Thursday, December 17, 2015

மீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்!-மறக்க முடியாத 'டிசம்பர் 2'...

சென்னையை புரட்டிப் போட்டது கனமழை. பஸ்கள் சென்ற சாலையில் படகில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீன்வளத்துறை ஏற்பாட்டில் மீனவர்கள் படகுகளோடு களமிறங்கினர்.
அவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ் நம்மிடம் பகிர்ந்தார்.
 

"சென்னையில் கடந்த 2ம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் முடிச்சூர், வேளச்சேரி, பழைய பெருங்களத்தூர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ராமாவரம், நெசப்பாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. கோவளம் முதல் பழவேற்காடு வரையிலான மீனவ கிராமங்களிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒரு படகுக்கு 4 மீனவர்கள் வீதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படகு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வாடகையாக பேசப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.
படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் உயிரையும் பொருட்படுத்தாமல் நீந்தியே சென்று கயிறு மூலம் பலர் மீட்கப்பட்டனர். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன்வளத்துறை மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொன்ன 'நன்றி' என்ற வார்த்தை நாங்கள் பட்ட அனைத்து சங்கடத்தையும் கடந்து எங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. சில இடங்களில் ஏற்பட்ட சங்கடங்களை எல்லாம் சகித்துக் கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டோம்.
மணப்பாக்கம், சத்யா நகரில் 18 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அங்கு 2ம் தேதி ஒரு படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட முயன்றோம். சத்யா நகருக்கு செல்லும் போது அங்கு கட்டப்பட்டு இருந்த நுழைவு வாயில் உள்ள ஆர்ச் தடுத்ததால் படகை நகருக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் 3ம் தேதி வெள்ளம் கொஞ்சம் வடிந்து ஆர்ச் வெளியே தெரிந்தது. அதன்பிறகு 12 படகுகள் மூலம் சத்யா நகருக்குள் சென்று வெள்ளத்தில் சிக்கி இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகுகள் கவிழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக மீனவர்கள் கீழே இறங்கி பாதுகாப்பாக கரை சேர்த்தனர். அதை இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் உதறல் இருக்கிறது. இதுபோன்று பல சம்பவங்களை சொல்லலாம்.
மீன்வளத்துறை ஏற்பாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு அதற்கான நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் ஏற்பாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு முறையாக பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் மீட்பு பணியில் தனியார் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்ட மூன்று படகுகளில் இரண்டு படகுகள், ஒன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளன.  மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைத்துப் படகுகளும் சாலையில் தண்ணீர் குறைவான பகுதிகளில் இயக்கியதால் அதன் அடிப்பாகம் அதிகளவில் சேதமடைந்துள்ளன. அதற்கான நிதியை மீன்வளத்துறையிடம் கேட்டுள்ளோம். அவர்களும் அதை தர நடவடிக்கை எடுத்துள்ளார்கள். சென்னையில் படகு மூலம் மீட்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு மட்டுமல்ல சென்னை வாசிகளுக்கும் ஓர் பாடம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

விகடன்

0 comments: