Thursday, December 24, 2015

பசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : சூர்யா
நடிகை :அமலாபால்
இயக்குனர் :பாண்டிராஜ்
இசை :அரோல் கொரெலி
ஓளிப்பதிவு :பாலசுப்பிரமணியெம்
வங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள். 

இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.

இந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.

வெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.

இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள். 

பின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார்? குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். 

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் ஆகிய குழந்தைகளே நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் ஆகியோரின் பிள்ளைகளாக வருபவர்கள் குழந்தைகளுக்குண்டான சுட்டித்தனத்துடன் நடித்து அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

முந்தைய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த முனீஸ்காந்த், இந்த படத்தில் கோட் சூட்டுடன் ஒரு உயரதிகாரியாகவும், அதேநேரத்தில் பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். பெரிய அதிகாரியாக இருந்தும், சிறுசிறு பொருட்களை திருடும்போது காமெடியில் ரசிக்க வைக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் வித்யா பிரதீப் அழகாக இருக்கிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக பாசம் காட்டுவதிலும், அவர்களை பிரியும் நேரத்தில் கண்ணீர் விடுவதுமாக நடிப்பில் அழுத்தம் பதித்திருக்கிறார்.

அதேபோல், கார்த்திக் குமார் - பிந்து மாதவி ஆகியோரும் இளம் தம்பதிகளாக நம் மனதில் அழகாக பதிகிறார்கள். இவர்களுடைய நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் சூர்யா, மனநல மருத்துவராகவும், குழந்தைகளை கவரும்படியும் அழகாக நடித்திருக்கிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதேநேரத்தில் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறியிருக்கிறார் என்பது திரையில் அழகாக பளிச்சிடுகிறது. இவருக்கு மனைவியாக வரும் அமலாபாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிரியராக வரும் இவர் குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்கும்விதம் ரசிக்க வைக்கிறது. 

முழுக்க முழுக்க பசங்களை வைத்து ஒரு படத்தை இயக்குவது என்பது பாண்டிராஜூக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த படத்திலும் தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். இன்றைய நகரத்து குழந்தைகளின் உலகம், அவர்கள் பயிலும் கல்வி முறை பற்றியும், அதில் எந்த கல்வி முறை சிறந்தது என்பது பற்றியும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அளவான கதாபாத்திரங்கள், அழுத்தமான வசனங்கள் என படத்தை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

கதைக்கு பக்கபலமாக பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கின்றன. ஆரோல் கொரெல்லி இசையில் மென்மையான பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களும் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. 

மொத்தத்தில் ‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.

http://cinema.maalaimalar.com/2015/12/24141242/Pasanga-2-Movie-review.html

0 comments: