Sunday, October 18, 2015

மந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : சேத்தன் சீனு
நடிகை :சார்மி கவுர்
இயக்குனர் :எஸ்.வி.சத்திஷ்
இசை :சுனில் காஸ்யாப்
ஓளிப்பதிவு :ராஜேந்திரா தனிகெள்ளா
தாய், தந்தையரை இழந்த சார்மிக்கு சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. சென்னைக்கு வரும் அவர் தங்க இடம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு கால் டாக்சி டிரைவர், சார்மிக்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் கொடுக்கிறார். அந்த வீட்டில் தங்கியிருக்கும் தணிகெலபரணி மற்றும் அவருடைய மனைவியும் இவளை வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் தங்கிக்கொண்டு வேலைக்கு சென்று வரும் சார்மியை, கொலை செய்ய ஒரு மர்ம கும்பல் சுற்றி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஒருநாள் தனது பள்ளி நண்பரான நாயகன் சேத்தன் சீனுவை பார்க்கிறார். சீனு சென்னையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சார்மியை கொலை செய்ய திட்டமிட்ட மர்ம கும்பல், ஒருநாள் இரவு ஷாப்பிங் செய்துவிட்டு வரும் சார்மியை சுற்றி வளைக்கிறது.

அப்போது, அங்கு வரும் நாயகன் சேத்தன், அந்த கும்பலிடமிருந்து சார்மியை காப்பாற்றுகிறார். பின்னர், அவளுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அவள் தங்கியிருக்கும் வீட்டை பார்த்ததும், சேத்தன் ஆச்சர்யமடைகிறார். பின்னர், அவளை நேராக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, ஒரு பைலை எடுத்து புரட்டி பார்க்கிறார். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சார்மி ஆச்சர்யத்தில் இருக்கிறார். அப்போது, நியூஸ் கேட்டு ஸ்டேஷனுக்கு வரும் நான்கு ரிப்போர்ட்டர்களையும், சார்மியையும் அழைத்துக் கொண்டு, சார்மி தங்கியிருந்த வீட்டுக்கு போகிறார் நாயகன். இவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அந்த வீடு ரொம்பவும் பாழடைந்து போய் கிடக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன் நன்றாக இருந்த வீடு, இப்போது பாழடைந்ததுபோல் இருக்கிறதே என்று ஆச்சரியமடைகிறார் சார்மி.

உள்ளே சென்ற அனைவரும் வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். வெளி தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. கடைசியாக, அந்த வீட்டுக்குள் சென்ற 4 ரிப்போர்ட்டர்களும் கொல்லப்படுகிறார்கள். இப்போது, நாயகன், நாயகி மட்டும் அந்த வீட்டுக்குள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கொலை செய்தது யார்? அந்த வீட்டுக்குள் அப்படி என்ன மர்மம் இருக்கிறது? சார்மியை கொலை செய்ய வந்தவர்கள் யார்? நாயகனும், நாயகியும் அந்த வீட்டுக்குள் இருந்து தப்பித்து வெளிவந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சார்மி, தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் புரிந்து நடித்திருக்கிறார். படம் முழுக்க இவரது முகமே தெரிந்தாலும், போரடிக்கவில்லை. அதேபோல், நடிப்பிலும் சலிப்பு தட்டவில்லை.

நாயகன் சேத்தன் சீனு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து போயிருக்கிறார். நடிப்பும் ஒகே ரகம்தான். வில்லனாக வரும் ராகுல்தேவ் கடைசி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தபோதிலும் நிறைவாக செய்திருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், சார்மியை சுற்றியே கதை நகர்வதால் மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. அவர்களுக்கு பெரிதாக வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

ஒரு திகில் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சத்திஷ். ஆனால், முதற்பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை. அதேபோல், பாழடைந்த வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் திகிலை ஏற்படுத்தவில்லை. மந்த்ரா முந்தைய பாகத்தைவிட இப்படத்தில் திகில் காட்சிகள் குறைவுதான். இருப்பினும், ஓரளவுக்கு படத்தை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர். 

தணிக்கெல்லாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பலம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டுக்குள் நடக்கும்படியே காட்சிப்படுத்தியிருந்தாலும், அதில் கதாபாத்திரங்களை தெளிவாக காட்டியிருக்கிறது இவரது கேமரா. சுனில் காஷ்யப் தனது பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘மந்த்ரா-2’ பயமுறுத்தவில்லை.

ன்றி-மாலைமலர்

0 comments: