Monday, October 26, 2015

10 எண்றதுக்குள்ள-திரை விமர்சனம்:

டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளரான விக்ரம், கார் ஓட்டுவதில் அசகாய சூரர். டிரைவிங் ஸ்கூல் அவருக்குப் பகுதி நேர வேலைதான். உண்மையான வேலை, நிழல் உலக சமாச்சாரங்களுக்கு உதவும் தனி நபர் படை அவர். இவரது ‘திறமை’யைப் பார்த்துவிட்டு நிறைய ‘வேலை’களைக் கொடுக்கிறார் தாஸ் (பசுபதி) என்கிற தாதா. டிரைவிங் ஸ்கூலில் விக்ரமிடம் பயிற்சிபெற வருகிறார் ஷகிலா (சமந்தா).
இன்னொரு பக்கம் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு ஊரில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த 40 பேர் ஆதிக்கச் சாதி யினரால் கொல்லப்படுகிறார்கள். இந்த ஊருக்கு ‘பிரசாதம்’ மறைத்து வைக்கப் பட்ட கார் ஒன்றை ஓட்டிச்சென்று டெலிவரி செய்யும் வேலையை விக்ரமுக்குக் கொடுக்கிறார் பசுபதி. காரில் ‘பிரசாதமாக’ சமந்தா அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியாமலேயே விக்ரம் பறக்கிறார். சமந்தா இருப்பதும் அவர் கடத்திச் செல்லப் படுவதும் ஒரு கட்டத்தில் விக்ரமுக்குத் தெரியவருகிறது. சமந்தா முசோரிக்கு ஏன் கடத்தப்பட்டார், அங்கு என்ன நடக்கிறது ஆகிய கேள்விகளுக்கான பதில்தான் ‘10 எண்றதுக்குள்ள’.
ஹாலிவுட்டின் ‘ஸ்பீட்’, ‘கான் இன் சிக்ஸ்டி செகண்ட்ஸ்’, ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ போன்ற ஆக்‌ஷன் த்ரில்லர் வகைப் படத்தைத் தமிழில் தர வேண்டும் என எண்ணி திரைக்கதையும் காட்சிகளை யும் அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். காட்சியமைப்புகள் பிரமாண்ட மாகவும், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் காணப்படும் ஆக்‌ஷன் காட்சிகளின் சாயலி லும் அமைக்கப்பட்டிருப்பது பார்வை யாளர்களை வாய் பிளக்க வைக்கிறது. ஆனால் இந்த அக்கறையைத் திரைக் கதையில் காட்டவில்லை. பெரிய நட்சத் திரமும் பிரமிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் போதும் என்று நினைத்து விட்டார் போலும். சமந்தா கடத்தப்பட்டதும் வேகமெடுக்கும் திரைக்கதை, ஆந்திரா, அஸ்ஸாம் என்று வழிநெடுகிலும் ஓய்வெடுக்கிறது. ஆங்காங்கே எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும் அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகள் பொறுமையைச் சோதிக்கின்றன.
இடைவேளை நெருங்கும் சமயத்தில் தான் படம் தொடங்கவே செய்கிறது. அது வரை ஏகப்பட்ட ‘பில்ட்-அப்’ காட்சிகள். விக்ரம் அசகாய சூரர் என்பதைக் காட்ட எத்தனை காட்சிகள்! அது போதாதென்று மசாலா பட சட்டப்படி ஹீரோவின் மகிமையைச் சொல்ல ஒரு பாட்டு. ஒரு வழியாகக் கார் கிளம்பி ஆந்திரா போன பிறகு, விக்ரமுக்குத் தெரியாமலேயே காரில் இருக்கும் சமந்தா உள்ளூர் ரவுடிகளால் கடத்தப்படும்போது படம் வேகமெடுக்கும் என்று பார்த்தால் சாவகாசமாகக் குத்தாட்டம் போட்டுப் பொறுமையைச் சோதிக்கிறார்கள். இடை வேளைக்குப் பிறகும் இந்த சாவகாசம் தொடர்கிறது.
சமந்தாவையும் உத்தராகண்டில் நடக்கும் சாதியக் கொலைகளையும் கச்சித மாகத் தொடர்புபடுத்தும் இயக்குநர், சாதியக் கொலைகளின் பின்னணிக் காரணத்தை அழுத்தமாகச் சொல்லியிருக் கலாம். பிரதான வில்லனைக் காட்டிலும் அவர் கொடுக்கும் வேலைகளைச் செய்யும் இரண்டாம் நிலை வில்லன்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு பெண்ணைக் கடத்தி வைத்து சித்ரவதை செய்கிறார். அவரையும் அழைத்துக் கொண்டு முசோரி வரும் அவர், அந்தப் பெண்ணை ஏன் கடத்தினார் என்ற பின்னணியை அப்படியே விட்டுவிடுகிறார் இயக்குநர். இப்படிப் பல காட்சிகளும் பாடல்களும் திரைக்கதைக்கு வெளியே துருத்திக்கொண்டு நிற்கின்றன. படத்தொகுப்பாளரின் கணினியில் டெலிட் பட்டன் வேலைசெய்யவில்லையா?
திருப்பங்கள் எதிலும் அழுத்தமோ நம்பகத்தன்மையோ இல்லை. அறிமுகக் காட்சியில் விக்ரம் காரில் பறந்து வருவதை மன்னித்துவிடலாம். ஆனால் டோல்கேட்டில் தப்பிக்கும் விதம், எந்த ஆயுதமும் இல்லாமல் ஒண்டி ஆளாக மாபெரும் படையை முறியடிப்பது, ஓடும் ரயிலிலிருந்து சமந்தாவைக் கச்சிதமாக ஜீப்பில் தூக்கிப் போடுவது என்று சரம் சரமாகப் பூ சுற்றுகிறார்கள். படு பயங்கர வில்லனாகக் காட்டப்படும் ராகுல் தேவ், விக்ரமின் நோக்கம் தெரிந்த பிறகும் அவரை உயிரோடு விட்டுவைப்பது ஏன் என்று தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கையில் இயந்திரத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் முழிப்பதைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.
விக்ரம் உற்சாகமும் ஆக்‌ஷன் பரபரப்பு மாய் சாகச நாயகனாக வலம் வருகிறார். ஸ்டைலான தோற்றம், அநாயாசமான செயல்பாடுகள், நடனம், சண்டை என எல்லாவற்றிலும் அசத்துகிறார். விக்ரமுக்கு இணையான பாத்திரம் சமந்தாவுக்கு. லூசுப் பெண்ணாக வந்தாலும் உணர்ச்சி களைக் கொட்ட வேண்டிய இடங்களில் நன்றாக நடிக்கிறார். காதலுக்காக உருகு வது, சண்டையில் தூள் பரத்துவது என்று மிரட்டுகிறார். பசுபதி, ராகுல் சிங் ஆகி யோருக்குப் பெரிதாக வேலை இல்லை.
பிடிப்பில்லாத திரைக்கதையைச் சகித்துக்கொள்ள வைத்துவிடுகின்றன ஆக்‌ஷன், சேஸிங் காட்சிகள். பாஸ்கரனின் ஒளிப்பதிவு அபாரம். டி. இமானின் இசை ரசிக்கும்படி இருக்கிறது என்றாலும் பாடல் கள் திரைக்கதையில் ஒட்டவே இல்லை.
தேவையற்ற துருத்தல்களைச் சரி செய்து நம்பகத்தன்மையைக் கூட்டியிருந் தால் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கிடைத்திருக்கும்.

தஹிந்து

0 comments: