Sunday, December 13, 2015

எல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப்பது இல்லை நீதி!

எல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப்பது இல்லை நீதி!
ஜெயராணி, படங்கள்: சு.குமரேசன்
‘மாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது’ - மால்கம் எக்ஸ்சாலைகளையும் வீடுகளையும் உடைமைகள் அனைத்தையும் பெருமழையால் வெள்ளம்  அழித்துப்போன இந்தப் பேரழிவுச் சூழலிலும் எல்லாவற்றையும் அனுபவிக்கத் தகுதிகொண்ட  அசாதாரணர்களாக, பாதிப்புகள் அண்டாத கேடயத்துக்குள் நகரின் மேட்டுக்குடிகளும் பணக்காரர்களும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் பெய்த மழை எல்லோரையுமே துயரில் தள்ளியது. ஆனால், துயரிலிருந்து மீட்க நீண்ட கரங்கள் சாதாரண மக்களை, ஏழைகளை, சேரிவாசிகளை, வடசென்னையை வாழிடமாகக் கொண்டோரை, நகருக்கு வெளியே தொலைதூரத்தில் தூக்கி வீசப்பட்டோரைப் புறக்கணிப்பது தற்செயலானது அல்ல. தொலைக்காட்சிகளின் கேமராக்களின் முன் காப்பாற்றும்படி கதறியவர்களும், ஆளுங்கட்சியின் குரல்வளையைக் கடித்துவிடும் வகையில் நியாயம் கேட்டவர்களும் இவர்களே! அரசியல் மொழியில் சொல்ல வேண்டுமானால், அடித்தட்டு, கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான சாதாரண பொதுமக்கள் அல்ல, வாக்காளப் பெருமக்கள்!
ஒவ்வொரு முறை இயற்கைப் பேரிடர் நிகழும்போதும் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் நிராதரவாகக் கைவிடப்படுகின்றனர். 2004-ம் ஆண்டு, டிசம்பரில் தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமியின் போதும் இதுவே நடந்தது. சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் எவ்வித நிவாரணமும் இல்லாமல் கைவிடப்பட்டனர். அதில் தலித்கள் இருந்தனர், பழங்குடிகள் இருந்தனர், நரிக்குறவர்களும் முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களாக மீனவர்களை மட்டுமே கணக்கில் எடுத்தது அரசு. `ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எந்தப் பேரழிவிலும் எதை இழந்துவிடப் போகிறார்கள்?’ என அரசுக்குத் தோன்றியிருக்கலாம். அதனாலேயே அவர்கள் தரப்புப் பாதிப்புகளை இழப்புகளாகக் கணக்கில்கொள்ளாமல் அது கைவிடுகிறது. கிடைத்திருக்க வேண்டிய சொற்ப இழப்பீட்டுக்கும் தகுதியற்று ஒவ்வோர் அழிவுக்குப் பின்னரும் வாழ்வை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க அவர்கள் பழகிவிட்டிருக்கின்றனர்.
இந்த மாமழையில் தென்சென்னைதான் அதிகம் பாதிக்கப்பட்டது; மறுப்பதற்கு இல்லை. ஆனால், தென்சென்னையின் ஒவ்வொரு பகுதியும் ஊரும் சேரியுமாக இருக்கிறது என்ற இயல்பின்படி மயிலாப்பூரில் வசதி படைத்தவர்கள் நிறைந்த பகுதிகளில் நீரை வெளியேற்ற உடனடியான, கடும் சிரத்தையை எடுத்த மாநகராட்சி, அதே மயிலாப்பூரில் அம்பேத்கர் பாலத்துக்குப் பின்புறமுள்ள குடிசைப் பகுதிகளை அப்படியே நீரில் மூழ்கிக்கிடக்க அனுமதித்தது. மாநகராட்சிப் பள்ளிக்குள் அடைக்கலமான சுமார் 3,000 பேர் குகையிருட்டில் தவித்தனர். பட்டப்பகலிலேயே பாலியல் கொடுமைகள் நடக்கும் நாட்டில், இருட்டில் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பெருந்த விப்புக்கு உள்ளாகினர் பெற்றோர். குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த இளவேனிலிடம் பேசியபோது,  உயர் சாதியினரும் வசதி படைத்தவர்களும் வசிக்கிற பகுதிகளில் மட்டும் வேகவேகமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மின் இணைப்பு வழங்கப் பட்டதைக் குறிப்பிட்டு வருத்தப்பட்டார். ‘‘அவர்களுக்குத் தந்தார்கள் என்பது எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், எங்களுக்கு ஏன் தரவில்லை... நாங்கள் மனிதர்கள் இல்லையா?’’ என்ற அவரது கேள்வி, எத்தனை நூற்றாண்டுகளாக விடை காணப்படாமல் தொடர்ந்து வரும் கேள்வி.
இத்தனைக்கும் அம்பேத்கர் பாலம் அருகே சிட்டி சென்டர் உள்பட பல உறுதியான, மாற்று மின்வசதி கொண்ட கட்டடங்கள் இருக்கின்றன. அரசு நினைத்திருந்தால் அவர்களுடன் பேசி குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு கூரையையும் சிறிது வெளிச்சத்தையும் உறுதிசெய்திருக்க முடியும். சில தன்னார்வலர்கள் வந்து ஒருவேளை உணவையேனும் வழங்கவில்லை எனில், நிலைமை இன்னும்  மோசமாகியிருக்கும் எனச் சொன்னார் இளவேனில். இதே குற்றச்சாட்டைத்தான் கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் தோழி கிறிஸ்டியும் முன்வைத்தார். பகட்டுத் தெருக்களில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்த மறுநாளே ஓடி ஓடி நீரை வெளியேற்றிய மாநகராட்சி, அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் குடிசை மாற்று வீடுகள் அமைந்த தெருக்களிலும் இதுவரை (இந்த கட்டுரை எழுதப்படும் வரைகூட) நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதுதான் பாரபட்சம். ஒரே மாதிரியாக, ஒரே இடத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இருவரில் பணம் படைத்த, அதிகாரத்தோடு நெருக்கமாக இருக்கிற, மதம், சாதி, இனரீதியாக வலியவராக இருப்பவரை மட்டும் மீட்க அரசின் கரங்கள் நீளுமெனில், அதை மக்களுக்கான அரசு என சொல்லுதல் தகுமா? இதே அரசு ஒரு கலவரத்தின்போதோ, நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கும்போதோ, அடிப்படை வசதிகளைத் திட்டமிடும்போதோ யார் பக்கமிருந்து என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதையும் இதன் மூலம் விளங்கிக்கொள்ள இயலும்தானே!
சென்னையைப் பொறுத்தவரை மேட்டுக்குடிகளின் கழிவுகளைக் கொட்டிவைக்கும் இடமாகவே வடசென்னையை அரசு கருதுகிறது. வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் அவ்வப்போது வரும் மின்னிணைப்பில், செய்தி சேனல்களில் கதறும் மக்களில் கைவிடப்பட்ட சேரிவாசிகளின், சாதாரணர்களின் குரல் நிராதரவாகத் தனித்து ஒலிப்பதை எத்தனை பேரால் கண்டுணர முடியும் என்று தெரியவில்லை. அவர்களின் பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? யாரும் தங்களை வந்து பார்க்கக்கூட இல்லை என்பதுதான்.
வட சென்னையில் வெள்ளம் அடித்துக்கொண்டு ஓடவில்லைதான். ஆனால், இயல்பாகவே நெருக்கடியும் கழிவுகளும் நிறைந்த புளியந்தோப்பு, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் தொடர்மழையினால் வீடுகளுக்குள் நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாம்புகள் மற்றும் பூச்சிகளின் படையெடுப்பால் பெரும் அவதிக்குள்ளானோர் சாலையோரங்களிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் கிடக்க நேர்ந்தது. நீர் வடியத் தொடங்கிய ஐந்தாம், ஆறாம் நாட்களில்தான் வடசென்னைவாசிகள் பற்றி பேச்சே எழுந்தது எனலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நண்பர் கருணாநிதி, வியாசர்பாடியில் எ.கல்யாணபுரம், டி.கல்யாணபுரம், சாமந்திப்பூ காலனி, நேரு நகர், மல்லிகைப்பூ காலனி போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 2,000 குடும்பங்களுக்கு மேல் வீதியில் நிற்பதாகக் குறிப்பிட்டார். ஜெயின் சமூக மற்றும் இஸ்லாமிய சமூக சகோதரர்கள் இல்லை என்றால், மாநகராட்சியின் பற்றாக்குறை உணவில் பாதிப் பேர் பசியில் துவண்டிருப்பார்கள். இத்தனை நாட்களுக்குப் பிறகும் போர்வைகள், உடைகள், பாய்கள் மற்றும் மளிகைப் பொருட்களுக்கான பெருந்தேவை நீடிக்கிறது. எனில், இடர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் யார் தொடர்புமின்றி எவ்வளவு தவித்திருப்பார்கள்?
நகருக்குள் வசிக்கும் மக்களுக்கே இத்தனை பாகுபாடு என்றால், நகரில் இருந்து வீசியெறியப்பட்டு செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் வசிக்கும் தலித் மக்களின் நிலையை யாராலும் கற்பனைகூட செய்யவியலாது. சாதாரண நாட்களிலேயே குடிநீரின்றி, மின்சாரமின்றி, சுகாதார மையமின்றி, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மனிதர்கள் வாழத் தகுதியற்று நகரக் காடாகத் துண்டிக்கப்பட்டுக்கிடக்கும் பகுதிகள் இந்த மழையிலும், பாகுபாட்டிலும் எத்தகைய சிதைவை அடைந்திருக்கும் என்பது அந்தப் பகுதிகளுக்கு ஒரு முறையேனும் சென்று வந்தவர்களுக்குத் தெரியும். நகரின் சிங்காரத்துக்கு சேரிகள் தடையாக இருக்குமென அந்த மக்களை இரக்கமில்லாமல், அனுமதியில்லாமல், இழப்பீடில்லாமல் விரட்டியடித்ததோடு, அந்த இடத்தில் வாழ்வதற்கான எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதுபோன்ற பேரிடர் காலங்களில் உயிரோடுதான் இருக்கிறார்களா என எட்டிப்பார்க்கக்கூட அரசு தரப்பில் ஆள் இல்லை. 1990-களில் மகாராஷ்டிரத்தைச் சிதைத்த பூகம்பத்தின் நிவாரணப் பணிகளிலும் சேரிவாசிகள் புறக்கணிக்கப்பட்டனர். இதேதான் குஜராத்திலும் நேர்ந்தது. அதேதான் இப்போது தமிழகத்திலும் நடக்கிறது.
நகரத்தில் சாதி அழிந்துவிட்டதாகச் சொல்கிறவர்கள் அதிகம். ஆனால் வடசென்னை இன்னமும் சேரியாகத்தான் அறியப்படுகிறது. அது மட்டுமல்ல, தென்சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கோட்டூர்புரம்... என எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... தலித்கள் கணிசமாக வசிக்கும் சேரிகளும் குடிசை மாற்றுக் குடியிருப்புகளும் இருக்கவே செய்கின்றன. நகரின் உயிர்த் துடிப்பாக இருந்து, உடலுழைப்பு சார்ந்த அத்தனை வேலைகளையும் செய்யும் இவர்களை, அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாகக் கொண்டாடுகின்றனவே தவிர, பொதுமக்களாக, பொது சமூகத்தின் அங்கமாகக் கருதுவதே இல்லை. ஆர்.கே.நகரில், வெள்ளப் பாதிப்பை பார்வையிட வந்த ஜெயலலிதா, ‘வாக்காளப் பெருமக்களே’ என்றுதான் மக்களை விளித்தார். இது ஏதோ அவர் தவறுதலாகச் சொன்ன விஷயம் அல்ல. அவர் மனதில் ஆழப் பதிந்திருக்கும் விஷயம். அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களை, தலித்களை, ஏழைகளை அவர் வாக்காளப் பெருமக்களாக கருதுகிறாரே தவிர, பொது மக்களாகப் பார்க்கவில்லை.
இவர்களை வைத்து அரசியல்வாதிகள் காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்த மக்களின் எந்தக் கோரிக்கைகளும் செவிமடுக்கப்படுவது இல்லை; எந்தத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவது இல்லை. சென்னை ஆறுகளின் கரையோரவாசிகளாக, குப்பைமேடுகளின் அடிவாரத்தில் வாழ்பவர்களாக அல்லலுறும் இவர்களை எல்லா வழிகளிலும், எல்லா நிலைகளிலும் சுரண்டுகிறது அரசு. அதாவது ஆளுங்கட்சி!
ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்ததன் காரணம் நகரின் ஏழைகளான தலித்களால் சாத்தியப்படக்கூடிய நிச்சயமான வெற்றியே. இப்படியான பற்பல வெற்றிகளுக்குப் பின்னால் பகடைக்காயாக உருட்டப்படுகின்றன, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வும் இருப்பும். நிரந்தர ஏழைகளாக நிச்சயமற்ற வாழ்வோடு போராடுகிறவர்களாகவே இந்த மக்கள் இருக்கிறவரை இலவசங்களை வீசியெறிந்துவிட்டு ஆதாயங்களை அடைந்துகொண்டே இருக்கலாம் எனும்போது இவர்களின் நல்வாழ்வுக்காக யார் சிந்திப்பார்கள்?
எந்தப் பேரிடரிலும் ‘காப்பாற்றுங்கள்’ என முன்னேறிய சாதியினர் கதறுவது இல்லை. உணவுப் பொட்டலங்களுக்காக அவர்கள் கையேந்தி நிற்கும் காட்சி எங்கும் காணக் கிடைப்பது இல்லை. ஊரென்றும் சேரியென்றும் பிரித்துப் பார்க்காமல் பேரழிவு நிகழ்ந்தாலும் நிவாரணத்தை வேண்டுவோராக, வேண்டியும் கிடைக்கப் பெறாதோராக அடித்தட்டு மக்களே ஒதுக்கப்படுகின்றனர். பொதுவாக பேரிடர் நிவாரணத்தில் 90 சதவிகிதம் பணியை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். தனிநபர்களையும் தனியாரையும் அது தன் பணிக்குப் பக்கபலமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களுக்குள் பாகுபாடில்லாத நிவாரணத்தை அரசால் மட்டுமே உறுதிசெய்ய முடியும். ஆனால், இங்கு நடப்பது தலைகீழ். தனியார்களும் தனிநபர்களும் சமூகப் பொருளாதார எல்லைகளை உடைத்து உதவிக் கரத்தை நீட்டியிருக்கும் வேளையில் அரசுத் தரப்பு ஆணித்தரமாக பிரிவினை எல்லைகளை தன் பாரபட்சத்தால் காப்பாற்றி இருக்கிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இதில் அதிர்ச்சியடைய ஏதும் இல்லை. ஏனெனில், அரசு என்பது இங்கு எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று சிந்திப்பது இல்லை; அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதிகளை அவர்களின் நல்வாழ்வுக்காக, மேம்பாட்டுக்காக செலவழித்தது இல்லை; பொது வளங்களை அவர்களுக்குப் பகிர்ந்தளித்தது இல்லை; அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த முனைந்தது இல்லை; சம உரிமைக்கும் சம வாய்ப்புக்கும் உத்தரவாதம் அளித்தது இல்லை; நாட்டின் வளர்ச்சியில் அவர்
களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அங்கீகரித்து இல்லை. எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவர்கள்  பேரழிவிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவ்வளவே!

எல்லோருக்கும் பெய்கிறது மழை. எல்லோருக்கும் கிடைப்பது இல்லை நீதி.

-விகடன்

0 comments: