Wednesday, November 04, 2015

மூளையைக் காப்போம், பக்கவாதம் தடுப்போம்-டாக்டர் எம்.ஏ. அலீம்

உலகப் பக்கவாத நோய் நாள் அக். 29

மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது.
விபத்து, காயம், மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக்கசிவே ‘ஸ்டிரோக்’ என்கிற பக்கவாதம்.
இந்த ஆண்டு ‘உலகப் பக்கவாத நாளி’ன் மையக் கருத்து ‘ஐ ஆம் வுமன்’. பெண்களுக்கு ஏற்படும் பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஆறு விநாடிகளுக்கு...
உலகில் ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப் படுகிறார். உலகெங்கும் ஓராண்டில் 1.5 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 60 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். 50 லட்சம் பேர் உடலுறுப்பு செயலிழப்புடன் வாழ்கிறார்கள்.
இந்தியாவில் லட்சம் பேரில் 200 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நம் நாட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளில் 2 சதவீதம் பேர் பக்கவாத நோயாளிகளே. மூளை நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்படுவர்களில் 20 சதவீதம் பேர் பக்கவாத நோய் காரணமாகச் சேர்க்கப்படுகிறார்கள்.
பக்கவாதம் பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பெருகிவரும் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, இளைஞர்களும் தற்போது பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கு வரலாம்?
ரத்தஅழுத்தம், நீரிழிவு நோயாளிகள், புகைப் பழக்கம், புகையிலை பயன்படுத்துபவர்கள், அதிகக் கொழுப்புச் சத்து உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படலாம். உடலில் ஒரு பகுதி திடீரென்று செயலிழப்பது, கை, கால், முகம் செயலிழந்துபோவது, பேச முடியாமல் போவது, திடீர் குழப்பநிலை ஏற்படுவது போன்றவை பக்கவாதத்தின் அறிகுறிகள்.
ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுகிறது என்றால், மூன்று மணியிலிருந்து நான்கரை மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் இயக்கப் பாதிப்பைத் தடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் பக்கவாதத்தைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் சிறப்பான வசதிகள் உள்ளன.
எப்படித் தற்காப்பது?
அதிக ரத்தஅழுத்தமே மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவுக்குக் காரணம். எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புகை, புகையிலை பழக்கம் உள்ளவர்கள், அந்தப் பழக்கங்களைக் கைவிட வேண்டும், உடல் பருமனைக் குறைக்க வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவர வேண்டும். அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவு, உப்பைக் குறைக்க வேண்டும். கோபம், மனஅழுத்தம் கூடாது. பல்லில் கறை, ஈறுகளில் சீழ்பிடிப்பது, வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் வரலாம். எனவே, பல் சுத்தமும் மிக முக்கியம்.
கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர் 
தொடர்புக்கு: [email protected]

தஹிந்து

0 comments: