயன், பா.காளிமுத்து,  மா.பி.சித்தார்த்.

ஏரி என்பதை எப்படி அறிவது?
ந.ரமேஷ், வழக்கறிஞர்.
‘‘புதிதாக கட்டப்பட விருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஏற்கெனவே கட்டப்பட்டுவரும் வீடுகள், கட்டிய வீடுகள் இருந்த இடம் ஏரி, குளங்களாக இருந்ததா என்பதை அறிய அந்தப் பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருகிறவர்களிடம் விசாரித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது கிராம நிர்வாக அதிகாரியிடம் இருக்கும் புல வரைபடம் (ஃபீல்டு மேப்) மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதில் எந்த இடத்தில் கிணறு, குளம், குட்டை, ஏரி இருந்தது என்பதை தெளிவாக சொல்லி இருப்பார்கள்

-நாணயம் விகடன் - 20 Dec, 2015

0 comments: