Monday, December 21, 2015

பாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்

நடிகர் : ரன்வீர் சிங்
நடிகை :தீபிகா படுகோனே
இயக்குனர் :சஞ்சய் லீலா பன்சாலி
இசை :சஞ்சய் லீலா பன்சாலி
ஓளிப்பதிவு :சுதீப் சாட்டர்ஜி
மராட்டிய நாட்டில் படைத் தளபதிக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் பாஜிராவ் (ரன்வீர்) பல தேர்வுகளில் வெற்றி பெற்று தளபதியாக தேர்வாகிறார். இவர் தலைமையிலான படை, பல நாடுகளுடன் போரிட்டு வெற்றிகளை குவிக்கிறது. இதன்மூலம் சிறந்த வீரன் என்று பாராட்டப்படுகிறார் பாஜிராவ்.

இந்நிலையில், முகலாய பேரரசுக்கு ஒரு ஆபத்து வருகிறது. தன் தாய்நாட்டை காப்பாற்ற உதவுமாறு முகலாய பேரரசின் ஒரே மகளான மஸ்தானி (தீபிகா) பாஜிராவை சந்திக்க வருகிறார். இதற்கு பாஜிராவ் உதவ மறுக்கிறார். இதனால் அவர் மீது கோபப்பட்டு அவருடன் சண்டை போடுகிறார் மஸ்தானி. இவரின் வீரத்தை பார்த்து அவர் நாட்டின் போருக்கு உதவ செல்கிறார் பாஜிராவ்.

எதிரிகளுடன் நடந்த போரின் போது, பாஜிராவை மஸ்தானி ஒரு விபத்தில் காப்பாற்றுகிறார். இதனால், மஸ்தானி மீது அன்பு ஏற்படுகிறது. போரில் வென்ற பின்னர், வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும் பாஜிராவ் மஸ்தானிக்கு குறுவாள் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். இதனால் மஸ்தானி பாஜிராவ் மீது காதல் வயப்படுகிறார்.

பின்னர், பாஜிராவை திருமணம் செய்துக்கொள்வதற்காக அவருடைய நாட்டிற்கு செல்கிறார். இவருடைய காதலை ஏற்று பாஜிராவ் மஸ்தானியை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால், இந்த விஷயம் பாஜிராவின் முதல் மனைவி பிரியங்கா சோப்ராவுக்கு தெரிய வர, பல்வேறு பிரச்சனைகளும் விளைவுகளும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை பாஜிராவ் எப்படி சமாளித்தார்? இவரின் வாழ்க்கை எப்படி மாறியது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் பாஜிராவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு போர் வீரனுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் பெற்றிருக்கிறார். போர்க்களத்தில் வீரனுக்குண்டான கம்பீரமான நடிப்பையும், காதல் காட்சியில் மென்மையான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 

ரன்வீர் சிங்கிற்கு மனைவியாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ரா, முதற்பாதியில் துறுதுறு பெண்ணாகவும், பிற்பாதியில் கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவியுமாக நடித்திருக்கிறார். மஸ்தானி கதாபாத்திரத்தில் வரும் தீபிகா படுகோனே தன்னுடைய நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சிறப்பாக வாள் சண்டை, யதார்த்தமான காதல் முகபாவனை என ரசிக்க வைத்திருக்கிறார்.

போர்க்கள காட்சியில் ரன்வீர், தீபிகாவின் வீரம் மற்றும் சண்டைக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கியிருக்கிறார். ஒரு போர் வீரனுக்கு காதலால் ஏற்படும் விளைவுகளை யதார்த்தமாக சரித்திரகால கதையில் ரொமான்டிக் கலந்து சொல்லியிருக்கிறார். 

படத்தின் இசை, பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு அனைத்தும் படத்திற்கு பலமாகவும், ரசிக்கும் படியாகவும் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாஜிராவ் மஸ்தானி’ வெற்றி வீரன்.
http://cinema.maalaimalar.com/2015/12/19174508/Bajirao-Mastani-movie-review.html
-

0 comments: