Sunday, November 01, 2015

விரைவில் இசை (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : மகேந்திரன்
நடிகை :ஸ்ருதி ராமகிருஷ்ணன்
இயக்குனர் :வி.எஸ்.பிரபா
இசை :எம்.எஸ்.ராம்
ஓளிப்பதிவு :சிவானந்தம்
சிறு வயதிலிருந்து சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவரைப்போலவே சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார் திலீப் ரோஜர். இரண்டு பேரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து, நண்பர்களாகி, ஒன்றாக வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

இவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே டீக்கடை வைத்து நடத்தி வரும் டெல்லி கணேஷ், இவருக்கு உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், பரத நாட்டிய கலைஞரான நாயகி அர்ப்பனாவுக்கும், மகேந்திரனுக்கும் காதல் வருகிறது. சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போகிறார்கள். 

இதற்கிடையில், டெலி மார்கெட்டிங்கில் பணிபுரியும் ஸ்ருதி ராமகிருஷ்ணனும், திலீப் ரோஜரும் காதலித்து வருகிறார்கள். ஒருநாள் நண்பர்கள் இருவரும் ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஓகே வாங்குகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் சமயத்தில், ஸ்ருதி ராமகிருஷ்ணன் தனது பணி நிமித்தமாக சென்ற இடத்தில் ஒரு தொழிலதிபரின் பிடியில் மாட்டிக் கொள்கிறாள்.

இதையறிந்த, நாயகர்கள் இருவரும் படப்பிடிப்புக்கு செல்லாமல் அவளை காப்பாற்ற செல்கின்றனர். அங்கு நடக்கும் மோதலில் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். இறுதியில், இந்த பிரச்சினைகளில் இருந்து நாயகர்கள் தப்பித்து தங்களது லட்சியத்தை எப்படி அடைந்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

இப்படத்தின் நாயகர்களாக மகேந்திரன், திலீப் ரோஜர் என இரண்டு பேர் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். இருவரும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இரு நாயகிகளில் ஒருவரான அர்ப்பனாவுக்கு சிறிய கதாபாத்திரம்தான். இருந்தாலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

மற்றொரு நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் பார்க்க அழகாக இருக்கிறார். டெல்லி கணேஷ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். இவருக்கும் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும், நிறைவாக செய்திருக்கிறார். சஞ்சய் சங்கர் காமெடி கலகலப்பில்லை.

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் மற்றொரு படம். ஆனால், இப்படத்தில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களின் வலியை இப்படத்தில் சொல்ல மறந்திருக்கிறார் இயக்குனர். அதேபோல், காட்சிகளையும் கோர்வையாக வைக்க தவறியிருக்கிறார். அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிகளை வைத்து குழப்பியிருக்கிறார். இதையெல்லாம் கொஞ்சம் கவனித்திருந்தால் ரசித்திருக்கலாம். 

ராம் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். சிவானந்தம் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘விரைவில் இசை’ எதிர்பார்ப்பு இல்லை.

-மாலைமலர்

0 comments: