Saturday, November 07, 2015

சினிமா எடுத்துப் பார் 33: எங்க வீட்டுப் பிள்ளை!-எஸ்பி. முத்துராமன்

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். அந்தத் திருப்பம் உயர்த்தியும் விடும், சமயத்தில் கீழே தள்ளியும் விடும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. என் தாய் வீடான ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் அப்ரண்டீஸ் ஆக சேர்ந்து உதவி எடிட்டராகி, உதவி இயக்குநராகி, துணை இயக்குநராகி 16 ஆண்டுகாலம் வேலை பார்த்தேன். என் குடும்பத்தினருடன் இருந்த நேரத்தைவிட ஏவி.எம் ஸ்டுடியோவில்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.
அப்படி ஒரு காலகட்டத்தில் சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏவி.எம். செட்டியார் அவர்கள் பார்த்தார்கள். சிறப்பான அந்த நாடகத்தை வாங்கி படமாக எடுக்க முயற்சித்தார்கள். நாடகத்துக்கு கதை, வசனம் எழுதிய சித்ராலயா கோபுவை வைத்தே, படத்தையும் இயக்க முடிவெடுக்கப்பட்டு அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
படத்தை எடுக்கும் பொறுப்பை ஏவி.எம். செட்டியார் அவர்கள் தன் மூத்த மகன் முருகன் சாரிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் முருகன் சார் என்னை அழைத்து ‘‘இந்தப் படத்தில் சித்ராலயா கோபுவுக்கு உதவி இயக்குநராக பணி புரியுங்கள்’’ என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும், கோபுவும் சமகாலத்தில் வேலை பார்த்த வர்கள். நான் சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் உதவியாளராக பணிபுரிந் திருக்கிறேன். ஆனால், கோபு அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முருகன் சார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். எப்போதும் முழு ஈடுபாட்டு டன் வேலை பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தப் படத்தில் என்னால் அப்படி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது.
அடுத்த நாள் திங்கள்கிழமை. ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் பணிவுடன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் ‘‘இவ்வளவு காலம் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந் ததற்கு நன்றி. வெளியே சென்று படம் இயக்க அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தேன். அதை செட்டியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘அவனுக்கு ரொம்ப நாட்களாக வாய்ப்பு கொடுக்கணும்னு இருந்தோம். அதைக் கொடுக்கலை.
வெளியே படம் பண்ணப் போறேன்னு சொல்கிறான். அவனுக்கு முறையே என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து முழு திருப்தியோடு அவனை அனுப்புங்கள்’’ என்று மகன்களை அழைத்து சொன்னார். ஸ்டுடியோவில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்று, கடைசியாக சரவணன் சாரைப் பார்க்கப் போனேன்.
‘நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் நான் அப்போ தும், இப்போதும், எப்போதும் சொல்கிற ஒரே வார்த்தை ‘ஏவி.எம்.சரவணன் அவர்களை’ என்பதுதான். அவர்தான் என் வழிகாட்டி. அவரைப் பார்த்துதான் வெள்ளை உடை அணிந்தேன். லைட் பாய் தொடங்கி தொழிலபதிபர் வரைக்கும் யார் வீட்டு விஷேசம் என்றாலும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்ல சென்று வர வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டுதான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.
பத்திரிகையாளர்களை, ஊடக நண்பர்களை அவர் மதிக்கும் பாங்கை பார்த்து மதித்து நடக்கிறேன். கோபத்தை தவிர்க்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன். இப்படி நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரும் அன்று சந்திக்கும்போது ஒருவித ‘சோகம்’. இருவர் கண்களிலும் கண்ணீர்.
‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பின்போது, ‘‘ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவில் என்ன லென்ஸ் போடுவது என்பதை கேமரா மூலம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயம் டைரக்டர் வியூ ஃபைண்டர் வந்தது. இதில் பார்த்தால்போதும் கேமராவில் பார்க்க வேண்டியதில்லை. அதனை வாங்குமாறு இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் அவர்கள் சரவணன் சாரிடம் கூறினார்கள். சரவணன் சார் என்னை அந்தக் கடைக்கு அனுப்பினார். கடையில் இரண்டு வியூ ஃபைண்டர் மட்டுமே இருந் தன. சரவணன் சாரிடம் சொன்னேன். ‘‘அந்த இரண்டையுமே வாங்கி வந்து விடுங்கள்’’ என்றார். வாங்கி வந்தேன்.
அந்த இரண்டில் ஒன்றை இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரிடம் சரவணன் சார் கொடுத்தார். இன்னொன்றை அவரே வைத்துக்கொண்டார். ‘‘நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இயக்குநராக வருவீங்க என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறி எனக்கு அந்த வியூ ஃபைண்டரை பரிசாக அளித்தார். அத்தனை ஆண்டுகாலம் அதை அவர் எனக்காக பாதுகாத்து வைத்திருந்தார் என்று நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் அந்த வியூ ஃபைண்டரைப் பயன்படுத்தினேன். என் லெட்டர் பேடு, முகவரி அட்டை அனைத்திலும் அந்த வியூ ஃபைண்டரைத் தான் முத்திரையாக வைத்திருக்கிறேன். அந்த அடையாளங்கள்தான் சரவணன் சாருக்கு நான் தெரிவிக்கும் நன்றி. எனக்கு சரவணன் சார்தான் பலம்!
அந்தச் சூழலில்தான் வி.சி.குகநாதன் அவர்கள் ‘‘நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் இயக்குங்கள்’’ என்று வாய்ப்பளித்தார். அவர் எனக்குக் காலத்தினாற் செய்த உதவி அது. அந்தப் படம் ‘கனிமுத்து பாப்பா’. இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி, ஜெயா, குழந்தை நட்சத்திரமாக தேவி நடித்தார்கள். இசையமைப்பாள ராக ராஜு. என் முதல் ஐந்து படங் களுக்குப் பாடல்களை பூவை செங்குட்டு வன்தான் எழுதினார்.
நான் பெரிய படங்களை இயக்குவதற்குச் சென்ற காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான். அண்ணா சொன்னதுபோல் சூழ்நிலைக் கைதியாக ஆனதால் அவரைத் தொடர்ந்து பாடல் எழுத வைக்க முடியாமல் போனது. ‘கனிமுத்து பாப்பா’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வெற்றிப் படமாகவும் பெயர் பெற்றது.
சுப்ரமணிய ரெட்டியார்தான் ‘கனி முத்து பாப்பா’ படத்துக்கு நிதி உதவி செய்தார். அவரைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். படங்களைத் தயாரிப் பதற்கு முன் படப்பிடிப்பு நடக்கும் சினிமா ஷூட்டிங்களுக்கு சென்று என்னென்ன செலவுகள் எப்படி ஆகிறது என்பதை கற்றுக்கொண்டவர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களையே சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சினிமா தொழிலுக்கு வந்தார்.
என் இரண்டாவது படம் ‘பெத்த மனம் பித்து’. அது பெண்கள் படம். திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு 75 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். நடிகையர் திலகம் சாவித்ரியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா? 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடப்பட்டது.
ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தலைமையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க 100-வது நாள். விழா மேடையில் ஏவி.எம்.செட்டியார் அவர்கள், ‘‘இந்தப் படத்தை இயக்கிய முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’’ என்று பாராட்டினார். அடுத்து பேசிய கலைஞர் அவர்கள், ‘‘என்னோட தொண்டருக்கும் தொண்டன் அண்ணன் இராம.சுப்பையாவின் பையன் முத்துராமன். அவர் எங்களுக்குத்தான் முதல் சொந்தம்’’ என்றார். அன்றைக்கு இருவரும் என்னை உரிமை கொண்டாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் 100 நாள் ஓடியதால் எங்கள் குழுவுக்குத் திரையுலகில் நல்ல குழு என்ற பெயர் வந்தது. அடுத்த கட்டம் என்ன?
- இன்னும் படம் பார்ப்போம்...

தஹிந்து

0 comments: