Monday, October 19, 2015

மய்யம் -திரை விமர்சனம்

ஏ.டி.எம். மையங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்னும் கேள்வியை எழுப்பும் படம் ‘மய்யம்’.
வீட்டில் எதிர்ப்பைச் சந்திக்கும் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப் போய்த் திருமணம் செய்துகொள்ள முயல்கிறார்கள். நாளைக் காலையில் திருமணம். காதலி பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குச் செல்லும் நாயகனும் அவன் நண்பனும் வெளியில் வரும்போது கையில் கடப்பாரையுடன் ஒருவர் அவர்களைக் குத்த வருகிறார். அதே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் ஒரு மாடலிங் பெண்ணும் மாட்டிக்கொள்கிறாள். அந்த ஏ.டி.எம். மையத்துக்குப் பின்புறம் உள்ள அறையில் பாதுகாவலர் சிக்கியிருக்கிறார். யாருமே வெளியே வர முடியாத நிலையில் என்ன நடக்கிறது என்பதே ‘மய்யம்’ படத்தின் மையக் கரு.
காதலனின் உயிருக்குப் பெண்ணின் பெற்றோர் களால் ஆபத்து இருப்பதை இயக்கு நர் காட்டிவிடுவது, ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே கடப்பாரையுடன் ரவுடி நிற்பதற்கான காரணத்தை வழங்கிவிடுகிறது. ஏ.டி.எம்.முக்குள் சிக்கிக்கொள்ளும் மூவரின் கைபேசி களும் செயலிழந்ததற்காக காரணத்தைச் சொல்லவும் இயக்குநர் மெனக்கெடுகிறார். ஏ.டி.எம் மையத்தினுள் ஏன் அந்த ரவுடி வரவில்லை என்பதற்கான காரணத்தையும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்.
திருமணப் பரபரப்பு, உயிர் ஆபத்தின் பதைபதைப்பு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியபடி நகரும் கதை இறுதியில் காவல் நிலையத்தில் முடிகிறது. கடைசியில் வரும் திருப்பம் எதிர்பாராத ஒன்றாகச் சில்லிட வைக்கிறது.
ஏ.டி.எம் மையங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது இந்தப் படம். ஆனால் மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் எந்த வங்கி ஏ.டி.எம். மையத்தை மட்டும் தனியே நிறுவும் என்று தெரியவில்லை. ஏ.டி.எம் மையத்துக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக்கடைகூட இல்லாதது கதைக் களம் மீதான நம்பகத் தன்மையை ஆரம்பத்திலேயே சரித்துவிடுகிறது. கதையில் வலுவான முடிச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் காட்சிப்படுத்திய விதத் தில் தேர்ச்சியின்மையும் கற்பனை வறட்சியும் தெரிகின்றன. கதா பாத்திரங்களை எவ்வித சுவா ரஸ்யமும் இல்லாமல் படத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏ.டி.எம். பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுச் செய்தியைத் தரும் படம், பாதுகாப்பு பிரச்சினையை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பதில் தவறிவிட்டது.
கதை, திரைக்கதை எழுதித் தயாரித்திருக்கும் ஏ.பி. ஸ்ரீதரைத் தவிர இயக்குநர் ஆதித்ய பாஸ்கர் உட்பட படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருமே கல்லூரி மாணவர்கள். தங்களது முதல் முயற்சியில் இளைஞர்கள் செலுத்தியிருக்கும் உழைப்பும் சிரத்தையும் பாராட்டத்தக்கவை. கல்லூரி மாணவர்களின் முதல் முயற்சி என்பதால் பல இடங்களில் அமெச்சூர்த்தனம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளிப்படையான அபத்தங்களைத் தவிர்த்திருக்கலாம்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த இளைஞர்கள் ஜோக்கடிப்பதும் அச்சுப்பிச்சுவென்று பேசுவதும் பொருத்தமாக இல்லை. பின் அறையில் ஏ.டி.எம். பாதுகாவலராக இருக்கும் ரோபோ சங்கருக்கும் அவர்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் பேசப் பேசத் திரையரங்கில் பெரும் அமைதி நிலவுகிறது. இந்தப் பகுதி முழுவதுமே த்ரில்லர் கதைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
நட்சத்திரத் தேர்வும், சொதப்பல் இல்லாத அவர்களது நடிப்பும் பாராட்டத்தக்கது. நவீன் சஞ்சய், ஜெய் குஹெய்னி, குமரன், சுஹாசினி குமரன், ஹஷிம் ஜைன், பூஜா, முருகானந்தம் ஆகிய புதுமுக இளைஞர்களின் நடிப்பில் சிரத்தை தெரிகிறது. ரோபோ சங்கர் தன் வசனங்களாலும் உடல் மொழியாலும் கலகலப்பூட்ட முயல்கிறார். கதைக்களத்துக்குப் பொருந்தாத வசனங்களால் அவர் முயற்சி பிசுபிசுத்துப்போகிறது.
கலை இயக்குநரும், ஆடை வடிவமைப்பாளரும் தங்கள் வேலைகளை நன்கு செய்திருக்கிறார்கள். சரத், ரோஹித்தின் பின்னணி இசை சில இடங்களில் இதமாகவும் சில இடங்களில் இரைச்சலாகவும் உள்ளது. இரவில் நடக்கும் கதைக்கு மார்ட்டினின் ஒளிப்பதிவு வலு சேர்க்கிறது. ஆடை வடிவமைப்பாளர் வருணா ஸ்ரீதரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இத்தனை பிரச்சினைகளைத் தாண்டி, பழைமையின் சாயலற்ற ஒரு த்ரில்லர் கதை தமிழ் சினிமாவில் கையாளப்பட்டிருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.

தஹிந்து

0 comments: