Saturday, November 21, 2015

மழை... யார் செய்த பிழை?

ஒரு ரியல் (எஸ்டேட்) எச்சரிக்கை!சென்னைக்கு அருகே... சகல சகதி(வசதி)களும் நிரம்பிய குடியிருப்புகள்!

வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் கால் டாக்ஸி நிறுவனங்கள் இப்போது படகு விடுகிறார்கள் என்ற மீம்ஸ் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவியது. கிண்டல் செய்யப்பட்ட கால்டாக்ஸி நிறுவனம் அதனை உண்மையாக்கி இலவசமாகப் படகுகளைவிட்டு, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டதுதான் இத்தனை பாதிப்பிலும் பாராட்ட வேண்டிய அம்சம்.

சொகுசு பங்களாக்கள்... சோக பங்களாக்கள்!

சென்னையில் அனைத்து வசதிகளும் கொண்ட, அமைதியாக வாழ ஏற்ற இடம் என்று தீபாவளிக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங்கில் உச்சத்தில் இருந்த வேளச்சேரியில், படகுப் போக்குவரத்து விடும் நிலை ஏற்பட்டது. வெனிஸ் நகரைப்போல வீடுகளை ஒட்டிப் படகுகள் விடும் அளவுக்கு சென்னை மாநகர், புறநகர் பகுதிகளை மாமழை புரட்டிப் போட்டுவிட்டது.

வேளச்சேரி ஏரியைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகள், பேருந்து நிலையம் அமைந்துள்ள விஜயநகரம், வேளச்சேரியில் இருந்து பெருங்குடிக்குச் செல்லும் நூறடி சாலை என அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளநீர் ஆறாக ஓடியது. முக்கியமான சாலைகளில் இந்த நிலைமை என்றால், குடியிருப்புகளில் மூன்றடி உயரத்துக்கு மேலே தண்ணீர் புகுந்துவிட்டது. வேளச்சேரியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 பேர் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் இருந்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.


மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியாகக் கருதப்பட்ட மேற்கு தாம்பரம்  சி.டி.ஓ. காலனியில் ‘வில்லா’ என்றழைக்கப்படும் சொகுசு வீடுகள் அதிகம். வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாத அந்த வீடுகளுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழையா விருந்தாளியாக வெள்ளநீர் புகுந்தது. அனைத்து அடுக்குமாடிகளிலும் தண்ணீர் புகுந்துவிட்டதால் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்தில் தஞ்சம் அடைந்தனர். மின்வசதி, உணவு, குடிநீர் இன்றித் தவித்தனர். சிலர் நகருக்குள் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

கனமழை கடந்த திங்கள்கிழமை ஓய்ந்தது. மழை ஓய்ந்தாலும் மக்களின் துயரத்துக்கு முடிவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக் கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது. எனவே, ஏரி மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் உதவி!

அடுத்தடுத்து தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டதால் குடியிருப்புகளுக்கு உள்ளே செம்பரம்பாக்கம் தண்ணீர் புகுந்தது. இதனால், சென்னையின் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. மணப்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்தது. வெள்ள நீர் எந்த அதிகாரிகளுக்கும் கட்டுப்படவில்லை. புறநகர்களில் உள்ள பல ஏரிகளுக்கு முறையான வெளியேற்றுக் கால்வாய்கள் இல்லாத நிலையில், சிலர் அவசரப்பட்டு ஆங்காங்கே ஏரிக்கரைகளை உடைத்ததால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் சார்பாக 130 படகுகளைக் கொண்டு குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பல இடங்களில் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதுபோன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியோர் மீட்கப் பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் அளிக்கப்பட்டன.


குழந்தைக்குப் பால் வாங்க வழியில்லை!

வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களிடம் பேசினோம். முடிச்சூர் சோழன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், “ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீதியில் குறைந்த அளவே தண்ணீர் வந்தது. ஆனால், தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கி வீதியில் நின்ற தண்ணீர் வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்தது. முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேல் மாடி வீடுகளில் இருந்தவர்களிடம் அடைக்கலம் புகுந்தோம். கீழ்த்தளத்தில் இருந்த வீடுகளில் இரவில் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.

என் குழந்தை பசியால் அழுதபோது பால் வாங்கக்கூட முடியாத நிலை. தண்ணீரைக் கொடுத்து சமாளிக்க வேண்டிய பரிதாப நிலையில் தவித்தோம். படகு வந்து எங்களை மீட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது” என்றார்.

மாத்திரைகள், சான்றிதழ்கள் நாசமாகின!

‘‘நள்ளிரவுதான் அதிக அளவில் தண்ணீர் வரத் தொடங்கியது. கால் மணி நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்தது. எந்தப் பொருளையும் எடுக்க முடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது. அதற்கான மாத்திரையை எடுக்க டிராவை திறந்தேன். அதிலும் தண்ணீர் போய்விட்டது. பீரோவிலும் தண்ணீர் புகுந்துவிட்டது. என் குழந்தைகளின் சான்றிதழ்களும் பாழாகிவிட்டன. போட்டது போட்டபடி வீட்டின் மாடிக்குப் போய்விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கீழ்த்தளத்துக்கு இறங்கி வந்தேன்” என்றார் கஸ்தூரி.

சி.டி.ஓ. காலனியைச் சேர்ந்த பென்னி, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், அது போரூர் ஏரிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கால்வாய் சீர் செய்யபடாததால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீணாகப்போய்க் கொண்டு இருக்கும் தண்ணீர் முழுவதும் போரூர் ஏரிக்குப் போய் இருந்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சமே வராது. அதேபோல் பள்ளிக்கரணை ஏரியைத் திறந்தபோது கால்வாய் வழியே செல்ல வேண்டிய தண்ணீர், அது தூர்வாரப்படாததால், வீடுகளுக்குள் புகுந்தது. நீர்நிலைகள் வீட்டுமனைகளாக மாற்றி விற்கப்பட்டுவிட்டன. இதற்கு அரசு அனுமதி கொடுத்து விட்டு இப்போது நிவாரணம் வழங்குவது எதற்காக? பல வீடுகளில் கழுத்தளவு தண்ணீர் நின்றது. டி.வி., வி.சி.ஆர்., வாஷிங்மெஷின், கார், பைக், துணிமணிகள், புத்தகங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் சேதம் அடைந்துவிட்டன” என்றார்.



கைக்குழந்தைகள்... கர்ப்பிணிகள்!

மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த நோயாளிகளையும், குழந்தைகளையும் மீட்பதே சிரமமாக இருந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராகுல் என்பவர், ‘‘நாங்கள் சி.டி.ஓ. காலனியில் மீட்புப் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு சிரமங்களில் தத்தளித்த பலரை மீட்டோம். மூன்று மாதக் குழந்தையைப் படகில் ஏற்ற முடியாமல் தோளில் தூக்கியவாறே கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். சிறுநீரகப் பிரச்னையில் தவித்த வயதான முதியவர் ஒருவரை, ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து ‘யூரினரி’ பையோடு அவரை படகில் மீட்டோம். வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களை மீட்டோம்’’ என்றார்.

ஆடுகள், மாடுகள், செல்லப்பிராணிகள்!

மனிதர்கள் மட்டுமின்றி, மாடுகள், வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளும் ஆறடி தண்ணீரில் சிக்கித் தவித்தன. பல இ்டங்களில் தெருக்களில் திரிந்துகொண்டிருந்த பன்றிகள் இறந்துவிட்டதால், துர்நாற்றம் வீசியது. வெள்ளத்தில் தத்தளித்த மாடுகளை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மாடுகளுக்குக் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. பல  இடங்களில் மீட்புக் குழு வரும்வரை காத்திருக்காமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த நீச்சல் தெரிந்தவர்கள் டியூப்களைக்கொண்டு மக்களை மீட்டுள்ளனர். 


கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு, தனது கமாண்டோ சகாக்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். “இதுவரை சுமார் 800 பேரை மீட்டுள்ளோம். நவீன ஃபைபர் படகுகளைக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டோம்.  முடிச்சூரில் வீட்டுக்குள் தண்ணீர் நிரம்பிய அதிர்ச்சியில் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவருக்கு முதல் உதவிசெய்து, பத்திரமாக மீட்டோம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தண்ணீரில் சிக்கிக்கொண்டார். அவரையும் பத்திரமாக மீட்டோம். வீதிகளில் தண்ணீர் நிரம்பிய நிலையில் ஆள் அரவமற்ற வீடுகளில், ஆடுகள் இரண்டாவது மாடியில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. அவற்றையும் மீ்ட்டு வந்தோம்.

முடிச்சூரில் பசுவும் கன்றும் மழை நீரில் சிக்கிக்கொண்டன. தாய்ப் பசுவுக்குக் கழுத்தளவு தண்ணீர். கன்றோ கிட்டத்தட்ட நீரில் மூழ்கிவிட்டது. முதலில் கன்றுக்குட்டியை மீட்டுக் கரை சேர்த்தனர். பிறகு, தாய்ப்பசுவை மீட்டுக் கொண்டுவந்தனர். கரை சேர்ந்த பசுவும் கன்றும் உயிர் மீண்ட மகிழ்ச்சியில் ஒன்றை ஒன்று நக்கிக்கொடுத்து பாசத்தைப் பொழிந்த காட்சி காண்போரை உருகவைத்தது’’ என்றார் சைலேந்திர பாபு.

ஆனந்த அனுபவத்தைத் தர வேண்டிய மழைக்காலம், சென்னை மக்களுக்குத் துயரத்தைத் தந்துள்ளது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தி.ஹரிஹரன்


இயற்கையை வெல்ல முடியாது!

ஏரிகளை ஆக்கிரமித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டது சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழை. நீர்நிலைகளாக இருந்த ஏரிகளையும் கால்வாய்களையும் மனைகளாக மாற்றி விற்பனை செய்ததன் விளைவுதான், இன்று சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதற்குக் காரணம். மனிதர்கள் என்றைக்குமே இயற்கையை எதிர்க்கவோ, வெல்லவோ முடியாது என்பதற்கு சென்னையின் மழை, வெள்ள பாதிப்புகள் ஓர் உதாரணம்.

வெள்ள செய்தி!

சென்னையின் புறநகரில் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடுகளில் தண்ணீர் சூழந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தபோது, அரசு உடனடியாக  100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. இந்தப் பணியில் தமிழகத்தில் கால்டாக்ஸி சேவையில் இருக்கும் ‘ஓலா’ நிறுவனமும் களத்தில் இறங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபைபர் படகுகளைத் தண்ணீர் தேங்கிய வேளச்சேரி, நந்தம்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினரோடு இணைந்து ஈடுபட்டனர். இவர்கள் படகில் இரண்டு நீச்சல் தெரிந்த மீனவர்கள் படகோட்டிகளாக இருந்துள்ளனர். ஒன்பது பேர் உட்காரும் அளவிலான படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட படகுகளை ஓலா நிறுவனம் மீட்புப் பணிக்குப் பயன்படுத்தியுள்ளது. கால்டாக்ஸிக்குக் கட்டணம் வசூல் செய்யும் ஓலா நிறுவனம், இந்த மீட்புப் படகுகளை இலவச பயன்பாட்டில் இயக்கியது. தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையைப் பொறுத்து படகுப் போக்குவரத்து இயங்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுவா மனிதநேயம்?
சி.டி.ஓ. காலனியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இருந்தனர். தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியதும். தொண்டு நிறுவன நிர்வாகிகள், குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். மூதாட்டிகள் 25 பேரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். தொண்டு நிறுவனத்தின் மாடிக்குச் சென்ற மூதாட்டிகள் காப்பாற்ற உதவி கேட்டு இரவில் கூக்குரலிட்டுள்ளனர். காலையில்தான் அவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் வசித்தவர்கள் மீட்புக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் வசிக்கும் சரண்யா “திங்கள் கிழமை படகு மூலம் எங்களை மீட்டனர். அப்போதுதான் மூதாட்டிகள் மீட்கப்பட்டனர். பலர் நடக்க முடியாத நிலையில் இருந்ததால் மீட்புக் குழுவினர் அவர்களைத் தூக்கி வந்து படகில் ஏற்றினர். 25 மூதாட்டிகளையும்  யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. தொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டதற்கு அவர்கள் தரப்பில் சாதகமான பதில் வரவில்லை என்பதுதான் வேதனை” என்றார் துயரத்துடன்.

ஹெலிகாப்டர் பயன்பாடு!

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தங்கள் வீடுகளின் மாடியிலேயே முடங்கியதால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஹெலிகாப்டர்கள் மூலம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன. முடிச்சூர், வேளச்சேரி பகுதியி்ல் சிக்கியிருந்தவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், வெஜிடபிள் பிரியாணி ஆகியவை  இரண்டு நாட்களும் வழங்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் ஹெலிகாப்டர் பறக்க முடியாமல் அங்கு இருந்த மக்கள் தண்ணீருக்கே தவித்துள்ளனர். வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை வைத்து மூன்று நாட்களைச் சமாளித்துள்ளனர் பல குடும்பத்தினர். மின்சாரம் தொடர்ந்து தடைபட்டதால் செல்போன் சார்ஜ் இல்லாமல் உதவிக்குக்கூட யாரையும் அழைக்கமுடியாத பரிதாபத்தில் பல குடும்பங்கள் இருந்துள்ளன. மீட்புப் படையினர் வந்தும் பலர் தங்கள் வீடுகளின் மாடியில் இருந்து வர மறுத்துவிட்டனர். வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாக்க முடியாது என்று இவர்கள் கூறியுள்ளனர்.

விநோத வேண்டுதல்!

குடிதண்ணீர் இல்லை என்று சில நேரங்களில் குடங்களைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் அலையும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.  இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மழை நிற்கவேண்டும் என “அம்மிக்கல்” வைத்து வேண்டுதல் செய்த விநோதமும் நடந்தேறியுள்ளது.

thanks vikatan

0 comments: