Tuesday, November 17, 2015

எப்படி இருக்கிறது வாழ்க்கை?

எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை.

ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது.

கேள்வி- பதில்

அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன.
உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும்.

ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்துகொள்ளப்படுவதில்லை; ஏற்றுக்கொள்ளவும் படுவதில்லை. “ஏன் விற்பனைக் குறியீட்டை அடையவில்லை...?”; “ஏன் வேலையை முடிக்கவில்லை...?”, “ஏன் இந்தச் சேவை வழங்கப்படவில்லை...?”.

இவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் அவற்றைச் சொல்ல நேர்கிற தருணங்கள் தலையைக் குனியவே வைக்கின்றன. பதிலாக சுடுமொழியையும், அவமானத்தையுமே பெறுகின்றன.
இதைத்தான் முன்னோர்கள் “சண்டையில் கிழியாத சட்டை எங்கிருக்கிறது..?” என்று குறிப்பிட்டார்கள். இவற்றைத் தவிர்க்க நினைத்தால் வீட்டிலேயே முடங்க வேண்டியதுதான் என்பதுதான் யதார்த்தம்.

ஈடாகும் இழப்பு

சரி, இவற்றிலிருந்து மீண்டு நமது சமநிலையை எப்படித் தக்க வைத்துக் கொள்வது...?

விவசாயத்தில் சாத்தியமான எல்லா முறைகளையும் பயன்படுத்தி அதிக லாபம் பெற ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ (integrated farming ) உதவுகிறது.
நண்பர் ஒருவரின் இத்தகைய பண்ணையில் கோழி,மாடு,தென்னை,தோட்டப்பயிர்கள், பூக்கள்...என கலவையான காட்சிகள் கிடைக்கும். “கோழீல நட்டம். ஆனா கறிவேப்பிலைல லாபம்...” என்பார்.” “தென்னைல பூச்சித்தாக்குதல். அந்த நட்டத்தை முருங்கைக்காய் தாங்கிக்கிச்சு...” என்பார்.

ஒன்றினால் ஏற்படும் இழப்பு இன்னொன்றின் மூலம் சரிசெய்யப்படுகிறது.
குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடும் போது ஒரு குழந்தை அடிவாங்கும்தான். இன்னொன்று தள்ளிவிடும்தான். ஆனால், வேறு கைகள் “எங்க வீட்ல செஞ்சது...”என்று எதையாவது தரும்.

சிற்றில் சிதைத்தல், சிறு வீடு கட்டல், சிறுபறை முழக்கல், ஊஞ்சல் ஆடல் , செல்போன் நோண்டல், சடையை இழுத்தல், “ உன் பேச்சு கா...” எனக்கூறல், பழம் விடுதல், சமாதானம் செய்தல்..என இவர்களின் ஆளுமைகள் விரிந்து , இந்தக் குழந்தைகளுக்கு சகிப்புத் தன்மை,விட்டுக் கொடுத்தல்,பகிர்தல், புரிந்து கொள்ளல்... போன்றவை இயல்பாகவே வந்து விடும்.

ஒன்றின் இழப்பை , இன்னொரு வரவின் மூலம் சரிசெய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த விவசாய முறை, குழந்தை வளர்ப்பு முறைகளைப் போல ஒருங்கிணைந்த வாழ்க்கையை வாழ முடிந்தால்...?

பல திசைகள்

ஒரு பெரிய நிறுவனத்தில் உடன் பணி செய்த இருவரை நினைவு கூர்கிறேன். பாஸிடம் வசவு வாங்கித் திரும்பும்போது அவமானச் சுவடுகளை அந்த அறையிலேயே துடைத்தெறிந்து மீள்வார்கள்.

ஒருவர் தனது எஞ்சிய நேரத்தில் ஃபினாயில், வாஷிங் பவுடர் தயாரிப்பவர். இன்னொருவர் தான் வளர்க்கும் நாயை “அவன் நாயாகப் பிறந்து விட்டானே “என்று வருந்திப் பேணுபவர்; “ இவ்வளவு திட்டு வாங்கியும் கூலா இருக்கறீங்க “என்றால் “ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். அதுல உண்மை இருந்தா நாம எடுத்துக்கணும். இல்லீனா, தட்டிவிட்டுட்டுப் போய்ட்டே இருக்கணும்.”என்பார்கள்.

ஃபினாயிலும், பிராணியும் அவர்களை வேறு பாதையில் அழைத்துச் செல்கின்றன. ஒரேவிதமான வாழ்க்கை தரும் களைப்புக்கு அங்கே இளைப்பாறல் கிடைக்கிறது. புத்துணர்வுடன் அவர்கள் மீள்கிறார்கள்.

எனவே, உங்களின் கவனம், அவமானம்,காயங்களிலிருந்து திசைதிரும்பி, வேறொன்றின் பக்கம் மையம் கொள்ளுமானால், அது உங்களைச் சேதத்திலிருந்து காப்பாற்றக் கூடும். ஒன்றின் ஆற்றல் இழப்பு இன்னொன்றினால் சரி செய்யப்படக் கூடும்.

உங்களுக்கு எதிரில் பல திசைகள் இருந்தால் ஒரே இடத்தில் நிற்க மாட்டீர்கள்.

மலையேறுதல், பாராசூட்டில் குதித்தல், கோல்ஃப் ,பிலியர்ட்ஸ், நட்சத்திர ஓட்டல்களில் இரவு ஆட்டங்கள், ஸ்கூபா, கார் ரேஸ்...( ! ) என்றெல்லாம் ஈடுபடுகிற அளவுக்கு நேரம் இருக்குமானால் நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சலித்துக் கொள்கிறவர்கள், அந்நிய மொழி கற்கலாம்; இதுவரை செய்திராத புதிய உணவைத் தயாரிக்கலாம்; தொடர்பற்றுப் போன நண்பர்களைத் தேடிப்போகலாம். நண்பர் ஒருவர் அவராகவே ஆர்மோனியம் பயின்றார். அதில் முதலில் தப்பியோடுவது இசை. அப்புறம் அவரது அன்றாட எரிச்சல்கள்.

ஒரேவிதமான வாழ்க்கையைவிட, இந்த ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வரத் தொடங்கும். அந்தத் திசை திருப்பலில் விரும்பத்தகாத சூழல்களிலேயே நீங்கள் நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். நகர்ந்திருப்பீர்கள்..!

thanks the hindu

0 comments: