Saturday, November 28, 2015

ஒருநாள் இரவில்" -சத்யராஜ்-உடன் எப்படி தாக்கு பிடித்தீர்கள்?-அனு மோல் ஓப்பன் டாக்

கடந்த 2013-ம் ஆண்டு கதாசிரியர் ஜோதிநாத் எழுதிய 'ஷட்டர்' திரைப்படம் சக்கைப்போடு போட்டது. விலைமாது வேஷத்தில் நடித்த சஜிதா சிறந்த நடிகை விருது பெற்றார். இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரிப்பு அவதாரம் எடுத்து 'ஒருநாள் இரவில்" படத்தின் மூலம் எடிட்டிங்கில் பல விருதுகள் வென்ற ஆண்டனியை இயக்குநராக்கி இருக்கிறார்.
பொதுவாக வில்லனாக நடிக்கும் காலத்திலேயே சில காட்சிகளில் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவார் சத்யராஜ். ஒரு சிறிய ஷட்டர் கடைக்குள் நடக்கும் கதையில் பல நேரங்களில் சத்யராஜை பொறிக்குள் மாட்டிய எலியாய் அல்லாட வைத்து இருக்கிறார், விலைமாதுவாக நடிக்கும் அனு. உருட்டும் விழிகள், உதட்டுச் சுழிப்பு, கரன்சி கறப்பதில் கறார் என்று அப்படியே விலைமாது வேஷத்தை கண்முன் நிறுத்திய நடிகை அனுமோலிடம் பேசினோம்.
இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்கள் கேரக்டர் பெரிதாக பேசப்பட வில்லையே? 

மலையாளத்துல 15 படத்துக்கு மேல நடிச்சுட்டேன். தமிழில் 'கண்ணுக்குள்ளே" படத்துல அறிமுகமாகி 5 படங்கள்ல ஹீரோயினாக நடிச்சேன். நல்ல படக்கதையில நடிக்கறதுக்காக சில மாசம் நடிப்புக்கு ஹாலிடே விட்டேன். தெலுங்கு பெஸ்டிவலுக்கு போனப்போ அங்கே என்னைப்பார்த்த டைரக்டர் விஜய்சார் , 'நல்ல கதையுள்ள படம் ஒண்ணு இருக்கு நடிக்கிறியா" னு கேட்டார். ஒண்ணும் யோசிக்கவே இல்லை உடனே ஒ.கே சொன்னேன் அதுதான் 'ஒருநாள் இரவில்".  இந்தப்படம்தான் என்னைப்பற்றி பேசவைத்து இருக்கிறது.



மலையாளத்தில் ஜோதிநாத் எழுதிய கதையை அப்படியே நேர்த்தியாக என்னை உயிருள்ள கேரக்டராக மாற்றிய பெருமை டைரக்டர் ஆண்டனி சாருக்குத்தான். இதுதான் அவருக்கு முதல்படம் என்று சொல்றாங்க என்னால் நம்ப முடியலிங்க. சும்மானச்சுக்கும் பொய் சொல்ல விரும்பலை. என்னோட 'தங்கம்" கேரக்டரோட பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி, பெர்ஃபாமென்ஸ் எல்லாமே ஆண்டனிசார் சொல்லிக் கொடுத்தது.

சத்யராஜ் நடிப்பில் எமகாதகனாயிற்றே எப்படி தாக்கு பிடித்தீர்கள்?

'ஒருநாள் இரவில்" ஷுட்டிங் ஃபுல்லா தூசுபடிஞ்ச சின்ன ஷட்டர் போட்ட இடத்துலதான் நடந்துச்சு. அப்போ நடிக்கிற டென்ஷன்ல ஒன்னும் பெரிசா தெரியலை. அப்புறம்தான் டஸ்ட் அலர்ஜி வந்து ரொம்பநாள் கஷ்டப்பட்டேன். சத்யராஜ்சார் எவ்ளோ பெரிய லெஜண்ட் அவர்கூட நடிக்கும்போது பயந்துகிட்டே நடிச்சேன். தன் கேரக்டரைவிட என்னோட வேஷம் பெரிசா பேசப்படணும்னு ரொம்ப ஃகேர் எடுத்துக்கிட்டார்.


 முக்கியமா என் முகத்துல துணியால இறுக்கும் கட்டுற சீன்ல முகத்துல நகக்கீறல் ஏற்படும்ணு நடிக்கறதுக்கு முன்னாடி எல்லா நகத்தையும் சுத்தமா வெட்டிக்கிட்டு வந்த பிறகே நடிச்சார். வழக்கமா கூட நடிக்கிற கோ ஆர்டிஸ்ட்பத்தி யாரும் ஃகேர் எடுக்க மாட்டாங்க இவர் எனக்கு ஹெல்ப் செய்தார். என்னோட அடுத்தடுத்த படங்களபத்தி, என்னோட ஃபேமிலி மெம்பர் மாதிரி கேட்டு அவரோட கருத்தைச் சொன்னார்.

'ஒருநாள் இரவில்" தங்கம் நடிப்பைப்பற்றி யாராவது புகழ்ந்து பேசினார்களா? 

என்னை நேர்ல பாக்குறவங்க, பத்திரிகையாளர்கள் எல்லோரும் பாராட்டுறாங்க. சினிமா சைடுல இருந்தும், வெளியில இருந்தும் பெரிசா யாரும் பேசலை சாரே. ஏன்னா நான் கேரளாவுல இருக்கேன் என்னோட ஃபோன் நம்பர் அவங்களுக்கு தெரியாதே சாரே!....

- எம் .குணா

விகடன்

0 comments: