Sunday, November 15, 2015

சிறுதானியங்கள் கொடுத்த வாழ்க்கை


பதினெட்டு வருடங்களாக ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர் பிரதாப சந்திரன். குறைந்த ஊதியம் என்றாலும் மனநிறைவான வேலை அது என்றவர், தான் தொழில் முனைவோர் ஆன வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.


சொந்த ஊர் மதுரை. வணிகவியல் பட்டம், கூட்டுறவு மேலாண்மை பட்டயம் மற்றும் பல பட்டயப் பயிற்சிகளையும் கையில் வைத்துள்ளார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிப் பொறி மையப் பொறுப்பாளராக பணி யாற்றியவர். அந்த வேலையை தொடர முடியாத நிலையில் வெளியில் வந்து பல்வேறு வகைகளில் சுய தொழில் முயற்சிகளில் இறங்குகிறார்.


சுயமாக தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சிகளில் அவர் கண்டுகொண்டது... முதலீடு அதிகம் தேவை, அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும். இவை எவற்றையும் செய்வதற்கு அவருடைய பொருளாதார நிலைமை உதவவில்லை.


சுலபமாக சொந்த தொழில் தொடங்குபவர்களின் வாய்ப்பாக இருப்பது சிறு உற்பத்திகள்தானே... அதிலிருந்து தொடங்குகிறார்.. அப்படியான ஒரு மனநிலையில் சிறு முதலீட்டைக் கொண்டு ஊறுகாய் தயாரிப்பதில் தொடங்கியது அவரது இன்னொரு வாழ்க்கை.


எத்தனை நாட்களுக்குத்தான் ஊறுகாய் தயாரித்துக் கொண்டிருக்க முடியும். அதே காலகட்டத்தில் இவரது ஆர்வம் இயற்கை விளைபொருட்களை வாங்கி விற்பது என்பதை நோக்கி நகர்ந்தது. இதற்காக விடுமுறை நாட்களில் இயற்கை வேளாண்மைப் பொருட்கள் விற்பனையகம், பயிற்சிகள், அது தொடர்பான கூட்டங்களுக்குச் சென்று தனது ஆர்வத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டு இந்த உணவு பொருள் தயாரிப்பில் இறங்குகிறார்.


தற்போது மாதத்துக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைக்கும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டைக் கொண்டு இந்த தயாரிப்பில் இறங்கினேன். சொந்தமாக இயந்திரங்கள் கிடையாது. வேலைக்கு ஆட்கள் கிடையாது. நானே எல்லா வேலைகளையும் பார்ப்பேன்.


மாற்று உணவு தானியங்கள் எளிதாக கிடைக்கவில்லை என்பதால்தான் மக்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. நான் அவற்றுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கவனம் செலுத்தினேன்.


கம்பு, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு என்ன என்ன உணவு வகைகளை செய்யலாம் என்று பல உணவுக் கண்காட்சிகளுக்கு சென்று செய்து காட்டுவேன். இப்படியாக விற்பனை தொடங்கியது. தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு எனது அபூர்வா உணவுப் பொருட்கள் தயாரிப்புகளை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.
இதன் மூலம் பல இயற்கை பொருள் ஆர்வலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்பும், விற்பனை ஆதரவும் கிடைத்தது. விற்பனையும் அதிகரிக்கத் தொடங் கியது.


பல விற்பனை அங்காடிகளிலும் கேட்கிறார்கள். என்னோடு சேர்த்து ஐந்து நபர்கள் பணியாற்றுகிறோம். சிறு தானிய உணவு வகைகளிலேயே தற்போது பல வெரைட்டிகளைக் கொடுக்கிறேன். குறைந்த லாபம், அதிக விற்பனை இலக்கு என்பதைத்தான் தொழிலில் கடைப்பிடிக்கிறேன். உற்பத்தி யை அதிகப்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
அப்போது வங்கிக் கடன் கிடைக்க வில்லை. நானும் முயற்சிக்கவில்லை. தற்போது சில வங்கிகளிலிலிருந்தே கடன் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.


அடுத்த கட்டமாக தொழிலை வளர்க்க அந்த கடனுதவிகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதற்கென தனியாக இடம் பார்த்து, இயந்திரங்கள் சொந்தமாக வாங்கி கொஞ்சம் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.
அப்போதும் இதே மனநிறைவோடு வேலை செய்ய வேண்டும். சிறு தானியங்களையும் தினசரி உணவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் எங்களைப் போன்ற சிறு உற்பத்தியா ளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்று முடித்தார். நியாயமான ஆசைதான்.




எம்.பிரதாப சந்திரன், அபூர்வா புட் புராடக்ட்ஸ்

thanks the hindu

0 comments: