Wednesday, December 30, 2015

பசங்க 2-திரை விமர்சனம்:

வித்தியாசமான இயல்பும் போக்கும் கொண்ட குழந்தைகள், முறைசார் கல்வியும் கட்டுப்பாடுகளும் கொண்ட பள்ளிக்கூடங்களில் தங்களைப் பொருத்திக்கொள்ளத் திணறுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றிப் பேசுகிறது பாண்டிராஜின் ‘பசங்க 2’.


கவின், நயனா இரண்டு சுட்டிகளும் துறுதுறுவென்று இருக்கிறார்கள். கவி னுக்கு நடனம் என்றால் பிடிக்கும். தேஜஸ் வினிக்குப் புனைவுலகில் சஞ்சரிக்கப் பிடிக் கும். யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே பின்பற்றாமல் கேள்விகள் கேட்பது இவர்கள் பழக்கம். பள்ளிக்கூடங்களின் முறைசார்ந்த, கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் இவர்களுக்கு சரிவரவில்லை. பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்கள் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோரைக் கூப்பிட்டுப் புகார் செய்கின்றன.



பள்ளிக்கூடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் கடுப் பாகும் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு குழந்தைகளை மேலும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள் கிறார்கள் என்பது மீதிக் கதை.


குழந்தைகள் தொடர்பான பல பிரச் சினைகளில் அடிப்படைக் கோளாறு பெரிய வர்களிடம்தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது ‘பசங்க-2’ திரைப்படம். கற்றல் குறைபாடு கள், அதீத சுறுசுறுப்பு முதலானவற்றைக் குறைகளாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவற்றை எப்படிக் கையாளலாம் எனபதையும் படம் தெளி வாகக் காட்டுகிறது. குறிப்பான பிரச்சினை களுக்குத் தீர்வு சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சம்பந்தமான சமூகத்தின் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான வழிமுறைகளின் மீது படம் கவனம் செலுத்துகிறது.



பள்ளிக்கூடங்கள் நடத்தப்படும் விதம், குழந்தைகள் தொடர்பான ஒவ்வொரு விஷ யத்திலும் நிலவும் பணத்தாசை, குழந்தை களுக்கான போட்டிகள் நடத்தப்படும் முறை, அவர்களை எடைபோடுவதில் உள்ள அடிப்படையான பிழைகள் எனப் பல விஷயங்களைக் கையாள்கிறது இந்தப் படம். பெரும்பாலான காட்சிகள் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் விதத்தில் அமைந்தாலும் இந்தப் படம் பெரியவர் களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தருவதுதான் முக்கியமே தவிர, சிலருக்கு மட்டும் பரிசளிப்பது அல்ல என்பதைச் சொல் வதோடு முடியும் படம் பெரியவர்களுக்குப் பல பாடங்களைச் சொல்கிறது.



இரண்டு குடும்பங்களைச் சுற்றி நகரும் முதல் பாதியில் குழந்தைகளின் இயல்பான போக்குகளும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் நெருக்கடிகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. குழந்தைகளின் குறும்புச் சேட்டைகள் ரசிக்கும்படி இருந் தாலும் குழந்தைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் குழந்தைகளுக்கும் ஏற் படும் மன வருத்தங்கள் மனதைக் கனக்கச் செய்கின்றன. பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க கலகலப்பாகவும் அறிவுரைகளோடும் செல்கிறது.


குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமு மாகக் காட்டியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குழந்தைகளின் உலகம் அதன் இயல்போடு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. எனினும் படம் முழுவதும் ஆவணப்படத் தன்மை தூக்கலாக இருக்கிறது. சூர்யாவும் அமலா பாலும் வந்த பிறகு படம் முழுக்க முழுக்க அறிவுரைப் பாதைக்கு மாறுகிறது. சூர்யாவின் குடும்பத்தில் நிலவும் அதீத ‘சந்தோஷம்’ திகட்டுகிறது. எனினும் குழந்தைகளின் அற்புதமான நடிப்பும் ரசிக்கத்தக்க காட்சிகளும் படத்தைப் பார்க்கவைக்கின்றன.


கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகியோரின் சேட்டை கள், குறும்புகளுக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இருவரும் அற்புத மாக நடித்திருக்கிறார்கள். ராமதாஸ், கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் இன்றைய பெற்றோர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்கள்.


சூர்யா, அமலாபால் இருவரும் படம் சொல்ல வரும் சேதியைத் தங்கள் பக்குவ மான நடிப்பால் பார்வையாளர்களுக்கு எளிதாகக் கடத்திவிடுகிறார்கள். அமலா பால் எப்போதும் சிரித்துக்கொண்டும், சூர்யா ஓயாமல் அறிவுரை சொல்லிக் கொண்டும் இருப்பது நெருடுகிறது.


குழந்தைகளின் உலகம் எவ்வளவு வண்ணமயமானது என்பதைத் தனது ஒளிப்பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம். அரோல் கொரெலி இசை படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. ‘சோட்டாபீம்’ பாடலும், ‘காட்டுக்குள்ள கண்ணைவிட்டு’ பாடலும் கவனம் பெறுகின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் காட்சிகளில் ‘பிசாசு' படத்துக் குத் தான் உபயோகித்த வயலின் இசையை அப்படியே உபயோகித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.


படத்தின் முதல் நாயகன் வசனங்கள் தான். “பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தை களைத்தான் பேசுறாங்க.”, “மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” - இப்படிப் படம் நெடுக பாண்டிராஜின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.



குழந்தைகளின் அதீத சுறுசுறுப்பு முதலான பிரச்சினைகளைக் கையாள்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல் படத்தில் இல்லை. ஆனால், குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களைக் கையாளவும் வளர்க்கவும் வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.


ஆவணப்பட நெடி தூக்கலாக இருந் தாலும் குழந்தைகளுக்கான ரசனை யையும் பெரியவர்களுக்கான செய்தியை யும் சம விகிதத்தில் கலந்த விதத்தில் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டியிருக் கிறது ‘பசங்க 2’.


த ஹிந்து

0 comments: