Saturday, December 12, 2015

சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டுக்காரர்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளது பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு. தற்போது இந்த குழு சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை நகரத்தையே உலுக்கிப்போட்டது. வெள்ளத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப் பிராணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளார் பெல்ஜியத்தை சேர்ந்த 42 வயதுடைய பீட்டர் வெய்ன் கெய்ட்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பீட்டர், பாலவாக்கத்தில் தங்கியுள்ளார். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டருக்கு, இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை (மலையேறும் குழு) உருவாக்கினார். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 

இவர்கள் நாடு முழுவதும் உள்ள மலை பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பெல்ஜியம் நாட்டை போன்று சென்னை நகரையும் தன்னுடைய தாய் வீடாக பார்த்த வந்த பீட்டர், மழை வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்தபோது நம்மால் முடிந்த ஏதாவது உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய குழுவை அழைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கிய உயிருக்கு போராடிய குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் 130 பேரை பத்திரமாக மீட்டுள்ளார். மேலும், வெள்ளத்தில் சிக்கிய நாய், பூனைகள் உள்பட 50 செல்லப்பிராணிகளை காப்பாற்றி ‘புளூ கிராஸ்’ அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வார காலம் சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள், துணி வகைகள், மருந்து, மாத்திரைகள், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி உள்பட 25 பொருட்கள் அடங்கிய பைகளை 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். தற்போது நகர் முழுவதும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளது பீட்டர் தலைமையிலான குழு.

ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்திநகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய 8 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியை நாளை தொடங்க உள்ளது இந்த குழு. அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை இன்று வழங்குகிறது பீட்டர் குழு.

-விகடன்

0 comments: