Saturday, October 17, 2015

சிவப்பு-திரை விமர்சனம்

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுமானக் களம் அது. ஒரு அசம்பாவிதத்தால் பலர் வேலையை விட்டு போய்விட, புதிதாக ஆட்களைத் தேட வேண்டிய நெருக்கடி அதன் பொறுப்பாளர் கோனாருக்கு (ராஜ்கிரண்) ஏற்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்தி ரேலியா தப்பிச் செல்ல முனையும் ஈழத் தமிழர் கள் அவரது கண்ணில்படுகின்றனர். ஆஸ்தி ரேலியாவுக்குப் பத்திரமாக அனுப்பிவைப்பதாக உறுதியளித்து அவர்களை வைத்து வேலை யைத் தொடர்கிறார்.
பணியிடத்தில், இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக் கும் தமிழக கட்டுமானத் தொழிலாளிக்கும் காதல் ஏற்படுகிறது. தேர்தல் நெருங்குவதன் காரணமாக ஏற்படும் அரசியல் நெருக்கடிகளால் அகதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், காதல் கைகூடியதா என்பதே சத்யசிவா இயக்கத்தில் வந்துள்ள ‘சிவப்பு’ படத்தின் கதை.
கட்டுமானக் களத்தில் தொடங்கும் படம் விரைவிலேயே இலங்கைத் தமிழ் அகதிகளைச் சுற்றியதாக வளர்கிறது. தமிழக அகதிகள் முகா மின் நிலைமை குறித்து துணிச்சலான விமர்சனங் களை முன்வைக்கிறது இப்படம். அகதிகள் தப்பிச் செல்லும் காட்சி, அரசியல்வாதியின் விபரீதமான தலையீடு, நீதிமன்றத்தில் ராஜ்கிரணின் வசனங் கள் ஆகியவை அழுத்தமாக உள்ளன. மற்றபடி, திரைக்கதையில் அழுத்தமான காட்சிகள் அதிகம் இல்லை.
மோதலில் தொடங்கும் காதலிலும் புதிதாக எதுவும் இல்லை. தான் காதலிக்கும் பெண், தேடப்படும் அகதி என்பதை அறிந்த இளைஞன் அதுபற்றிய பொறுப்பே இல்லாமல் நடந்துகொள்கிறான். திரைக்கதையில் காதலுக் குக் கொடுத்திருக்கும் இடத்தில் சிறிதளவு அகதி களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதற்குக் கொடுத் திருக்கலாம். உள்ளூர் அரசியல் கோணத்தையும் இன்னும் சற்று வலுவாகச் சொல்லியிருக்கலாம்.
படத்தில் இளம் காதல் ஜோடி யாக வரும் நவீன் சந்திராவும் ரூபா மஞ்சரியும் பாத்திரங் களுடன் நன்கு பொருந்து கின்றனர். ஆனாலும் ராஜ்கிரண் தான் நாயகன். கட்டுமானத் தொழிலின் சவால்களைக் கையாள்வது, அகதிகளுக்காக இரங்குவது, இன்ஜினீயர்களை எதிர்கொள்வது, அரசியல் வாதிகளுடனான உறவைப் பேணுவது, பொங்கி எழுவது என்று பன்முகம் கொண்ட பாத்திரத்தில் பிரகாசிக்கிறார்.
கதையோடு ஒட்டிய நகைச்சுவையை வழங்கும் பாத்திரத்தில் தம்பி ராமையா நன்றாக நடித்திருக்கிறார்.
சத்யசிவாவின் வசனங்கள் பல இடங்களில் யதார்த்தம்; தேவைப்படும் இடங்களில் கூர்மை! அகதிகளின் நிலையைச் சொல்லும் இடங்களில் உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டாமலேயே வலிமையைக் கூட்டியிருக்கிறார். கட்டுமானக் களத்தை மது அம்பட் கேமரா தத்ரூபமாகப் படம்பிடித்திருக்கிறது. காட்டுப் பகுதி சண்டை நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசை நன்றாக அமைந்திருப்பதுடன் 4 பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன. ‘சடுகுடு மனதில்’ பாடல் அதன் மெட்டுக்காகவும் அகதிகளின் வலியைச் சொல்லும் கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்காகவும் மனதில் நிற்கிறது. ஹரிஹரனின் குரல் மனதைத் தொடுகிறது.
பலரும் சொல்லத் தயங்கும் அகதிகள் பிரச்சினையை இயக்குநர் சத்யசிவா துணிவோடு கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது. கட்டுமானக் களத்தின் அன்றாட நிகழ்வுகளை சுவையாகச் சித்தரித்திருக்கிறார். குறிப்பாக டீ போடும் காட்சி. அகதிகள் முகாமின் நிலைமையைச் சித்தரிக்கும் சில காட்சிகளும் இருந்திருந்தால் அவர் நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கும்.
‘‘இலங்கைத் தமிழர்களை ஆதரியுங்கள் அல்லது கைவிடுங்கள். ஆனால், உங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளாதீர் கள்’’ என்னும் செய்தியை வலுவாகச் சொல் கிறது படம்.
வசனங்களுக்கு இணையான வலிமையை காட்சிகளிலும் கொண்டு வந்திருந்தால், இலங் கைத் தமிழர்களின் துயரத்தை யும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியலையும் சொல்லும் முக்கியமான படமாக இருந்திருக்கும்.

நன்றி-தஹிந்து

0 comments: