Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ள-திரைவிமர்சனம்.

விக்ரம் - சமந்தா இணைந்து நடிக்கும் படம், 'கோலிசோடா' படத்துக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படம், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியாகும் படம் என்ற இந்த காரணங்களே '10 எண்றதுக்குள்ள' படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.
படம் எப்படி?
கதை: ரிஸ்க் எடுத்துப் பயணம் செய்வதில் விருப்பமுடையவர் விக்ரம். முக்கியமான அசைன்மெண்ட் ஒன்றை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால், அது என்ன என்றே முழுமையாக தெரியாது. அந்த அசைன்மென்ட்டை எப்படி? ஏன்? யாருக்காக? ஏற்றுக்கொண்டார்? அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? என்பது மீதிக்கதை.
'ஐ' படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம். ஆனால், விக்ரமுக்கு நடிப்பில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. அலட்டாமல் இல்லாமல் வந்து போகிறார். வசன உச்சரிப்பு, எமோஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று வழக்கம் போல இயல்பாக நடித்திருக்கிறார். ஆனால் விக்ரமுக்கு சவால் தரும் வகையில் கதாபாத்திரம் அமையவில்லை.
சமந்தா கொஞ்சம் ஜெனிலியாவாக மாற முயற்சித்திருக்கிறார் என்பது டயலாக் டெலிவரியில் தெரிய வருகிறது. கோபம், வீரம் என்று எதற்கும் வித்தியாசமில்லாத ரியாக்‌ஷன்கள் தருகிறார்.
ஆக்‌ஷன் படம் என்பதால் ரொமான்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
பசுபதி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், வில்லன்களாக நடித்திருக்கும் ராகுல் தேவ், அபிமன்யு சிங் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
'கோலிசோடா'வில் நடித்த ஏடிஎம் சீதா, பக்கோடா பாண்டி, சாந்தினி ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, சாம் ஆண்டர்சன் உள்ளிட்டோரும் தலைகாட்டி இருக்கிறார்கள்.
'கோலிசோடா' எடுத்த இயக்குநர் விஜய் மில்டனா இப்படி? என்ற எண்ணம் எழாமல் இல்லை.
வட இந்தியா, ஆந்திரா, தமிழ்நாடு, சென்னையின் ஒட்டுமொத்த அழகை பாஸ்கரன் தன் கேமரா கண்களால் கொண்டுவந்திருக்கிறார்.
இமான் இசையில் ஆனாலும் இந்த மயக்கம் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.
ஸ்ரீகர் பிரசாத் பாடல்களுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எமோஷன் காட்சிகளை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம். இப்படி ஏகப்பட்ட லாம்...லாம்... சொல்ல வேண்டி இருக்கிறது.
நல்ல கதைக்களம். ஆனால், திரைக்கதையில் எந்த மெனக்கெடலும் இல்லாததால் படம் விறுவிறுப்பாக இல்லை. திரைக்கதையிலும், படமாக்கிய விதத்திலும் ரொம்பவே திணறி இருக்கிறார்கள். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பண்ண வேண்டிய கமர்ஷியல் பேக்கேஜ் படத்தில், திரைக்கதையில் கோட்டை விட்டதால் படம் நொண்டி அடிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கிளைமாக்ஸ் நெருங்குகையில் வைத்திருக்கும் ட்விஸ்ட் எந்த விதத்திலும் படத்துக்கு கூடுதல் பலத்தைத் தரவில்லை.
மொத்தத்தில் '10 எண்றதுக்குள்ள' ரசிகர்களுக்குப் பத்தவே இல்ல.


நன்றி-தஹிந்து

0 comments: