Sunday, October 04, 2015

காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 7)

காஞ்சியை மிரட்டும் துபாய் ஃபோன் அழைப்புகள் !
‘நேத்தைக்கு வரை நல்லாத்தான் இருந்தார். துபாய்ல இருந்து ஒரு போன் வந்தது மனுஷன் நொடிஞ்சு போயிட்டார்!’ - காஞ்சிபுரம் தொழில் மற்றும் வியாபார வட்டாரங்களில் சர்வ சாதாரணமாக கேட்கக் கூடிய வாசகம் இது! 

துபாயில் இருந்து வரும் போன் கால்களுக்கு இவ்வளவு பயம் ஏன்? 

காஞ்சியின் தாதாவாக வர்ணிக்கப்படும் ஸ்ரீதர்தான் இந்த பயத்திற்கெல்லாம் காரணம். தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் நீ..........ண்டகாலமாக 'தேடப்பட்டு' வரும் ஸ்ரீதர், தற்போது இருப்பது துபாயில். அங்கிருந்தபடியே தனது நெட்வொர்க் மூலம் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்கின்றான். 'ஆமை புகுந்த வீட்டைப்போல, ஸ்ரீதர் புகுந்த இடமும் இருக்கும்' என்பார்கள் காஞ்சி வட்டாரத்தில்.  

யார் இந்த ஸ்ரீதர் ?

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் கிராமம்தான் ஸ்ரீதரின் பூர்வீகம். பத்தாம் வகுப்பு வரை படிப்பு. அதன்பின் ஏறவில்லை. அப்பகுதியில் கள்ளச்சாராயத் தொழிலில் மிகப்பெரிய டீலராக இருந்த சக்ரவர்த்தியிடம் ஒட்டிக்கொண்டான். அவரிடம் தொழில் நேர்த்திகளை கற்றுக் கொண்டவன் அவருடனேயே சேர்ந்து சாராயம் காய்ச்ச தொடங்கினான். பின்னாளில் சக்ரவர்த்தியின் மகளையே திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதர். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், பாண்டிச்சேரி என மற்ற ஊர்களுக்கும் சாராயத் தொழிலை விரிவுபடுத்திக்கொண்டான்.

தொழில் பிரச்சனைகளை சமாளிக்க தனக்கென ஒரு கூலிப்படையை அமர்த்திக் கொண்டான் ஸ்ரீதர். அந்தப் படைதான் இன்றளவும் ஸ்ரீதரின் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம்.  மாவட்டங்களை கடந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்கள் வரை ஸ்ரீதரின் எரிசாராய வியாபாரம் சக்கைபோடு போட்டது. தொழில் வளர வளர வஞ்சனையில்லாமல் காவல்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை செலவு செய்தான் ஸ்ரீதர். காவல்துறையின் மேலதிகாரிகளிடம் நட்பு வைத்துக் கொண்டு வியாபாரத்தை தொடர்ந்ததால், நேர்மையான கீழ்மட்ட அதிகாரிகளால் கூட ஸ்ரீதரை நெருங்க முடியாது. 

நடுங்கும் காஞ்சி !

காஞ்சிபுரம் வட்டாரத்தில் ஸ்ரீதரை பற்றி விசாரித்த போது, “சில வருடங்களுக்கு முன்பு பர்னீச்சர் கடை வைக்கப்போவதாக திமுக பிரமுகர் ஒருவரிடம் இடத்தை வாடகைக்கு எடுத்தான் ஸ்ரீதர். ஆனால் அதில் செம்மரக்கட்டைகளை வைத்து கடத்தல் தொழில் செய்துவந்தான். இந்த வருடத்தில் கடந்த சில வில்லங்கமான வியாபாரங்களின் உதாரணம் இவை. 

வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் 2.50 கோடி மதிப்புள்ள சொத்தை வயதான பெண் ஒருவரை மிரட்டி எழுதிக் கொண்டது, காந்தி ரோட்டில் அன்பழகன் என்பவரின் 8 கோடி மதிப்புள்ள பாத்திரக்கடை, காரை  என்னும் இடத்தில் சுப்பிரமணி என்பவரின் 15 ஏக்கர் நிலம் மிரட்டி வாங்கியது, ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியின் காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து வீடு மற்றும் வேலூரில் உள்ள 4 வீடுகளையும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டது, வேடல் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்வதாக சொல்லி 10 பேரிடம் 2 கோடி மதிப்புள்ள 30 ஏக்கர் நிலத்தையும் வாங்கி இருக்கின்றனர்.

இதில் நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் விற்பனையாகிவிடும். ஸ்ரீதரின் பின்னணி தெரிந்தவர்கள் என்பதால் யாரும் காவல் நிலையம் செல்வதில்லை. அதையும் தாண்டி வழக்கறிஞர் ஒருவரும், டிஎம் சில்க்ஸ் சம்பத் என்பவரும் சிலமாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர். 

இதில் ஸ்ரீதரின் கூட்டாளி திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன் மட்டும் கைது செய்யப்பட்டான். மற்றவர்கள் பெயரில் முதல்தகவல் அறிக்கை மட்டும் பதியப்பட்டது. காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த விஜயகுமார் ஸ்ரீதரை பிடிக்க வேண்டும் என்ற முயற்சிகள் தோல்வி அடைந்தது.  காவல்துறையின் மேல்மட்டத்திலும், கீழ்மட்டத்திலும் உள்ளவர்கள் ஸ்ரீதருடன் நெருக்கம் பாராட்டுவதுதான் இதற்கு காரணம். 

ஸ்ரீதரை பற்றி எந்த தகவலை விசாரித்தாலும், அவரின் ஜாதகத்தையே ஸ்ரீதரின் ஆட்களுக்கு அனுப்பி வைத்துவிடும் விசுவாசிகள் இன்றளவிலும் காவல்துறையில் உள்ளனர். 

கூறுபோடும் கூட்டாளிகள் !

அருள், திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன், தினேஷ், தீனதயாளன், செந்தில் ஆகியோர்தான் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளிகள். ஸ்ரீதர் இவர்களிடம்தான் இன்றளவும் அசைன்மெண்ட் கொடுப்பான். இவர்கள் அந்த இடத்திற்கு சென்று துபாய்ல இருந்து அண்ணன் பேசுறார் என்று சொல்லி போனை கொடுப்பார்கள். ஸ்ரீதர் குரலைக் கேட்டதும் நடுங்கிவிடுவார்கள் எதிர் முனையில் இருப்பவர்கள். இப்படி சட்டத்தின் துணையுடனே துபாயிலிருந்தே இன்றும் ஸ்ரீதர் தனது வேலைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றான். காஞ்சிபுரத்திற்கு வரும் துபாய் கால்களை காவல்துறையினர் ட்ரேஸ் செய்தாலே போதும் குற்றங்களை குறைத்துவிடலாம். 

ஸ்ரீதரின் கூட்டாளிகளான அருள், தசரதன், தினேஷ் உள்ளிட்ட ஸ்ரீதரின் கூட்டாளிகள் பாஸ்போர்ட்டை சோதனையிட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் விவரங்கள் தெரியும். அவர்கள் ஏன் வெளிநாடு சென்று வந்தார்கள். யாரை சந்தித்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். துபாயில் இன்டர்போல் போலீஷாரால் கைதானபோது அங்குள்ள சிறையில் தொலைபேசி வசதி இருப்பதை பயன்படுத்தி அங்கிருந்தே இந்தியாவிற்கு போன் செய்து மிரட்டுவான். ஸ்ரீதருக்கு ஞாபக சக்தி அதிகம். இதனால் தான் உபயோகிக்கும் செல்போன் எண்களை மனதில் வைத்துக் கொண்டு போன் செய்வான்.” என கொட்டி தீர்த்தார்கள்.  

அடிதடியும் அசுர வளர்ச்சியும் !

1999-ல் தொழில் தகராறில் தனக்கு போட்டியாக இருந்த ராமதாஸ் என்பவரை கொலை செய்தான் ஸ்ரீதர். இந்த வழக்கில் ஸ்ரீதருடன் ராஜேந்திரன் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் வழக்கு பதியப்பட்ட இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான் ஸ்ரீதர். 2002ம் ஆண்டில் கணேசன் என்பரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். 

குண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்த ஸ்ரீதர் எதற்கும் பயப்படுவதாக இல்லை. அதுவே அவன் வளர்ச்சிக்கு காரணம். காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு தனக்கு இருந்த தொழில் போட்டியாளர்களை சகட்டுமேனிக்கு வேட்டையாடினான் ஸ்ரீதர். 

2007- ம் ஆண்டுகளில் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி கிருஷ்ணன் ஸ்ரீதருக்கு போட்டியாக களம் இறங்கினான். தொழில் போட்டியில் உருவெடுத்த கிருஷ்ணனை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்து தோல்வி அடைந்தான் ஸ்ரீதர். இறுதிய முயற்சியில் 2010- ல் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டான்.  இந்த கொலைக்கு முக்கிய காரணமாக ஸ்ரீதர் சம்பவத்தின்போது வேலூர் சிறையில் இருந்தான். சிறையில் இருந்தபோது வெளிமாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். தொழில்ரீதியாகவும், திட்டமிடும் இடமாகவும் சிறைச்சாலைகள் அமைந்தன.

2012 -ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன் (எ) நாராயணன் பேருந்துநிலையம் எதிரே துள்ளத்துடிக்க கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திலும் அதே ஆண்டு சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் பயணித்துக் கொண்டிருந்த ரவுடி தேவராஜ் என்பவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்த சம்பவத்திலும் ஸ்ரீதர்தான் பின்புலமாக செயல்பட்டான். 

காஞ்சியை சேர்ந்த ரவுடி தேவராஜின் அண்ணனை சில மாதங்களுக்கு முன் தொழிற்போட்டியில் போட்டுத் தள்ளியிருந்தான் ஸ்ரீதர். இதனால் ஸ்ரீதருக்கு எதிராக சபதம் செய்து அதே வேகத்தில் காஞ்சியில் வளர்ந்துவந்தான். கைதாகி சிறை சென்ற ஒருசமயம் ஸ்ரீதரை போட்டுவிட்டு காஞ்சியை ஆள்வதுதான் தன் இலக்கு என சக கைதியிடம் சொல்லிவைக்க, அன்றே நாள் குறிக்கப்பட்டது தேவராஜிக்கு. விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஒருநாள் செங்குன்றத்தில் முடிந்தது அவன் கதை. அப்போது ஸ்ரீதர் இருந்தது வேலுார் சிறையில். முக்கியமான ஒருவரை முடிக்க நினைத்தால் சட்ட சிக்கலை தவிர்க்க கைதாகி சிறைக்கு சென்றுவிடுவதுதான் ஸ்ரீதர் ஸ்டைல்!

காவல்துறைக்கு கல்தா !

ஸ்ரீதர் மீது 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி, செம்மரம் கடத்தல் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஸ்ரீதரின் க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போன ஒரு சமயம், “முடிச்சிடுங்க“ என எரிச்சல் குரல் வந்தது மேலிடத்திலிருந்து.

2006 ன் மத்தியில் ஸ்ரீதரை என்கவுன்டரில் கொல்லப்போவதாக பரபரப்பபாக பேசப்பட்டது. அந்த முயற்சியில்  சாமர்த்தியமாக தப்பினான் அவன். விரட்டிவந்த தமிழக காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சாதுர்யமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த அவனது கார் நுழைவாயில் கதவை இடித்துத்தள்ளி நின்றது. எதிர்பார்த்தபடி மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாரிடம் கைதாகி சிறைசென்றான்.

இன்றும் தன் இந்த சாதுர்யத்தை நண்பர்களிடம் சொல்லி சிரிப்பான் ஸ்ரீதர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த ஸ்ரீதர், மலேசியாவில் தஞ்சமடைந்தான். அங்கு தலைமறைவாக இருந்தபடியே தனது அடியாட்கள் மூலம் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தான். காவல்துறையின் கோபம் தணிந்த ஒருநாள் மீண்டும் இந்தியா வந்த ஸ்ரீதர் வழக்கம் போல செயல்பட்டான். இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீதரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது காவல்துறை. சில வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தான் ஸ்ரீதர். 

ஒரு கட்டத்தில் சிறையும், தலைமறைவு வாழ்க்கையும் அலுத்ததோ என்னவோ, பொதுவெளியில் உலவ முடிவெடுத்தான். காஞ்சியில் பிரபலமான ஒரு சமூகப் பள்ளிக்கூடத்திற்கு அவர்களே எதிர்பாராத ஒரு தொகையை பள்ளி வளர்ச்சி நிதியாக அளித்து அட்டைபோல் ஒட்டிக்கொண்டான். அவனை கவுரவிக்க அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் அவனை விருந்தனராக அழைக்க அது ரொம்பவே பிடித்துப்போனது ஸ்ரீதருக்கு. பிறகு என்ன, ஆமை கதைதான்... அதன் நிர்வாகிகளை மிரட்டி அதன் அறங்காவலர் குழுவுக்கு தலைவரானான். இது கொஞ்சகாலம்தான். 

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா...ஒரு கட்டப்பஞ்சாயத்திற்கு நேரடியாக சென்றபோது நிலைமை முற்றி வழக்கு பதிவானது அவன்மீது. இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ரீதரை கழட்டிவிட்டது பள்ளி நிர்வாகம். மீண்டும் சிறைவாசம் செல்ல நேரலாம் என்பதோடு தமிழக சிறை ஒன்றில் அவனுக்கான நாள் குறிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வர உயிரைக் காத்துக்கொள்ள வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தான். 

'காஞ்சி டான்' 'காஞ்சி கிங்'

காவல்துறையினர் ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க 'தவறியதால்' நேபாளம் வழியாக துபாய்க்கு சென்றுவிட்டான். ஏமாற்றம் அடைந்த காவல்துறை இன்டர்போல் உதவியுடன் துபாயில் உள்ள ஸ்ரீதரை கைது செய்தனர். 2014ல் காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ஸ்ரீதரை இந்தியா கொண்டுவர முயற்சித்தனர். காஞ்சி மாவட்ட நீதிபதியிடம் பிடி ஆணையும் பெற்றனர். ஆனால் அது செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதனால் துயாய் சிறையில் இருந்து வெளியேறி அங்கேயே சுகபோகமாக வாழ்கிறான் ஸ்ரீதர். 

ஒரு பக்கம் புகார் கொடுக்கவே அஞ்சும் மக்கள், இன்னொடு பக்கம் புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று 'கடமை'யாற்றும் காவல்துறை இதனால் சுகபோகமாக வாழ்கிறான் ஸ்ரீதர். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீதர் ஃபேஸ் புக்கில் தனது படங்களை பதிவிட்டால் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் லைக் கொடுக்கின்றார்கள். இன்னும் சிலர்  'காஞ்சி டான்', 'காஞ்சி கிங்' என்று உருகி கமெண்ட் போடுகின்றனர். 

இதற்கெல்லாம் 'அன்லைக்' போடவேண்டிய காவல்துறை அமைதியாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு வன்மும், கொடுங்குற்றமும் காஞ்சியில் நடக்க காரணம் என்ன? அடுத்த இதழில் அலசுவோம்.

- பா.ஜெயவேல்

thanx-vigatan

0 comments: