Friday, November 13, 2015

காமெடியனாக தெரிந்தவர் கிங் மேக்கராக ஆனது எப்படி?

ந்திய அரசியலை பொறுத்தவரை லாலு பிரசாத் எப்போதுமே காமெடியனாக பார்க்கப்படுபவர்தான்.  இவரது ஆட்சி காலத்தில் பிகாரில் அரங்கேறாத கூத்துக்களே இல்லை எனலாம்.
பிகாரில்  லாலுவின் ஆட்சிக்கு, மாட்டுத்தீவன ஊழல் முடிவுக்கு கொண்டு வந்தது. அதற்கு பின்னும் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கி விட்டு, பின்னால் இருந்து இயக்கி வந்தார் லாலு . அப்போதெல்லாம் லாலுவை காமெடியானாக சித்தரிக்காத மீடியாக்கள் கிடையாது. இந்தியாவிலேயே லாலுவை மையமாக வைத்துதான்,அதிகப்படியான கார்ட்டூன்கள் வந்திருக்கும்.
பிகாரை பொறுத்த வரை 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் லாலு. இதற்கிடையே 2005-ம் ஆண்டு பிகாரில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துடன்  பாரதிய ஜனதா கட்சி கைகோத்து கொண்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார், பாரதிய ஜனதா ஆதரவுடன் முதல்வரானார். நிதிஷின் ஆட்சியில் பிகார் மாநிலம் ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்தது. தொழில்துறையிலும் மாற்றம் நிகழ்ந்து, அந்த மாநிலம் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருந்தது. 

அதற்கு பின்னர், கடந்த 2010-ம் ஆண்டு தேர்தலிலும் நிதிஷ் குமாரின் கட்சியுடன் இணைந்தே பாரதிய ஜனதா தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதிஷ்- பாரதிய ஜனதா கூட்டணி  206 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் லாலு கட்சி வரலாறு காணாத சரிவை சந்தித்தது. வெறும்  22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 

இந்த சமயத்தில்  லாலு மற்றொரு நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்  லாலுவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை பெற்றவர்கள் எம்.பி, எம்.எல்.ஏ- க்களாக பதவி வகிக்க கூடாது என்ற புதிய சட்டமும் அப்போது அமலுக்கு வந்ததால், லாலு தனது எம்.பி.  பதவியையும் இழந்தார். அத்துடன் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கு பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. பிகாரில் உள்ள 40 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அந்த கட்சியால் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 

இதற்கிடையே 2014-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாரதிய ஜனதாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்டதில் நிதிஷ் குமார் கடும் அதிருப்தி கொண்டார்.  இங்கேதான் கிங் மேக்கராக லாலு உருவெடுக்கத் தொடங்கினார். 

நரேந்திர மோடியை முன்வைத்து, ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவும் மோதிக் கொண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு விலகின. பிகார் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு அளித்து வந்த ஆதரவையும் பாரதிய ஜனதா விலக்கிக் கொண்டது. இதனால் நிதிஷின் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

இங்கேதான் பாரதிய ஜனதா கட்சி தவறாக கணித்து விட்டது. பரம எதிரியான நிதிஷ் குமாருக்கு லாலு ஆதரவளிக்கமாட்டார் என்று அது கருதியது. ஆனால் நடந்ததோ வேறு...இந்த சமயத்தில்தான் லாலு அந்த புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார். 

அதுவரை பரம வைரியாக கருதிய நிதிஷை லாலு அரவணைத்துக் கொண்டார். பிகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.  லாலு எடுத்த இந்த முடிவுதான் கடந்த 5 ஆண்டுகளாக பிகாரில் நிதிஷ் ஆட்சி தொடரவும்  காரணமாக அமைந்தது. பின்னர் காங்கிரசுக்கும் நிதிஷ் குமாருக்குமிடையே உறவை ஏற்படுத்தினார் லாலு. இந்த தேர்தலில்  ராமருக்கு அணில் உதவியது போல, காங்கிரஸ் கட்சியும் நிதிஷ் - லாலு கூட்டணியின் வெற்றிக்கு உதவியுள்ளது.

தற்போதையை நிலையில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு லாலு தேர்தலில் போட்டியிட முடியாது. ஒருவேளை அடுத்த தேர்தலில் லாலு மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடும். அப்போது இதே கூட்டணி மீண்டும் நிலைக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் அதே வேளையில் நிதிஷின் இன்னுமொரு 5 ஆண்டு கால ஆட்சியில் பிகார் மாநிலம் சிறப்பானதொரு முன்னேற்றத்தை எட்டக் கூடும். அதற்கு லாலுவும் ஒரு காரணமாக இருப்பார். 

நன்றி - விகடன்

0 comments: