Monday, November 23, 2015

உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சரின் கள்ளக்காதல் கொலை வழக்கு - பட்டுக்கோட்டை பிரபாகர்


கோரக்பூரில் ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவன் அவன். பள்ளி நாட்களிலேயே அவனுக்குப் படிப்பைவிட பேட்மிண்டன் விளையாட்டில்தான் அதிக கவனம் சென்றது.

அவனுடைய மூத்த அண்ணன்கள் அனைவரையும் அழைத்துப் பேசினாள் அந்தத் தாய்.

“இவனுக்கு எதில் ஆர்வமோ அதில் இவன் முன்னேறவும், பெரிய சாதனைகள் செய்யவும் நீங்கள் அனைவரும் கடைசி வரை உதவ வேண்டும்'' என்றாள். சகோதரர்கள் அனைவரும் உற்சாகமாக ஒப்புக்கொண்டு அதை சபதமாகவே ஏற்றார்கள்.

அந்தச் சிறுவனை பேட்மிண்டன் பயிற்சி பெற சிறந்த கோச்களிடம் சேர்த்துவிட்டார்கள். அவனும் முழு ஈடுபாட்டுடன் விளையாட்டைக் கற்றான்.

சிறுவர்களுக்கான அத்தனை போட்டிகளிலும் வென்று பதக்கங்கள், கோப்பைகளாக வீட்டை அலங்கரித்தான். 14-வது வயதில் அகில இந்தியப் போட்டியில் வென்று தேசிய ஜூனியர் சாம்பியன் ஆனான்.

அந்தச் செய்தியை ரேடியோவில் கேட்ட அவனது குடும்பம் ஆனந்தக் கண்ணீர்விட்டது. தேசிய ஜூனியர் சாம் பியன் பட்டம் கொடுத்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக பயிற்சிகளில் இறங் கிய அவன், 18-வது வயதில் சீனியர்களுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய சாம்பியன் ஆனபோது உலகமே அவனை வியந்தது.

1980-ம் ஆண்டு அவன் செய்த அந்தச் சாதனையை அடுத்த எட்டு வருடங்களுக்கு அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை. 1980 முதல் 1987 வரை வரிசையாக எட்டு வருடங்கள் இந்திய தேசிய பேட்மிண்டன் சாம்பியன் அவன்தான். இப்படி வரிசையாக எட்டு முறை எந்த நாட்டிலும் எந்த வீரனும் தேசிய சாம்பியனாக திகழ்ந்து சாதித்ததில்லை.

1988-ம் ஆண்டு. சக பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான அமிதா குல்கர்ணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியனுக்கான விளையாட் டுப் போட்டியில் முதல்முறையாக சறுக்கலைச் சந்தித்து, தோற்றுப் போனான்.

வெற்றிபெறாத திருமணம் காரணமாக மிகுந்த மனஉளைச்சலில் அவன் இருந்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ஸ்போர்ட்ஸ் பத்திரிகைகள் எழுதின. இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கான மிக உயர்ந்த விருதான அர்ஜூனா விருதைப் பெற்ற அந்த வீரன் அழகான பெண் குழந்தைக்குத் தந்தையானான். அகன்க்ஷா என்று பெயர் சூட்டினான்.
லக்னோ நகரில் வசித்த அவன் பிறந்து இரண்டே மாதமாகியிருந்த தன் செல்லக் குழந்தையைக் கொஞ்சி விட்டு, பாபு ஸ்டேடியத்துக்கு வழக்கம் போல பயிற்சிக்குச் சென்றான். பயிற்சி முடித்துவிட்டு ஸ்டேடியத்துக்கு வெளியே வந்த அவன் சுடப்பட்டான். அந்த இடத்திலேயே உயிரை விட்ட அவனுக்கு அப்போது வயது 26.


நமது நாட்டின் பேட்மிண்டன் நட்சத்திர வீரர் பிரகாஷ் படுகோனே போல மிகப் பிரமாதமாக சர்வதேச அளவில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு இளம் வீரனின் வாழ்வை சில புல்லட்கள் முடித்து வைத்தன.


அந்த வீரனின் பெயர் சையது மோடி. ரயில்வேயில் அவன் பணியாற்றியதால் ரயில்வே நிர்வாகம் சையது மோடியின் நினைவாக சையது மோடி ரயில்வே ஸ்டேடியம் கட்டியது. சையது மோடி கிராண்ட் ப்ரிக்ஸ் என்று அவனுடைய பெயரில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது பேட்மிண்டன் அசோசியேஷன்.


என்ன நடந்தது?

இந்தியாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் எதற்காக சுடப்பட்டான்? இந்தக் கொலை நடந்து முடிந்து 27 வருடங்கள் ஆன நிலையிலும் சரியான காரணம் வெளிவரவில்லை. ஆனால் வழக்கின் விவரங்களை உன்னிப்பாக கவனித்தால் காரணம் மிகத் தெளிவாகப் புரியும்.

ஸ்டேடியத்துக்கு வெளியே சையது மோடி வந்தபோது ஒரு பைக் வேகமாக வந்ததாகவும், அதில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்தவன் துப்பாக்கியால் சுட்டதாகவும் கண்ணால் பார்த்த சாட்சி ஒருவன் தெளிவாகச் சொன்னான். ஆனாலும் இந்த வழக்கின் விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்ததாலும், பத்திரிகைகள் காவல் துறையைக் கண்டித்து குரல் கொடுத்ததாலும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகே விசாரணை துரிதப்படுத்தப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத் தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜா சஞ்சய்சிங். அவர் சையது மோடி மற்றும் அவரின் மனைவியான அமிதா மோடிக்கு அவர்களின் திருமணத்துக்கு முன்பே அறிமுகமாகி நன்கு பழகிக் கொண்டிருந்த நண்பர். சையது மோடிக்கும் அமிதா மோடிக்கும் திருமணம் செய்து வைத்ததே சஞ்சய்சிங் தான்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர்களில் இருவர் அமைச்சர் சஞ்சய் சிங் மற்றும் சையது மோடியின் மனைவி அமிதா மோடி. திருமணத்துக்கு முன்பிருந்தே அமிதா மோடிக்கும் சஞ்சய் சிங்குக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாகவும்; இது தொடர்பாக சையது மோடிக்கும், அமிதா மோடிக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும்; கூலிப்படை வைத்து இந்தக் கொலையை இவர்கள் இருவரும் திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு.

தங்கள் தரப்பின் ஆதாரங்களாக அவர்கள் சமர்ப்பித்தவற்றில் முக்கியமானவை சையது மோடி மனம் வெறுத்துப் போய் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகத் தன் தாயாருக்கு எழுதிய கடிதம், மற்றும் அமிதா மோடியின் பழைய டைரி. அந்த டைரியில் உள்ள பதிவுகளில் இருந்து அவருக்கும் சஞ்சய் சிங்கிற்கும் இருந்த காதலை உணர முடியும்.


இந்த வழக்கில் சஞ்சய் சிங்கும் அமிதா மோடியும் தங்கள் மீதான குற்றச்சாட்டைஅடியோடு மறுத்தார்கள். அவர்கள் சார்பாக வாதாடியவர்கள் பிரபலமான வக்கீல் ராம்ஜெத்மலானி யும், அவரின் மகள் ராணியும். டைரியில் உள்ள பதிவுகள் ஒரு பெண்ணின் மன சஞ்சலத்தைக் காட்டுவதாகும். ஒரு பெண்ணுக்கு இப்படியான உணர்வுகள் ஏற்படுவது சகஜமே. ஆனால் அமிதா சையது மோடியை அதிகம் விரும்பியதால்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டு உண்மையாக வாழ்ந்து வந்தார் என்று அவர்கள் வாதிட்டார்கள்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங், அமிதா மோடி இருவருக்கும் இந்தக் கொலை வழக்கிலோ சதியிலோ எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது நீதி மன்றம். மீதி ஐந்து பேர்களில் இரண்டு பேர் பெயிலில் வெளிவந்த போது மர்மமான முறைகளில் சுட்டுக் கொல் லப்பட்டார்கள். அந்த வழக்குகளில் இன்றுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. மீதி மூன்று பேரில் ஒருவருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தது கோர்ட். மிச்சம் இரண்டு பேரில் ஒருவன் பைக்கை ஓட்டி வந்தவன். இன்னொருவன் சுட்டவன். பைக்கை ஓட்டி வந்தவனும் விடுதலை செய்யப்பட்டான். சுட்டவனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை தரப்பட்டது. உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பில் கடைசி வரை சுட்டதற்கான சரியான காரணத்தை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்றே குறிப் பிட்டது.

இப்போது சில தகவல்கள்: 1. ஏற்கெனவே திருமணமான சஞ்சய் சிங் அமிதா மோடியை பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பாரதீய ஜனதா கட்சிக்கு மாறினார்.
அரசியல் செல்வாக்கும், திறமையான வக்கீலும் இருந்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியே சையது மோடியின் மரணம்!
- வழக்குகள் தொடரும்


thanks the hindu

0 comments: